2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் 'இண்டியா' கூட்டணி என்கிற பெயரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து போட்டியிட்டன. ஆனால், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு 'இண்டியா' கூட்டணித் தலைவர்கள் கூட்டம் கூட்டப்படவில்லை. மேலும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதேபோல மகாராஷ்டிராவில் சிவசேனா (உத்தவ்) உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. எனவே, இண்டியா கூட்டணி காலாவதியாகி வருவதாக பாஜக கிண்டலடித்து வருகிறது.
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) தலைவர் சரத் பவார் மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தேசிய பிரச்சினை, மக்களவைத் தேர்தலை முன்வைத்துதான் இண்டியா கூட்டணி அமைக்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்கள் குறித்து நாங்கள் எதுவும் விவாதித்ததில்லை. மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து போட்டியிடுவதா, தனித்தனியாக போட்டியிடுவதா என்று ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும். கூட்டணிக்குள் ஒவ்வொருவரும் தொடர்பில்தான் இருக்கிறோம்.
டெல்லி பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை நாம் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவளிக்க வேண்டம் என்பதே எனது கருத்து." என்று சரத் பவார் தெரிவித்தார். மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் மகா விகாஸ் அகாடி தோல்வியடைந்ததை அடுத்து சிவசேனா தனி ஆவர்த்தனம் செய்ய தொடங்கியிருக்கிறது. இந்தச் சூழலில் மகாராஷ்டிராவில் கூட்டணி கட்சிகள் தொடர்பில்தான் இருக்கின்றன என்று சரத் பவார் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: இந்தியா கூட்டணியை அழிக்கிறதா காங்கிரஸ்?
இதையும் படிங்க: ரூ.40 லட்சம் வேணும்.. தேர்தல் செலவுக்கு மக்களை எதிர்பார்க்கும் டெல்லி முதல்வர்!