கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஜிம்களில் (உடற்பயிற்சி கூடங்கள்) ஊக்க மருந்து பயன்படுத்துவதாக போலீசாருக்கு பலவாறு புகார்கள் வந்துள்ளன. இந்த ஊக்க மருந்துகள் எவ்வாறு தமிழகத்திற்குள் ஊருவுகின்றன என கோவை ஐ.ஜி., செந்தில்குமார், டி.ஐ.ஜி., சசிமோகன், கோவை ரூரல் எஸ்.பி., கார்த்திகேயன் ஆகியோர் வாகன சோதனை செய்யும்படி உத்தரவிட்டனர்.
இதை அடுத்து மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமணன் மற்றும் போலீசார் அன்னூர் சாலையில் டேங்க்மேட் அருகே, நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேட்டுப்பாளையம் நோக்கி ஒரு கார் வந்தது. காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில், உள்ளே நிறைய அட்டைப் பெட்டியில் இருந்தன.

அதை திறந்து பார்த்த போது ஊசி மருந்து பாக்ஸ்கள் இருந்தன. இதுகுறித்து விசாரணை செய்த போது, ஜிம்மில் பயிற்சிக்கு பெறும் நபர்கள் போட்டுக் கொள்ளும் ஊக்க ஊசி மருந்துஎன விசாரணையில் தெரியவந்தது. இதை விற்பனை செய்வதற்கான லைசன்ஸ் ஏதும் இவரிடம் இல்லை.
இந்த ஊசி மருந்துகளை ஜிம்களுக்கு விற்பனை செய்ய ஆர்டர் எடுக்க வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து ஈரோடு மூலப்பாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 40) சோலாரைச் சேர்ந்த சங்கர் (வயது 36) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மீனவருக்கு வந்த பாடிபில்டிங் ஆசை.. ஸ்டிராய்டு எடுத்ததால் விபரீதம்.. சிறுநீர் வெளியேறாமல் தவித்தவர் பலி..!

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் கூறியதாவது: செந்தில்குமார் மாநில அளவிலான வெயிட் லிப்ட் பிளேயர் என்பதால் ஈரோட்டில் ஜிம் நடத்தி வருகிறார். இதில் சங்கர் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இவர்கள் ஈரோடு, திருப்பூர், அன்னூர், அவிநாசி, கோவை, மேட்டுப்பாளையம் ஆகிய ஊர்களில் செயல்படும் ஜிம்களுக்கு ஆர்டர் எடுத்து ஊக்க ஊசி மருந்துகளை சப்ளை செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் ஆறு வகையான ஊக்க ஊசி மருந்துகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இந்த மருந்துகள் அனைத்தும் ஆன்லைன் வாயிலாக வாங்கி உள்ளனர்.

இந்த மருந்துகள் டாக்டரின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது. மருந்து சீட்டு இல்லாமல் யாருக்கும் கொடுக்கக் கூடாது. அதையும் மீறி விற்பனை செய்தால் அது சட்டப்படி குற்றமாகும். மேலும் இந்த ஊசி மருந்துகள் அனைத்தும், சான்றிதழ் பெற்ற கம்பெனியிலிருந்து வாங்கப்பட்டதா? அல்லது போலியானதா? என ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருந்தை ஜிம்மில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்கள் பயன்படுத்தும் போது, உடல் வலி ஏற்படாது. அதிகளவு ஊசி போட்டுக் கொண்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

இந்த மருந்துகளை விற்பனை செய்ய இவர்களிடம் எவ்வித லைசென்ஸ் இல்லை. சட்ட விதிமுறைக்கு மாறாக இவர்கள் ஊசி மருந்தை விற்பனை செய்ய கொண்டு வந்ததால், இவர்களை கைது செய்து உள்ளோம். இவர்கள் கொண்டு வந்த 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஊசி மருந்துகளையும், 28 ஆயிரம் ரூபாய் பணம், மூன்று மொபைல் போன்கள், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்கள் மீது இந்திய மெடிக்கல் கவுன்சில் மற்றும் பி.என்.எஸ் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இவ்வாறு மேட்டுப்பாளையம் போலீசார் கூறினர்.
இதையும் படிங்க: பெண் காவலர்கள் குறித்து அவதூறு.. சவுக்கு மீது தொடரப்பட்ட 15 வழக்கு.. கோவை போலீசாருக்கு மாற்றம்..!