பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று மொரீசியஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் மணிப்பூர் மாநில பிரச்சனைக்கு தீர்வு காணாத மோடியை செய்யும் விதத்தில் மணிப்பூர் மாநில மக்கள் இன்னும் பிரதமர் மோடிக்காக காத்திருக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் மொரீஷியஸ் பயணத்தை, ‘அடிக்கடி பறக்கும் நேரம்’ என்று விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, ‘மணிப்பூர் மக்கள் இன்னும் பிரதமரின் வருகைக்காக காத்திருக்கிறார்கள்’ என்று குற்றம் சாட்டி இருக்கிறது.
இதையும் படிங்க: 2 நாள் பயணமாக மொரீஷியஸ் சென்றார் பிரதமர் மோடி.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இது அடிக்கடி விமானப்பணம் செய்யும் நேரம், பிரதமர் இப்போது மொரீஷியஸ் சென்றுள்ளார். ஆனால் மணிப்பூரில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின்பும், அங்கு நிலைமை இன்னும் சீராகவில்லை.

மணிப்பூர் மக்கள் தொடர்ந்து பிரதமரின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் இரண்டு வருடங்களாக அவர் (பிரதமர் மோடி) அங்கு செல்ல மறுப்பது, உண்மையில் அம்மக்களை அவமதிப்பதாகும்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மொரீஷியஸ் தீவின் தேசிய நாள் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மொரீஷியஸ் தீவுக்குச் சென்றார். இன்று காலையில் அங்கு சென்ற அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தப் பயணத்தில் பிரதமர் மோடி மொரீஷியஸ் தீவின் உயர்மட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும் இரு நாடுகளும், திறன்வளர்த்தல், வர்த்தகம் மற்றும் எல்லைதாண்டிய நிதிக்குற்றங்களை சமாளித்தல் போன்ற துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவதற்கான பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளன.
இரண்டு வருடங்களுக்கும் மேலாக இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலமான மணிப்பூருக்கு செல்லாததற்கும், அங்கு நிலைமையை கையாண்ட விதம் குறித்தும் மத்திய அரசை காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

கடந்த 2023 மே மாதம் இடஒதுக்கீடு தொடர்பாக குகி இனமக்களுக்கும் மைத்தேயி பிரிவினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கலவரமாக மாறி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த இனக்கலவரத்தில் 220 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 2 நாட்கள் அரசு முறை பயணமாக மொரீஷியஸ் புறப்பட்ட பிரதமர்..!