ஒசூரில் கடந்த 2 மாதங்களாக பதுங்கியிருந்த கேரளா நக்சல் அமைப்பு தலைவன் கைது.
கேரளா மாநிலத்தின் நக்சல் இயக்கத்தின் கடைசி தலைவராக செயல்பட்ட, சந்தோஷ் என்பவரை ஒசூரில், கேரளா போலீசார் கைது செய்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே ஆழியாறு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் கடந்த 2014ம் ஆண்டு முதல் வீட்டை விட்டு வெளியேறி, நக்சல் இயக்கத்தில் சேர்ந்து செயலாற்றி வந்தார்.
இதையும் படிங்க: பைக் திருட்டு.. பெட்ரோல் இல்லாமல் பாதியில் நின்றதால் மக்களிடம் சிக்கிக்கொண்ட திருடர்கள்..
அண்மையில் கைது செய்யப்பட்ட நக்சல் இயக்க தலைவர்களான சி.பி. மொய்தீன், சோமன் ஆகியவர்களுடன், நெருங்கிய நபராக இருந்ததுடன், கேரளாவின் கபினி தள நக்சல் இயக்க தலைவராக செயல்பட்டு வந்தார்.

வயநாடு மாவட்டம் தலப்புழா பகுதியில், கன்னி வெடிகள் வைத்த சம்பவம் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட தமிழகம் மற்றும் கேரளாவில் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் நக்சல் இயக்கத்தின் அனைத்து தலைவர்களும், கைது செய்யப்பட்ட நிலையில் சந்தோஷ் தமிழகத்திற்குள் இடம் பெயர்ந்துள்ளதாக, கேரளாவின் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து கேரளா மாநில நக்சல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், தமிழக உளவுத்துறை போலீசார் இணைந்து நக்சல் சந்தோஷ் நடவடிக்கைகள் குறித்து, தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.இந்நிலையில் தமிழக எல்லையான ஓசூர் மாநகராட்சி ராம் நகர் பகுதியில் சந்தோஷ் 2 மாதங்களாக, சந்தேகப்படாத வகையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வசித்து வந்தது தெரியவந்துள்ளது, மறைந்திருந்த நக்சல் சந்தோஷை தமிழக போலீசார் உதவியுடன் கேரள மாநில நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அவனை கேரளாவுக்கு அழைத்து சென்றனர். பின்னர், இன்று (பிப்.,22) மதியம் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விரைவில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தேசிய புலனாய்வுத்துறை போலீசாரும் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் கேரளா மாநிலத்தில் முகாமிட்டிருந்த, நக்சல்களின் கடைசி தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்..!