தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக்கா குலசேகர நல்லூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக சுமார் 465 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக அப்பகுதியில் உள்ள விளை நிலங்களை அரசு கையகப்படுத்தி, தொடர்புடைய நில உரிமையாளருக்கு பணம் பட்டுவாடா செய்தது.
அதன்படி கும்பகோணம் ராமசாமி கோவில் தெருவை சேர்ந்த ஆடிட்டர் ரவிச்சந்திரனுக்கு (வயது 68) சொந்தமான 80 சென்ட் நிலமும் குலசேகர நல்லூரில் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்தில் 30 தேக்கு மரங்களை ரவிச்சந்திரன் வளர்த்துள்ளார். நிலம் கையகப்படுதப்பட்ட நிலையில், இந்த நிலத்தில் வளர்ந்து இருந்த 30 தேக்கு மரங்களை ரவிச்சந்திரன் கடந்த 2020 ஆம் ஆண்டு வெட்டி கடத்த முயற்சித்துள்ளார்.

மரங்களை வாகனத்தில் ஏற்றி கொண்டு இருந்த போது, இதை அறிந்த நீர்வளத்துறை அதிகாரிகள் உடனே வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து 3 டன் எடையுள்ள 207 தேக்கு மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். அவற்றை கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக பந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: எதற்காக அனைத்துக்கட்சிக் கூட்டம்..? கேள்வி எழுப்பிய இபிஎஸ்.. உதயநிதி சொன்ன நீட் விலக்கு ரகசியம் எங்கே..?

இதை அறிந்த அரியலூர் மாவட்டம் திருமாந்துறையை சேர்ந்தவரும் தற்போது தர்மபுரி மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான புலனாய்வு பிரிவில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவருமான நெப்போலியன் (வயது 45) ரவிச்சந்திரனிடம் பேசியுள்ளார். அப்போது தான் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் எனவும் கலெக்டர் ஒருவரின் உறவினர் எனவும் வழக்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்க சிபாரிசு செய்வதாகவும் அதற்கு ரூபாய் 1 கோடி தர வேண்டும் எனவும் பேரம் பேசி உள்ளார்.

இதையடுத்து ரவிச்சந்திரனிடம் இருந்து 1 கோடி ரூபாயை நெப்போலியன் வாங்கியுள்ளார். இதன் பின்னரும் தொடர்ந்து ரவிச்சந்திரனிடம் நெப்போலியன் பணம் கேட்டு மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ரவிச்சந்திரன் தஞ்சை மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் எஸ்பி ராஜாராம் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியனை நேற்று கைது செய்தனர்.
இதையும் படிங்க: பிரபல குணச்சித்திர நடிகர் ரவிக்குமார் மறைவு..! அதிர்ச்சியில் திரையுலகம்..!