மதுரை பீபிகுளத்தைச் சேர்ந்தவர் சுந்தரராமன். வயது 56. மதுரையில் பிரபல தொழிலதிபரும் மில் ஓனரின் மகனும் ஆன சுந்தர ராமன் திருமணம் செய்து கொள்ளாத நிலையில், தனியாக வசித்து வருகிறார். மதுரை பைபாஸ் சாலையில் ஆட்டோமொபைல் உபகரணங்கள் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு மதுரை, திண்டுக்கல் ஆகிய பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான சொத்துகள் உள்ளது.
இந்த நிலையில் மதுரையை சேர்ந்த சிலர் திண்டுக்கல்லில் உள்ள சுந்தரராமனின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 6 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்தனர். அது தன்னுடைய நிலம் எனக்கூறி ஆவணங்களுடன் ஐகோர்ட் மதுரை கிளையில், சுந்தரராமன் வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்துள்ளது.

சென்ற மாதம் விசாரணைக்கு வந்தபோது, கோர்ட் வளாகத்திலேயே சுந்தரராமனுக்கு எதிர்தரப்பினர் மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுந்தரின் எதிர்தரப்பினர் நிலம் தொடர்பாக கடந்த 14 ஆம் தேதியன்று பீ.பி.குளம் பகுதியில் உள்ள வீட்டிற்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சுந்தருடன் அவரது கடை ஊழியர்கள் இருந்து உள்ளனர்.
அப்போது பேச்சுவார்த்தைக்காக அழைத்து செல்வதாக கூறி சுந்தரை 15க்கும் மேற்பட்ட நபர்கள் காரில் அழைத்து சென்றுள்ளனர். அதன் பின்னர் இரவு வெகு நேரம் ஆகியும் சுந்தர் வீடு திரும்பாத நிலையில் சுந்தரை காணவில்லை எனவும், சிலர் காரில் கடத்திச் சென்றதாகவும் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படைகளை அமைத்து கடத்தப்பட்ட சுந்தரை தேட தொடங்கினர்.
இதையும் படிங்க: 1836 ஆம் ஆண்டு காலத்து சுங்கம்.. மதுரையில் கிடைத்த முதல் கல்வெட்டு..!

சுந்தரின் வீட்டின் அருகேயுள்ள சிசிடிவி கேமிராக்கள் மற்றும் சுந்தரை அழைத்து சென்ற வாகன பதிவெண்கள் குறித்து விசாரணை நடத்தினர். தொடர் விசாரணைக்கு பின் கடத்தலுக்கு உதவியதாக நேற்று முன்தினம் ஐந்து பேரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.நேற்று நான்கு பேரை கைது செய்தனர். தற்போது வரை 9 பேரை தல்லாகுளம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால் அவர்கள் பெயர், விபரங்களை போலீசார் வெளியிடவில்லை. மேலும் கடத்தலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 6 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தியவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சுந்தரை கடத்திய நபர்களின் செல்போன் எண் வடமாநில பகுதியில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சுந்தரை மீட்பதற்காக தனிப்படை காவல்துறையினர் வடமாநிலத்துக்கு விரைந்துள்ளனர். 5 நாட்களாகியும் சுந்தரை மீட்க முடியாத நிலையில் அவரது உறவினர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சுந்தர் நில விற்பனை விவகாரம் காரணமாகவோ? பணத்திற்காகாவோ? கடத்தப்பட்டாரா? என்பது குறித்து மதுரை தல்லாகுளம் தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் கூறுகையில் விரைவில் சுந்தரராமன் மீட்கப்படுவார். அப்போது தான் அவர் கடத்தப்பட்டதற்கான உண்மை காரணம், இதில் சம்பந்தப்பட்டிருக்கும் குற்றவாளிகள் குறித்தும் தெரியவரும் என்றனர்.
இதையும் படிங்க: போலி உணவு பாதுகாப்பு அதிகாரி அட்ராசிட்டி.. பழனி, திண்டுக்கலில் வசூல் வேட்டை.. செல்போன் பேச்சால் சிக்கியது எப்படி?