'உங்களுக்கு கோபம் வருதுன்னா... இன்னும் 100 முறை ரமலான் வாழ்த்துகளைச் சொல்லிக்கொண்டே இருப்போம்'' என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, ராயப்பேட்டையில், வக்ஃபு வாரிய ஏற்பாட்டில் நடைபெற்ற சிறப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அப்போது பேசிய அவர், ''புனித ரமலான் நோன்பு திறப்பதில் பங்கேற்பதில் உங்கள் அனைவரையும் போல் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். புனித ரமலான் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். ரம்ஜானுக்கு நாம் வாழ்த்து சொல்வதை பார்க்கும்போது பல பேருக்கு கோபம் வருகிறது. அதைப்பற்றி எல்லாம் நமக்கு கவலை இல்லை.

நாம் ரமலானுக்கு வாழ்த்து சொல்வது பலருக்கு கோபம் வருகின்றது என்றால் இன்னும் நூறு முறை அல்ல மீண்டும் மீண்டும் 100 முறை ரமலான் வாழ்த்துக்களை சொல்வோம்... சொல்லிக்கொண்டே இருப்போம். இந்தியாவிலேயே இன்றைக்கு சிறுபான்மை மக்கள் தங்கள் சொந்த வீடு போல கருதும் ஒரு மாநிலம் என்றால் நம்முடைய தமிழ்நாடு என்று நாம் தைரியமாக சொல்லலாம். சிறுபான்மை மக்களுடைய மனதில் பெரும்பான்மை இடத்தைப் பிடித்த ஒரு அரசு என்றால் அது நம்முடைய திராவிட மாடல் அரசுதான்.
இதையும் படிங்க: 'வாரிசு அரசியலே திராவிடக் கொள்கையின் பலம்…' உதயநிதியை ஆஹா… ஓஹோவெனப் புகழும் கி.வீரமணி..!
அதற்கு உங்களிடம் இருக்கக்கூடிய அந்த உணர்வும், மகிழ்ச்சியும், பாசமும்தான். திராவிட இயக்கத்திற்கும், இஸ்லாமிய மக்களுக்குமான உணர்வு இன்று, நேற்று தொடங்கிய உறவு கிடையாது. பெரியவர் மறைந்த கண்ணியமிக்க காயிதே மில்லத் காலத்தில் இருந்தே திராவிட இயக்கம், இஸ்லாமிய மக்களான உங்களுடைய அன்பை பெற்று நடைபெற்று வருகிறது. குறிப்பாக கலைஞர், காயிதே மில்லத் மீது சிறந்த மரியாதையும், அதேபோல் காயிதே மில்லத், கலைஞர் மீது நண்பர்களாக, உற்ற தோழர்களாக இருந்துள்ளனர்.

இதை ஏன் நான் இங்கு சொல்கிறேன் என்றால் காயிதே மில்லத் ஒரு காலத்தில் உடல் நலம் சரியில்லாமல் இருந்தபோது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கலைஞர் அவர்கள் காயிதே மில்லத்தை அப்போதுஉடல் நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அங்கே கலைஞருடைய கைகளைப் பற்றி கொண்ட காயிதே மில்லத், ''நீங்கள் இஸ்லாமிய மக்களுக்கு நிறைய நல்லது செய்து கொண்டு இருக்கிறீர்கள். இந்த நன்மைகளுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது'' என்று காயிதே மில்லத், கலைஞருடைய கையை பிடித்துக்கொண்டு சொல்லி இருக்கிறார்.
அந்த அளவுக்கு கலைஞர் இஸ்லாமிய மக்கள் உடைய நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். இன்றைக்கு கலைஞரின் வழியில் நமது முதலமைச்சரும் இஸ்லாமிய பெருமக்களுக்கு அனைத்து வகையிலும் துணை நிற்கிறார். நம்முடைய கழக அரசு ஆட்சிக்கு வந்ததுமே முதலில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்று முதன் முதலில் தீர்மானம் நிறைவேற்றியது நமது முதலமைச்சர்தான். குடியுரிமை திருத்த சட்டம் அல்ல, ஒன்றிய அரசு சிறுபான்மை மக்களுக்கு எதிராக என்னென்ன செய்யலாம்? என்று தொடர்ந்து திட்டம் போட்டு ஒவ்வொரு திட்டமாக செயல்படுத்திக் கொண்டு வருகிறது.

