1970 ஆம் ஆண்டு ‘துக்ளக்’ பத்திரிக்கை தொடங்கப்பட்டபோது கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி தொடங்கி இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்த நேரம். ஆட்சி மீது லேசான விமர்சனம் வைக்கப்பட்ட நேரம். கருணாநிதி எம்ஜிஆர் ஒன்றாக இருந்த நேரம். இந்திரா காங்கிரஸ் உதயமாகி பழைய காங்கிரஸ் என தனித்தனியாக இருந்த நேரம். பல நிகழ்வுகளுக்கு மத்தியில் அன்று இருந்த ஊடகம் என்றால் அச்சு ஊடகம் மட்டுமே என்கிற நிலையில் ’துக்ளக்’ பத்திரிக்கையை சோ ஆரம்பித்தார்.

பத்திரிக்கை ஆரம்பிக்கும்போது எனக்கு ஒரு துளி அளவுகூட எதுவும் தெரியாத நிலையில் 5 ரூபாய் பெட் கட்டியதால் 3 வாரத்தில் ஆரம்பித்து 1970 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியானது துக்ளக் என்று சோ கூறியுள்ளார். என்ன எழுத போகிறீர்கள் என்கிற கேள்விக்கு “எவற்றையெல்லாம் பார்த்து எனக்குச் சிரிப்பு வருகிறதோ அவற்றையெல்லம் பார்த்து மக்களையும் சிரிக்க வைக்க முயலப் போகிறேன். I am going to look around me and also make my readers look around themselves” என சோ பதிலளித்துள்ளார்.
இதையும் படிங்க: ’சிலர் கட்சியை மீறி தனது லாபத்துக்காக செயல்படுகிறார்கள்’.. அண்ணாமலையை வைத்துக்கொண்டே கலாய்த்த குருமூர்த்தி
அப்படிப்பட்ட ’சோ’ திரைத்துறையில் இயங்கியதால் பழகாத முன்னணி நடிகர்கள், அரசியல்வாதிகளே இல்லை என்று சொல்லலாம். காமராஜர், எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா என அனைத்து முதல்வர்களிடமும் நெருக்கமாக பழகியவர், ஜெயலலிதாவின், ரஜினிகாந்தின் வழி காட்டி எம்ஜிஆர், கருணாநிதியின் நெருங்கிய நண்பர், சிவாஜி, கண்ணதாசன் உள்ளிட்ட பிரபலங்களின் நண்பர் என்றால் அது மிகையாகாது.

ஆரம்பித்த சில ஆண்டுகளில் 1971 சட்டமன்ற தேர்தல் திமுகவின் பெருவெற்றி. திமுகவுக்குள் வாரிசு, கட்சியை கருணாநிதி கையில் எடுத்தது, எம்ஜிஆர் வெளியேற்றம், காமராஜர் தலைமையில் பழைய காங்கிரஸ், இந்திரா தலைமையில் காங்கிரஸ் என பல நிகழ்வுகள், எமர்ஜென்சி நேரத்தில் கடுமையான பாதிப்புகளை மீறி துக்ளக் பத்திரிக்கை வெளியாகி அரசியலுக்கு ஒரு பத்திரிக்கை என்றால் அது துக்ளக் என பிரபலமானது.

துக்ளக் அரசியல் பேசும், சட்டையர் பண்ணும் அனைவரையும் விமர்சிக்கும், அவதூறு செய்யாது. நண்பர்களான எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என அனைவரையும் சோ விமர்சித்துள்ளார். அப்படிப்பட்ட சோ தமிழக அரசியலில் முக்கிய தலைவர்கள் ஆலோசனை கேட்டபோது கூறியுள்ளார். ஆனால் ஒரு தலைவர் சொன்னதை அடுத்த தலைவரிடம் சொன்னதில்லை. வெளியிலும் சொன்னதில்லை.

