விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் 2 நாட்களுக்கு, சாலையோரம் ஓய்வு எடுத்து கொண்டு இருந்த 3 லாரி டிரைவர்களை ஆறு பேர் கொண்ட கும்பல் தாக்கியது. கத்தியால் வெட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் மற்றும் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர். அப்போது கொள்ளை கும்பலுக்கு தலைவனான செயல்பட்டது புதுச்சேரி திலாசுப்பேட்டை வீமன்நகரை சேர்ந்த கோபி மகன் விஜய் என்ற மொட்டை விஜய் (வயது 19) என்பது தெரிந்தது.

இதையடுத்து மொட்டை விஜய் பதுங்கி உள்ள இடம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மொபைல் எண்ணை ட்ரேஸ் செய்து தேடினர். அப்போது மொட்டை விஜய் எம்.புதூரில் உள்ள முந்திரி தோப்பில் பதுங்கி இருப்பது தெரிந்தது. இதை அடுத்து விஜயை பிடிக்க சென்றபோது போலீஸ்காரர்கள் கோபி, கணபதி ஆகியோரை விஜய் அரிவாளால் வெட்டி விட்டு தப்பித்து ஓட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது இன்ஸ்பெக்டர் சந்திரன், தனது தற்காப்புக்காகவும், சக போலீசாரை காப்பாற்றுவதற்காகவும் விஜயை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றார்.
இதையும் படிங்க: காப்பு காட்டில் யானை வேட்டை.. தருமபுரியில் புதிய வீரப்பன்..? கைதாகி தப்பியவர் சடலமாக மீட்பு..!

இதனை தொடர்ந்து விஜயின் கூட்டாளிகளான புதுச்சேரி உழவக்கரையை சேர்ந்த அறிவாசகம் மகன் ரேவந்த்குமார் (வயது 21), அண்ணாதுரை மகன் அன்பரசு (வயது 20), திருபுவனத்தை சேர்ந்த முசுபூர் ரகுமான் மகன் ரியாஸ் அகமது (வயது 22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த கந்தசாமி மகன் ஆகாசையும் (வயது 20) கைது செய்தனர்.
இதற்கிடையே என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட விஜயின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு மாஜிஸ்திரேட் பிரவீன் குமார் முன்னிலையில் டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.

அவரது உடலை வாங்க, புதுச்சேரியில் இருந்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டு வந்ததால் மருத்துவமனை வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது. இதன் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் பிரேத பரிசோதனை முடிந்ததும் விஜயின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் விஜயின் உடலை அடக்கம் செய்ய புதுச்சேரிக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக என்கவுண்ட்டர் நடந்த இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். என்கவுண்ட்டர் நடந்த எம்.புதூரில் உள்ள முந்திரி தோப்பை மாஜிஸ்திரேட் பிரவீன் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து முந்திரி தோப்பில் என்கவுண்ட்டர் நடந்த இடத்தில் கிடந்த மோட்டார் சைக்கிள், அரிவாள் மற்றும் போலீசார் சுட்டபோது வெளியான தோட்டா பாகங்கள் உள்ளிட்டவைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் என்கவுண்ட்டர் நடந்த சம்பம் குறித்து போலீசார் மாஜிஸ்திரேட் பிரவீன் குமாரிடம் தெரிவித்தனர்.
அதனை முழுமையாக கேட்டறிந்தார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன் குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: தமிழக பாஜக தலைவர் பதவி... நமக்கேன் வம்பு..? உண்மையை உடைத்த அண்ணாமலை..!