குறிப்பாக முத்தலாக் சட்டம், என்ஆர்சி... இப்படி வருடா வருடம் ஏதாவது ஒரு சிக்கலை ஏற்படுத்தக்கூடிய சிறுபான்மை மக்களை நெருக்கடிக்கு ஆளாக்குகின்ற வேலையை ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து கொண்டு வருகிறது. ஆனால் அதையெல்லாம் இந்தியாவிலேயே கடுமையாக எதிர்க்கின்ற ஒரு மாநிலம், ஒரு இயக்கம், ஒரு அரசு என்றால் அது திராவிட முன்னேற்ற கழகம் தான், நமது முதலமைச்சர்தான். குறிப்பாக இன்றைக்கு ஒரு பிரச்சனையை புதிதாக கையில் எடுத்து வந்திருக்கிறார்கள் அதுதான் வக்பு வாரிய திருத்த மசோதா. அந்த மசோதாவை நடைமுறைப்படுத்த முயன்று கொண்டு இருக்கிறார்கள்.
அந்த திருத்தம் மட்டும் அமலுக்கு வந்து விட்டது என்றால், உங்களுடைய சொத்துக்கள் அபகரிக்கப்படும் அபாயம் ஏற்படும். அது மட்டுமல்ல, வக்பு வாரியங்களில் ஒன்றிய அரசு சொல்கிறவர்களை நியமிக்க வேண்டும் என்று இந்த மசோதா குறிப்பிடுகிறது. குறிப்பாக முஸ்லிம் அல்லாத நபர்களையும் அந்த வாரிய உறுப்பினர்களாக சேர்க்கக்கூடிய சூழல் உருவாகி இருக்கிறது. அதனால்தான் நம்முடைய தலைவர் இந்த சட்டத்தை தொடக்கத்தில் இருந்தே கடுமையாக எதிர்த்து வருகிறார்.

இஸ்லாமிய மக்களுக்கு எந்த அளவுக்கு திட்டங்களை நமது திமுக அரசு செயல்படுத்து வருகிறது என்பதை நான் இங்கு நினைவு கூறுகிறேன். இந்நேரத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் சொன்ன ஒரு செய்தியை நான் நினைவு கூற விரும்புகிறேன். இஸ்லாமியர்களுக்கு 3.5% இட ஒதுக்கீடு தந்ததற்காக கலைஞருக்கு நன்றி அறிவிப்பு விழாவை இஸ்லாமிய பெருமக்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போது நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசிய கலைஞர் ''இங்கே நீங்கள் எல்லாம் எனக்கு நன்றி தெரிவித்தீர்கள். நீங்கள் எனக்கு நன்றி சொல்லி என்னை உங்களிடம் இருந்து பிரித்து விடாதீர்கள். நான் உங்களின் ஒருவனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் என்றுமே உங்களை சார்ந்தவன்தான்'' என்று கலைஞர் அவர்கள் உரிமையோடு சொன்னார்.
அதே உணர்வோடு தான் நமது முதலமைச்சரும் இன்றைக்கு இவ்வளவு திட்டங்களை இஸ்லாமிய மக்களுக்காக தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டு வருகிறார். இப்படி நமது திராவிட மாடல் அரசு இன்றைக்கும் இஸ்லாமிய மக்களுக்கு உற்ற துணையாக இருக்கிறது. நீங்களும் இந்த அரசுக்கு உற்ற துணையாக இருக்க வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு கருத்துத் தெரிவித்துள்ள பொதுமக்கள் சிலர், ''இத்தனை அக்கறை ஏன் இந்துக்கள் நிகழ்ச்சிக்கு மட்டும் இல்லை. கும்பமேளா நிகழ்விற்கு ஒரு ஏற்பாடு கூட செய்து தரவில்லை இந்த திராவிட மாடல் அரசு? அது தான் ஓட்டு பிச்சை அரசியல் என தோன்றுகிறது. இந்துக்கள் பண்டிகையை மட்டும் புறக்கணித்து விட்டு, ஓட்டு வங்கி அரசியல் செய்யும் மதவெறி திமுகவின் உண்மை முகம் மக்களுக்கு தெரியும்'' எனத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'ஆண்மை என்றால் வீரம்...' அமைச்சர் விட்ட வார்த்தை - திருத்திய துணை முதல்வர் உதயநிதி...!