அஸ்ரப் என்று அழைக்கப்பட்ட சப்னா தீதி மும்பையில் பாரம்பரிய இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர். இவர் மெஹ்மூத் கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், தனது கணவருக்கு நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பிருப்பது அப்போது அவருக்கு தெரியாது. மெஹ்மூத் கான் துபாய் சென்று திரும்பியபோது மும்பை விமான நிலையத்தில் மனைவி சப்னா கண் முன்பாகவே கூலிப்படை அவரை சுட்டுக் கொன்றது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சப்னா தனது கணவரின் சாவுக்கு யார் காரணம் என்பதை தீவிரமாக விசாரித்து வந்தார். அதைத்தொடர்ந்து மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் தான் தனது கணவரின் மரணத்துக்கு காரணம் என்பதையும் தெரிந்து கொண்டார். தனது உத்தரவை நிறைவேற்றாத மெஹ்மூத்தை கூலிப்படை வைத்து தீர்த்துக் கட்டினார் தாவூத் என்ற அதிர்ச்சி தகவலும் அவருக்கு கிடைத்தது.

இந்த உண்மையை அறிந்த பிறகு சப்னா, தாவூத் இப்ராஹிமை பழி வாங்குவதை தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டார். இதற்காக, தாவூத் இப்ராஹிமின் பரம எதிரியான ஹுசைன் உஸ்தாராவுடன் இணைந்து செயல்பட்டார்.
இதையும் படிங்க: ஏலத்தில் வாங்கப்பட்ட தாவூத் இப்ராஹிம் கடை... 23 ஆண்டுகளுக்குப் பிறகு ட்விஸ்ட்... அடங்காத நிழல் உலக தாதாவின் ஆட்டம்..!
துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு சண்டை பயிற்சிகளைப் பெற்ற பிறகு மும்பையில் பிரபலமான பெண் தாதாவாக சப்னா உருவெடுத்தார். தாவூத் மும்பையில் தொழில் செய்வதற்கு பெரும் தடைகளை ஏற்படுத்தினார்.
சார்ஜா கிரிக்கெட் போட்டி
தாவூத்தை பலி வாங்க கண்கொத்தி பாம்பாக காத்திருந்த சப்னாவுக்கு 1990-ல் ஷார்ஜாவில் நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நல்ல வாய்ப்பாக அமைந்தது.
இந்த போட்டியை காண தாவூத் வருவார் என்பதை அறிந்த சப்னா ஆயிரக்கணக்கானோர் கண்முன்னால் அவரை தீர்த்து கட்ட தனது ஆட்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். ஆனால், இந்த திட்டம் தாவூத் கூட்டத்துக்கு முன்னரே தெரிந்துவிட்டது.
அதன்பின்னர், தாவூத்தின் ஆட்கள் சப்னா கூட்டத்துக்குள் ஊடுருவி கடந்த 1994-ம் ஆண்டு மும்பையில்வீட்டிலேயே வைத்து அவரை தீர்த்து கட்டினர். சப்னாவின் உடம்பில் 22 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டும் அருகில் இருந்தவர்கள் தாவூதின் மேல் உள்ள பயத்தின் காரணமாக யாரும் உதவி செய்ய முன்வரவில்லை.

இந்த தகவல் இதுவரை ஊடகங்களில் வெளியாகவில்லை. சப்னா தீதி மற்றும் அவரது துணிச்சலான செயல்பாடு குறித்து ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். அவருடைய புகைப்படங்களை கூட யாருக்கும் தெரியாத அளவிற்கு மறைமுகமாக செயல்பட்டு வந்தார் சப்னா.
அவர் கொல்லப்பட்டு விட்டாலும் கூட உலகை ஆட்டிப்படைத்த தாதாவுக்கு எதிரான போராட்டத்தில் அவர் ஹீரோவாக கருதப்பட்டார். பர்க்கா அணியும் பழமைவாத பெண்ணான அவர் தனது லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக ஜீன்ஸ் அணிந்து மோட்டார் சைக்கிள் ஒட்டி துப்பாக்கி ஏந்தி ஆணாதிக்க சமூகமான மும்பை பாதாள உலகத்திற்குள் நுழைந்தார். எவ்வளவு முயற்சிகளை செய்தும் அவருடைய பழி வாங்கும் லட்சியம் நிறைவேறவில்லை. மாறாக வாள் எடுத்தவன் வாளால் தான் மடிவான் என்பது போல் அவருடைய கதையும் முடிந்து விட்டது.
சப்னாவின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவருடைய வாழ்க்கை ஒரு மர்மமாகவே அமைந்திருந்தது. உலகின் மிகவும் ஆபத்தான தாதா ஒருவருக்கு எதிரான அவருடைய துணிச்சலான மோதல் வியக்க வைக்கிறது.
தற்போது ஆங்கில பத்திரிகைகளில் இந்த தகவல்கள் பரபரப்பாக வெளியாகி வருகிறது.
இதையும் படிங்க: களை கட்டுகிறது புத்தாண்டு கொண்டாட்டம்: மும்பை - கோவா நெடுஞ்சாலையில், கடும் போக்குவரத்து நெரிசல்!