ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த காவனூர் பகுதியை சேர்ந்தவர் காசி அம்மாள். (வயது 70) இவருக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் காசி அம்மாளின் மகன் குமார் (வயது 50) என்பவருக்கு தேவா (வயது 25) என்ற மகனும் நந்தினி(வயது 23) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் தேவா கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மாற்று சமூகத்தை சார்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
சாதி விட்டு சாதி மாறி திருமணம் செய்து கொண்டதன் காரணமாக காசி அம்மாள் தேவாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பூர்வீக சொத்தாக உள்ள பல லட்ச ரூபாய் மதிப்பிலான வீட்டினை காசி அம்மாள் கல்லூரியில் பயின்று வரும் தனது பேத்தியான நந்தினி பெயருக்கு மாற்றி கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தேவா இன்று காசி அம்மா வீட்டிற்கு சென்று பூர்வீக வீட்டினை தங்கை நந்தினி பெயருக்கு எழுதி வைத்திருப்பதை குறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சாதிமாறி திருமணம் செய்து கொண்ட உனக்கு பூர்வீக சொத்து மட்டும் எதற்கு என பாட்டி காசி அம்மாள் கேட்டதாக கூறப்படுகிறது. இதன் படியே இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை முற்றி வாக்குவாதமாக மாறி உள்ளது.
இதையும் படிங்க: செல்லுமிடம் எல்லாம் சீமானுக்கு ஆப்பு... ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட நாதக நிர்வாகி பரபர அறிப்பு...!

அப்போது காசி அம்மாள், தேவா குறித்தும் அவரது மனைவி குறித்தும் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அப்போது ஆத்திரமடைந்த தேவா, கீழே இருந்த கருங்கற்களை எடுத்து காசி அம்மாள் மீது வீசி தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த காசி அம்மாள் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் காசி அம்மாள் உயிரிழந்ததை அறிந்த தேவா அங்கிருந்து தப்பிச் ஓடி சென்றுள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக திமிரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பெயரில் ராணிப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் இமயவர்மன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். உயிரிழந்த பாட்டி காசி அம்மாள் உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கொலை சம்பவம் குறித்து திமிரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி சென்றுள்ள தேவாவை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பூர்வீக வீடான சொத்தை சகோதரி பெயருக்கு மாற்றிக் கொடுத்த பாட்டியை பேரன் கல்லால் தாக்கி கொலை செய்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இதையும் படிங்க: #Corruption : தமிழகத்தில் சட்டவிரோத மணல் மோசடி: 3 ஆண்டுகளில் ரூ.4,000 கோடி ஊழல்: அம்பலப்படுத்திய ED ஆவணங்கள்..!