திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட பெரும்புகளூர் தெற்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலையன் என்பவரின் மகன் பாலமுருகன். இவருக்கு வயது 52. இவர் கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி செல்வராணி. பாலமுருகன் - செல்வராணி தம்பதிக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.
இவரது மகன் நக்கீரன் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் திருமணம் பேசி நிச்சய்தார்த்தம் செய்யப்பட்டது. நாளை மறுநாள் திருமணம் நடக்க உள்ளது. இதனால் வீடே விழாக்கோலம் பூண்டுள்ளது. தந்தை பாலமுருகன் சொந்தங்களை சந்தித்து பத்திரிகை வைத்து அழைப்பது திருமண வேலைகளை கவனிப்பது என பம்பரமாக சுழன்று கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் பெரும்புகளூர் தெற்கு தெருவை சேர்ந்த மாதவன், அவரது சித்தப்பா முருகையன் ஆகியோருக்கு இடையே முன்பகை இருந்து வந்தது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருவிழாவில் நடைபெற்ற அடிதடி சண்டை காரணமாக இருவரின் உறவில் விரிசல் ஏற்பட்டது. இதுகுறித்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை முருகையனுக்கும், மாதவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்கு வந்த பாலமுருகன் இருவரையும் சமாதானம் செய்ய முயற்சி செய்துள்ளார்.
இதையும் படிங்க: திருவாரூரில் பரபரப்பு.. ரவுடிகள் களையெடுப்பு.. 50 வீடுகளில் போலீஸ் சோதனை.. 5 பேர் அதிரடி கைது..!

தான் திருமணம் வைத்துள்ள சமயத்தில் இப்படி உறவினர்கள் தகராறில் ஈடுபடுவது முறையாக இல்லை என்றும் சமாதானம் பேசி இருவரையும் விலக்கி விட்டுள்ளார். எனினும் அவர்களது வாக்குவாதம் நின்றபாடில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வாக்குவாதம் முற்றி கைகலப்பனது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள துவங்கினர். அப்போது ஆத்திரமடைந்த மாதவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாலமுருகனை விலாவில் குத்தியுள்ளார். எதிர்பாரத இந்த தாக்குதலில் நிலைகுழைந்த பாலமுருகன், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அதி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். தொடர்ந்து பால முருகன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து வந்த உறவினர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனை முன்பு கதறி அழுதனர்.


நாளை மறுநாள் அவரது மகனுக்கு திருமணம் நடக்க உள்ள நிலையில் தந்தை கொலை செய்யப்பட்ட நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நன்னிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். மாதவனை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளையன்.. தாய், மகனுக்கு கத்திக்குத்து.. குலைநடுங்கும் சம்பவம்..!