நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சில கோரிக்கைகளை முன் வைத்தார் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்.
கூட்டம் முடிவதற்கு முன்பே தவிர்க்க முடியாத நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியேறிய திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ''தென்னிந்திய மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு ஒன்றை அமைப்பது எனவும்,சமச்சீரான சதவிகிதத்தில்,அதாவது விகிதாச்சார அடையில் தங்களை உயர்த்தலாம் அதற்கு நாம் இந்திய வழி இந்திய அரசு வலியுறுத்தலாம் என்கிற தீர்மானங்களை முன்மொழிந்து அதன் அடிப்படையில் தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்தனர்.

விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் சார்பில் இந்த எண்ணிக்கை கூட்ட வேண்டாம். அப்படியே தக்க வைக்க வேண்டும். அமெரிக்காவில் நூறாண்டுகளாக ஒரே எண்ணிக்கை அடிப்படையில் தான் பிரதிநிதித்துவ ஜனநாயகம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆகவே இன்றைக்கு நடைமுறையில் இருக்கிற 543 என்ற எண்ணிக்கையை அப்படியிலேயே தொடரலாம். இதை அனைவரும் ஒருங்கிணைந்து வலியுறுத்துவோம் என்பதை குறிப்பிட்டு இருக்கிறேன்.
இதையும் படிங்க: இளையராஜாவுக்கு இசை ஞானியைவிட மெய் ஞானியே பொருத்தம்.. நேரில் சந்தித்து வியந்த திருமாவளவன்.!

மறுவரையறை செய்திட வேண்டும் என்கிற முடிவை இந்திய ஒன்றிய அரசு மேற்கொள்ளுமேயானால் 20 அல்லது 30% அடிப்படையில் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் சமச்சீரான எண்ணிக்கையை உயர்த்துவது என்று ஆலோசனை வழங்கலாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலே குறிப்பிட்டிருக்கிறோம். எண்ணிக்கை மறு வரையறை எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று தொகுதி மக்களின் எல்லை வரையறையும் மிக முக்கியமானது.

அந்த எல்லை வரையறை செய்ததில் ஏற்கனவே தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சிறுபான்மையினர், இஸ்லாமியர் பட்டியல் சமூகம், பட்டியல் பழங்குடியினர் ஆகிய வாக்குகள் சிதறடிக்கப்படும் வகையில் எல்லை மறுசீரமைப்பு நடந்தேறி இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி வருகிற காலங்களில் அவ்வாறு அந்த சமூகப் பிரிவினரின் வாக்குகளை சிதறிடிக்காத வகையில் எல்லை மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் என்கிற கூற்றை சுட்டிக்காட்டியுள்ளோம்.
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை மாநில அரசுகளே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அதேவேளை மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை இன்றைக்கு இருக்கிற அடிப்படையிலேயே தொடர வேண்டும் என்கிற கருத்துக்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் முன்வைத்திருக்கிறோம். இன்னும் சில மணி நேரம் அல்லது ஒரு மணிக்குள்ளாக இந்த கூட்டம் முடிந்து விடும் என்று நம்புகிறேன். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்தை ஒருங்கிணைத்த முதல்வர் ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் சார்பாக பாராட்டுகிறோம்.

எந்த விதத்திலும் பிரதிநிதித்துவ ஜனநாயகம் இந்திய மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்த கூடாது. அதற்கு ஏற்ப அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது. அந்த அடிப்படையிலே அதிமுக உள்ளிட்ட எதிர் கட்சிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். முதல்வருடைய முன் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கக்கூடிய வகையில் கருத்து தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரமலான் நோன்பு தொடங்கிய விசிக தலைவர்... 21ஆவது ஆண்டாக திருமாவளவன் நோன்பு.!