தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஜிம் ட்ரெய்னரின் மர்ம மரணம் ஆணவக்கொலையாக இருக்குமோ என அவரது பெற்றோரும், உறவினர்களும் சந்தேகத்தை கிளப்பியுள்ளனர்.
பொள்ளாச்சியை அடுத்த ஆலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பழனிச்சாமி - பேபி. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பழனிச்சாமியின் மூத்த மகன் கிரி பிரசாத் (23) டிகிரி முடித்துவிட்டு, உடற்பயிற்சி கூடம் ஒன்றில்ன்பயிற்றுனராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த நவம்பர் 10ஆம் தேதி சடையம் பாளையம் அருகில் உறவினர் வீட்டுக்கு சென்ற கிரி பிரசாத் ரயிலில் அடிபட்டு இறந்துவிட்டதாக தந்தை பழனிச்சாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மகனின் உடலை வாங்க பழனிச்சாமி மற்றும் உறவினர்கள் சென்றபோது உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயங்களை பார்த்ததாக தெரிகிறது.இதனால் கிரி பிரசாத்தின் மரணம் குறித்த சந்தேகம் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. மேலும் தனது மகனின் உபயோகத்தில் இருந்த செல்போன் ஒன்று காணாமல் போனதாகவும்,மற்றொரு செல்போனுக்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் கிரி பிரசாத் இறப்பதற்கு முன்பு நூற்றுக்கு மேற்பட்ட தெரியாத பேச எண்களில் இருந்து அழைப்புகள் வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: காலிஸ்தானி சீக்கிய அமைப்பு மீது கடும் நடவடிக்கை: துளசி கப்பார்டிடம் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்..!

இதனை தொடர்ந்து தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பழனிச்சாமி புகார் அளித்தார்.இதுகுறித்து பழனி ரயில்வே காவல்துறையினரிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கிரி பிரசாத்தின் தந்தை பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார்.மேலும் தனது மகன் இறந்து நீண்ட நாட்கள் ஆகியும் பிரேத பரிசோதனை அறிக்கை பழனி காவல்துறையினர் தர மறுத்ததால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பிரேத பரிசோதனை அறிக்கையும் பெற்றுள்ளார்.

தனது மகன் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததால் ஆணவக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கருதி,தனது மகன் கொலைகான காரணத்தை தெரியப்படுத்த வேண்டும் எனவும் கூறி இன்று கிரி பிரசாத்தின் தந்தை உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.ரயில்வே காவல்துறையினரிடமிருந்து மாநில காவல்துறையினரிடம் இந்த வழக்கை மாற்றி உரிய முறையில் தனது மகனின் இறப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் என பழனிச்சாமி தெரிவித்தார்
இதையும் படிங்க: 2 கிராம் தோடுக்காக மூதாட்டி கொலை.. குடிபோதையில் இளைஞர்கள் வெறிச்செயல்.. குற்றவாளிகளை கச்சிதமாக பிடித்த போலீஸ்..