எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே. பைசி சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டதையடுத்து, 10 மாநிலங்களில் 12 நகரங்களில் இன்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள்.
எம்.கே.பைசிக்கும், தடை செய்யப்பட்ட அமைப்பான பிஎப்ஐ அமைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் எனக் கருதி இந்த சோதனை நடந்து வருகிறது. இன்று காலை முதல் டெல்லியில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் தலைமை அலுவலகம், திருவனந்தபுரம், மலப்புரம், பெங்களூரு, நந்தியால், தானே, சென்னை, ஜார்க்கண்டின் பகூர், கொல்கத்தா, லக்னெள, ஜெய்பூர் ஆகிய நகரங்களில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பரிசோதனை நடத்தி வருகிறார்கள்.

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பலமுறை சம்மன் அனுப்பியும் எஸ்டிபிஐ கட்சித் தலைவர் பைசி ஆஜராகவில்லை. இதையடுத்து, திங்கள்கிழமை டெல்லி, இந்திராகாந்தி விமானநிலையத்தில் பைசியை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது அமலாக்கப்பிரிவு பாதுகாப்பில் பைசி இருக்கிறார்.
இதையும் படிங்க: அடுத்த சோதனையா..! அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களுக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ்..!
பிஎப்ஐ கட்சியுடன் எஸ்டிபிஐ கட்சிக்கு தொடர்பு இருக்கிறது என்று அமலாக்கப்பிரிவு குற்றம்சாட்டுகிறது. தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பணம் பெற்றுத் தந்து, கிரிமினல் சதித்திட்டங்கள் தீட்ட உதவியாக இருந்தது எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் எம்.கே. பைசிதான். பிஎப்ஐ அமைப்புக்கான நிதியை எங்கிருந்து திரட்டுவது என பைசிக்கு தெரியும், அந்தப் பணத்தை பல்வேறு சட்டவிரோத செயல்களுக்கும், தீவிரவாத செயல்களுக்கும் பயன்படுத்தியுள்ளார் என அமலாக்கப்பிரிவு குற்றம்சாட்டுகிறது.

எஸ்டிபிஐ கட்சியின் தற்போது ரூ.4.07 கோடி இருப்பு இருக்கிறது. என்ஐஏ பதிவு செய்த இரு வழக்குகள் தொடர்பாக பிஎப்ஐ மீதும் சிலர் மீதும் அமலாக்கப்பிரிவு விசாரித்து வருகிறது.பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்த ஊழியர்கள், ஆதரவாளர்கள் இந்தியாவில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பணத்தைப் பெற்றும், ஹவாலா மூலம் பணம் பெற்றும் நாடுமுழுவதும் தீவிரவாத நடவடிக்கைகள் செய்ய பயன்படுத்தியுள்ளனர்.

எஸ்டிபிஐ கட்சியில் இருக்கும் உறுப்பினர்கள், தலைவர்கள் பிஎப்ஐ அமைப்பிலும் இருக்கிறார்கள். எஸ்டிபிஐ அமைப்பின் அன்றாட பணிகளுக்கு பிஎப்ஐ அமைப்பை சார்ந்தே இருந்துள்ளது. அன்றாடப் பணிகள், கொள்கை வடிவமைப்பு, தேர்தலின்போது வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தல் உள்ளிட்டவற்றை பிஎப்ஐ அமைப்பைச் சார்ந்தே எஸ்டிபிஐ இயங்குகிறது என அமலாக்கப்பிரிவு குற்றம்சாட்டுகிறது.

பிஎப்ஐ வழக்கில் இதுவரை அமலாக்கப்பிரிவு ரூ.61.72 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளது. 9 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்து, பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர்கள் 26 பேரைக் கைது செய்துள்ளது. 2009 மே முதல் 2022 மே வரை 29 வங்கிக்கணக்குகளில் இருந்து ரூ.62 கோடி பணப்பரிமாற்றம் பிஎப்ஐ கணக்கிற்கு வந்துள்ளது. வளைகுடா நாடுகளில் பிஎப்ஐ அமைப்புக்கு ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளனர் இவர்கள் மூலம் நிதியுதவி பிஎப்ஐ அமைப்புக்கு கிடைத்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர் வீடுகளில் ED RAID..!