மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி மற்றும் வல்லாளபட்டி ஆகிய கிராமங்களில் டங்ஸ்டன் கனிம சுரங்க ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு முழுமையாக ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்திவரும் கிராம மக்களை தமிழக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி மூர்த்தி நேரில் சந்தித்தார்.
சுமார் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டதைத் தொடர்ந்து, இப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த 7ம் தேதி அன்று நரசிங்கம்பட்டி பெருமாள் மலையிலிருந்து மதுரை வரை சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவிற்கு காவல்துறையின் தடைகளையு மீறி பிரம்மாண்ட பேரணியை மக்கள் நடத்தினர். தன்னெழுச்சியாக கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணியாக சென்று, மதுரை தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை முழுவதுமாகக் கைவிட வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் மதுரையை தமிழ்ப்பண்பாட்டு மண்டலமாகவும், பெரியாறு பாசனப் பகுதி முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகவும் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை செய்யாவிட்டால் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மீண்டும் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர்.
இதையும் படிங்க: சட்டப்பேரவையில் 23ஆம் புலிகேசி படம்..வடிவேலுவாக செல்வப்பெருந்தகை..பாஜக அண்ணாமலை நக்கல் ..!
இதனிடையே, அரிட்டாபட்டி, வல்லாளபட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு நேரில் சென்ற வணிகத்துறை அமைச்சர் மூர்த்தி, டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என உறுதியளித்தார்.
கிராம மக்களிடையே பேசிய மூர்த்தி, “தமிழ்நாட்டில் ஒருபோதும் டங்ஸ்டன் திட்டம் வராது. அப்படியே டங்ஸ்டன் திட்டம் வந்தால் என்னுடைய பதவியை கூட ராஜினாமா செய்வேன் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மக்களின் கோரிக்கையை ஏற்று ஏற்கனவே டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்துள்ளோம். மேலூர் பகுதியில் ஒருபோதும் டங்ஸ்டன் திட்டம் வரவே வராது. வராத ஒரு திட்டத்திற்கு எதிராக மக்களை போராட சிலர் தூண்டி விட்டுள்ளனர்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், மறுவரையறை செய்வதாக தகவல் வந்துள்ளது. ஒரு சென்ட் நிலத்தை கூட அளக்க விட மாட்டோம். அப்படியே யாரேனும் வந்தால் முன்னால் நின்று திமுக போராடும். ஒரு காலத்திலும் டங்ஸ்டன் திட்டத்தை முதலமைச்சர் வர விட மாட்டார். டங்ஸ்டன் எதிர்ப்பு பேரணி சென்ற மக்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய எஸ்.பி.க்கு மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
அப்போது அவரிடம் மேலூர் பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண், தொல்லியல் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: ஆரம்பித்துவிட்டார்கள் தோழர்கள்.... ஜன.9 போக்குவரத்து தொழிற்சங்க போராட்டம்...