பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையிலான இருதரப்பு சந்திப்பிற்குப் பிறகு பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் பிரதமர் மோடியுடனான முதல் சந்திப்பு.வெள்ளை மாளிகையில் நடைபெறும் இரு தலைவர்களின் இந்த சந்திப்பை உலக நாடுகளே உற்றுநோக்கி வருகின்றன.இந்தச் சந்திப்பின்போது மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
நேற்று, வாஷிங்டன் டிசியில் உள்ள வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 'ஒன்றாக எங்கள் பயணம்' என்ற புத்தகத்தை பரிசளித்தார். ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் 47 வது அதிபராக அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு இரு தலைவர்களுக்கும் இடையிலான முக்கியத்துவம் வாய்ந்த முதல் சந்திப்பு இது.

இந்த சந்திப்பிற்குப் பிறகு, 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டதற்காக இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதி தஹாவ்வூர் ராணாவை "இந்தியாவில் நீதியை எதிர்கொள்ள" நாடு கடத்துவதற்கு தனது நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கனடா நாட்டு குடிமகனான ராணா, தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பெருநகர தடுப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மும்பையில் நடந்த 26/11 பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சதிகாரர்களில் ஒருவரான பாகிஸ்தான்-அமெரிக்க பயங்கரவாதி டேவிட் கோல்மன் ஹெட்லியுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
இதையும் படிங்க: வங்கதேச விவகாரம்...மோடி கையில் லகானை கொடுத்த டிரம்ப்… இனிதான் வேட்டையே ஆரம்பம்..!
நேற்று பிரதமர் மோடியுடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பேசையில், "உலகின் மோசமான பயங்கரவாதிகளில் ஒருவரையும், மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பான ஒருவரையொருவர் இந்தியாவில் ஒப்படைக்க எங்கள் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதன் மூலம் அவர் இந்தியாவில் நீதியை எதிர்கொள்ள முடியும். எனவே, அவர் நீதியை எதிர்கொள்ள அவர் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட உள்ளார்'' எனத் தெரிவித்தார்

ஜனவரி மாத தொடக்கத்தில், இந்த வழக்கில் ராணாவின் மறுஆய்வு மனுவை நிராகரித்த அமெரிக்க உச்ச நீதிமன்றம், அவரை நாடு கடத்துவதற்கு ஒப்புதல் அளித்தது. ராணாவை விரைவில் நாடு கடத்துவதற்காக அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக இந்தியா கடந்த மாதம் கூறியது.
ராணாவை நாடு கடத்துவதைத் தவிர, பல முக்கிய துறைகளில் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான முக்கிய உறவுகளை விரிவுபடுத்துவதில் ஒரு பெரிய பாய்ச்சலை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பல பில்லியன் டாலர் மதிப்புள்ள இராணுவ விநியோக ஊக்கத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவுக்கு எஃப்-35 போர் விமானங்களை வழங்க அமெரிக்கா வழி வகுத்து வருவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இதுகுறித்து அவர், ''உலகின் பழமையான, மிகப்பெரிய ஜனநாயக நாடுகளுக்கு இடையே ஒரு "சிறப்பு பிணைப்பு" இருக்கிறது. எரிசக்தி, முக்கியமான தொழில்நுட்பங்கள், இணைப்பு போன்ற பல துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இரு தரப்பினரும் முடிவு செய்துள்ளோம்.இந்த ஆண்டு தொடங்கி, இந்தியாவுக்கான இராணுவ விற்பனையை பல பில்லியன் டாலர்கள் அதிகரிப்போம். நாங்கள் இப்போது எஃப்-35 ஸ்டெல்த் போர் விமானத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கான வழியையும் வகுத்து வருகிறோம்.

அமெரிக்காவை இந்தியாவிற்கு எண்ணெய், எரிவாயுவின் முக்கிய சப்ளையராக மாற்றும் எரிசக்தி தொடர்பான ஒப்பந்தத்தை நானும், பிரதமர் மோடியும் எட்டியுள்ளோம் உலகெங்கிலும் உள்ள தீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியாவும், அமெரிக்காவும் "முன்பு இல்லாத அளவுக்கு" இணைந்து செயல்படும். சர்ச்சைக்குரிய வரிவிதிப்பு பிரச்சினையில், அமெரிக்கா ஒரு சமமான போட்டித் துறையை விரும்புகிறது .
லட்சியமான இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தில், உலக அளவில் வரலாற்றில் "மிகப்பெரிய வர்த்தக பாதைகளில்" ஒன்றை உருவாக்க உதவுவதற்கு இரு தரப்பினரும் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளோம். அமெரிக்க அணுசக்தி தொழில்நுட்பங்களை இந்திய சந்தையில் வரவேற்கும் வகையில் இந்தியா தனது சட்டங்களை சீர்திருத்தி வருகிறது'' என டிரம் தெரிவித்தார்.
பிரதமர் மோடி தனது உரையில், ''இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு ஒரு சிறந்த உலகத்தை வடிவமைக்கும். அடுத்த பத்தாண்டுகளுக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பு கட்டமைப்பு தயாரிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி… டிரம்ப் எதிரியா..? நண்பரா..? மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை..!