அதேபோல் வலதுசாரி சித்தாந்தத்தை கொண்டிருந்தாலும், மாற்று கருத்துகளை அங்கிகரித்துள்ளார். இடதுசாரிகள் குறித்த அவரது பார்வை நேர்மையாக இருந்தது. அதனால் தான் அனைவராலும் சோ மதிக்கப்பட்டார். 1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதன்முதலாக ஆட்சிக்கு வந்தபோது அவரது ஆட்சியை ஆரம்பத்தில் ஆதரித்த சோ பின்னர் கடுமையாக எதிர்த்தார். 1996 ஆம் ஆண்டு திமுக தலைமையில் ஆட்சி அமைய தனது ஆலோசனைகளை எப்போதும் கேட்கும் ரஜினிகாந்தை வாய்ஸ் கொடுக்க வைத்தார்.

1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சி சரியில்லாமல் போக அப்போதும் எதிர்த்தார். தொடர்ந்து தனக்கான அரசியலை அவர் விமர்சனமாக வைத்து வந்தார். அதே நேரம் அர்சியல் தலைவர்களிடம் தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டி வந்தார். 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியை வீழ்த்த விஜயகாந்துடன் கூட்டு சேர சோ அழுத்தம் கொடுத்தார். ஜெயலலிதாவுக்கு ஏற்பு இல்லை என்றாலும் தனது அரசியல் வழிகாட்டி, சகோதரராக பாவிக்கும் சோ சொல்வதை கேட்டார், அதிமுக ஆட்சி அமைந்தது.
கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி சோவின் பரம் சிஷ்யன். அவர் என்ன சொன்னாலும் கேட்பார். சோ இருக்கும் வரை ரஜினிகாந்தை அரசியலுக்கு வரவேண்டாம் என்று தடுத்து வந்தார். சோ மறைவுக்கு பின் ரஜினிகாந்த் தவறான முடிவெடுத்தார் ஆனால் சுதாரித்துக்கொண்டார். மோடியை தமிழகத்தில் பெருமளவில் கொண்டு சேர்த்தது சோ. குஜராத் மாடல் அரசு என அவர் எழுதாத கட்டுரையே இல்லை. அந்த அளவுக்கு மோடிக்கு ஆதரவாக இருந்தார். இவ்வளவு இருந்தும் ஒரு இடத்தில் கூட அவரது அதிகாரத்தை காட்டியதில்லை.

சோ தனது துக்ளக் ஆரம்பித்த பொங்கல் அன்று ஆண்டு விழாவை நடத்துவார். அதில் பங்கேற்காத பிரபலங்களே இல்லை எனலாம். அந்த நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட் தலைவர்கள், இஸ்லாமிய இயக்க தலைவர்கள், வலதுசாரி தலைவர்களை அழைத்து பேச வைப்பார். அப்படி ஒரு தடவை இஸ்லமிய இயக்க தலைவர் பேச எழுந்தபோது கீழே இருந்தவர்கள் கூச்சலிட்டபோது துக்ளக் வாசகர்கள் அடுத்தவர் கருத்தை காதுகொடுத்து கேட்க வேண்டும். கேட்க இயலாதவர்கள் தாராளமாக வெளியேறலாம் என்று மைக்கில் அறிவித்தார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது தான் பாஜக ஆதரவாளர் என்றாலும், அத்வானியின் நெருங்கிய நண்பர் என்றாலும் அதை ஏற்றுக்கொள்ளாமல் தன் இதழை கருப்பு பக்கமாக கொண்டு வந்தார். அத்தகைய சிறப்பு மிக்க நீண்ட அனுபவம் மிக்க சோ பல கட்சி தலைவர்களுக்கு இலவசமாக ஆலோசனை வழங்கியுள்ளார். ஆனால் அவர்களை ஒன்றுக்கும் உதவாத தலைவர்கள் என்று காட்டமாக கூறியதில்லை. ஆனால் கிண்டல் செய்வார்.

