நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்தவர் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியரான ஜான் சிபு மானிக். வயது (40). இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் குன்னூர் பார்க்சைட் சிஎஸ்ஐ அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக பணியாளராக உள்ள இவரை பணி நிரந்தரம் செய்ய பள்ளி நிர்வாகம், கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பியது. ஆனால் பள்ளிக்கல்வித்துறை இவரை பணி நிரந்தரம் செய்ய மறுப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டை அணுகிய ஜான்சிபு மானிக், நிரந்தர பணி நிரந்தரத்திற்கான ஆணையை பெற்றார். இவ்வளவு ஆண்டு காலம் பணியாற்றியதற்கான நிலுவை தொகையாக ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை ஜான்சிபு மானிக்கிற்கு வழங்க கோர்ட் உத்தரவிட்டது. ஆனாலும் இவருக்கு பணி நிரந்தர உத்தரவு மற்றும் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து மீண்டும் இந்த உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் ஜான் சிபு மானிக் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து உடனடியாக அவருக்கு நிலுவைத் தொகை வழங்கி பணி நிரந்தரம் செய்ய சென்னை ஐகோர்ட் மீண்டும் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து பணி ஆணை மற்றும் நிலுவைத் தொகை பெறுவதற்கான உத்தரவை வழங்க வலியுறுத்தி ஜான் சிபு மானிக் நீலகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷை அணுகினார். தனது நிலைமை எடுத்துக்கூறி, தனக்கான நிலுவைத் தொகை மற்றும் பணி நிரந்த ஆணை ஆகியவற்றை வழங்க வலியுறுத்தினார். ஆனால் நிலுவைத் தொகையாக உனக்கு 25 லட்ச ரூபாய் நான் கையெழுத்து இட்டால் தான் கிடைக்கும். எனவே பணி ஆணை மற்றும் நிலுவை பணத்தை கொடுப்பதற்கு லஞ்சமாக ரூ.5 லட்சம் பணத்தை நீ தர வேண்டும் என நீலகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷ் கேட்டுள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: அவனை சும்மாவே விடக்கூடாதுடா..! திண்டுக்கல்லில் அரங்கேறிய இரட்டை கொலை.. பாதை மாறிப்போன 2K கிட்..!

பேச்சுவார்த்தைக்கு பின்னர் ரூ.2 லட்சம் பணம் தர ஜான்சிபு மானிக் ஒப்புக்கொண்டார். ஆனாலும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு லஞ்சம் தர விருப்பம் இல்லாததால் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை ஜான் சிபு மானிக் அணுகினார். இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய பணத்தை கொடுக்க முடிவு செய்தார். ஆனா அலுவலகத்தில் வைத்து பெரிய தொகையை வாங்குவது சிக்கல் என நினைத்த சந்தோஷ், தனது வீட்டிற்கே கொண்டு வந்து தரும்படி சொல்லியுள்ளார். அதன்படி ரூ.2 லட்சத்தை ஊட்டி பிங்கர்போஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் உள்ள மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சந்தோஷ் வீட்டில் வைத்து அவரிடம் ஜான்சிபு மானிக் கொடுத்துள்ளார்.

அப்போது அதே பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சப் இன்ஸ்பெக்டர்கள் சாதன பிரியா, சக்தி, ரங்கநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீடீரென சந்தோஷின் வீட்டிற்குள் நுழைந்து அவரை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியவர் கைது.. தலைமறைவாக இருந்தவரை தட்டி தூக்கியது போலீஸ்..!