சோ மறைவுக்கு பிறகு துக்ளக் ஆசிரியராக குருமூர்த்தி பதவி ஏற்றப்பின் இரண்டு முக்கியமான விஷயங்கள் துக்ளக்கில் மிஸ் ஆனது. அது துக்ளக்கின் அடிநாதமான நகைச்சுவை கலந்த சட்டையர் மற்றொன்று சார்பில்லாமல் வரும் கட்டுரைகள் மறைந்து வலதுசாரி பத்திரிக்கையாக மாறியது. கார்ட்டூனுக்கு பேர்போன துக்ளக் பின்னர் கார்ட்டூன் போட்டு கொஞ்சம் சிரிங்க என கெஞ்சும் அளவுக்கு போனது சோகம்.
துக்ளக் ஆசிரியராக பொறுப்பேற்ற குருமூர்த்து மிகச்சிறந்த அறிவாளி, பொருளாதாரம் அறிந்தவர். ஆனால் மனதில் அரசியல்வாதியாக இருந்துக்கொண்டு பத்திரிக்கை ஆசிரியராக அதுவும் சோ முன்னுதாரணம் காட்டிய பத்திரிக்கையில் சார்பு எடுத்தது துக்ளக்கின் மாண்பை குறைத்தது எனலாம். வழக்கமான வலது சாரி எண்ணம் கொண்ட வாசகர்கள், குருமூர்த்தியின் எழுத்தில் ஆர்வம் கொண்டவர்கள் வாங்குவார்கள். ஆனால் சோ அங்கு மிஸ் ஆகிவிட்டார் என்பது வெளிப்படை.

துக்ளக் ஆசிரியர் என்பதாலேயே தன்னை சோ போன்று கருதிக்கொண்டு ஆண்டு விழாவில் குருமூர்த்தி பதில் அளிக்கிறார், ஆனால் முழுவதும் அதில் மற்றவர்கள் மீது வன்மத்தை கக்குவதும், பாஜக ஆதரவும் மட்டுமே இருப்பதை காணலாம். சாக்கடை நீர் என சசிகலாவை கடந்த முறை மறைமுகமாக விமர்சித்தவர், இம்முறை எடப்பாடி இல்லாத அதிமுக வேண்டும். எடப்பாடி போல் ஒரு நோக்கம் இல்லா தலைவரை பார்த்ததில்லை என்கிறார்.

ஓபிஎஸ்சுக்கு ஆலோசகராக இருந்தேன், அதிமுக தலைவர்கள் ஆண்மையற்றவர்களாக இருக்கின்றனர் என பேசியவர். சோ இதுபோல் பேச மாட்டார். அண்ணாமலை தவறு செய்கிறார் என்றால் சோ தைரியமாக சொல்வார். ஆனால் குருமூர்த்தி மறைமுகமாக சொல்ல துணிவில்லாமல் பதிவு செய்கிறார். எடப்பாடி ஒரு தலைவரே இல்லை என்கிற அளவுக்கு பதிவு செய்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் 2000 க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், 90 சதவீத மாவட்ட செயலாளர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
ஆனால் இவரை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட ஓபிஎஸ் சுயேட்சையாக பலாப்பழ சின்னத்தில் போட்டியிடும் அளவுக்கு நிர்கதியாக நிற்கிறார். என்னதான் துக்ளக் பத்திரிக்கையை சோ இவரிடம் ஒப்படைத்து விட்டு சென்றாலும் இவர் சோ ஆகிவிட முடியாது. சோ வேற ரகம் இவர் அந்த இடத்தை அடையும் முயற்சியைக்கூட எடுக்காததுதான் உண்மை. பாஜக, அதிமுக உறவு முறியும் நிலைக்கு ஆளானபோது அதை தடுக்க எந்தவித முயற்சியும் எடுக்காமல் சேர்வது கட்டாயம் ஆனால் எடப்பாடி இல்லாமல் என்று பேசுவது யதார்த்தத்துக்கு பொருந்தா ஒன்று. பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க: ’அதிமுக - பாஜக கூட்டணி அமையணும் , ஆனால் எடப்பாடி லாயக்கில்லை’- குருமூர்த்தி ...என்னங்க சார் உங்க நியாயம்?