பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் போலீஸார் சட்டத்தை கையில் எடுத்து தன்னிச்சையாக தண்டனைகள் வழங்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து ஆளும் பாஜக அரசும், முதல்வர் மோகன் யாதவும் தொடர்ந்து மவுனமாகவே இருக்கிறார்கள். பசுக் கடத்தல் என்ற பெயரில் சிறுபான்மையினரைத் தாக்குவது, சிறுபான்மையின இளைஞர்களை கைது செய்து அவமானப்படுத்துவது என தண்டனைகள் தொடர்கின்றன.
சமீபத்தில் தேவாஸ் நகரில் 9 இளைஞர்களின் தலையை மொட்டையடித்து, கைவிலங்கிட்டு, முகத்தை மூடி, வெறும் காலுடன் ஊர்வலமாக சாலையில் போலீஸார் அழைத்துச் சென்ற சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 9ம்ததேி சாம்பியன்ஸ் டிராபி பைனலின்போது போலீஸாருடன் இந்த 9 இளைஞர்களும் மோதலில் ஈடுபட்டதற்காக இதுபோன்ற மனிதநேயமற்று போலீஸார் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளனர். போலீஸாரின் இந்த கொடுஞ்செயலுக்கு பாஜக எம்எல்ஏ காயத்ரி ராஜே பவார் கண்டனம் தெரிவித்துள்ளார். மாவட்ட காவல் கண்காணப்பாளரிடம் நேரில் புகார் அளித்து சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ராஜே வலியுறுத்தியுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 9 பேரும் அப்பாவிகள், போலீஸார் வரம்பு மீறிய அதிகாரத்தை செயல்படுத்தியுள்ளனர் என்று எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: இளைஞர்களை மொட்டையடித்து ஊர்வலமாக இழுத்து சென்ற போலீஸ்... பாஜக எம்எல்ஏ கண்டனம்..!

கடந்த 2ம் தேதி உஜ்ஜைன் போலீஸார் சலீம், அக்குயிப் மேவாத்தி என இரு இளைஞர்களை பசுக்கொலை தொடர்பாக இந்தூர் அருகே கைது செய்தனர். மத்தியப் பிரதேசத்தில் பசுக்கொலையைக் குற்றமாக்கி கடந்த 2004ல் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
அடுத்த நாள் காட்டியா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இந்த இரு முஸ்லிம் இளைஞர்களும் பொதுவெளியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஊர்வலமாகச் செல்லும்போது “ பசு எங்கள் தாய், போலீஸார் எங்கள் தந்தை” என்று அந்த இளைஞர்களை சொல்லவைத்து போலீஸார் அழைத்துச் சென்றனர். சலீம், அக்குயிப் இரு இளைஞர்களின் கைகளும் கயிற்றால் கட்டப்பட்டு அழைத்துச் செல்ப்பட்டதைப் பார்த்த விஸ்வ இந்து பரிசத், பஜ்ரங் தளம் அமைப்பினர் போலீஸாருக்கும், மக்களுக்கும் இனிப்புகளை வழங்கியுள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் தமோ நகரிலும் பசுக் கொலை செய்ததாகக் கூறி 5 பேரை போலீஸார் கைது செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். சட்டவிரோதமாக சொத்துக்களை ஆக்கிரமித்திருந்ததாகவும் குற்றம்சாட்டினர். இந்த இரு வழக்குகளிலும் பசுக் கொலை நடந்ததாக விஸ்வ இந்து, பஜ்ரங் தளம் அமைப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் இந்த நடவடிக்கை எடுத்து குற்றம்சாட்டப்பட்டவர்களை மனிதநேயற்று நடத்தியுள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் ஒரு வீடியோ வைரலானது. அதில் இரு இளைஞர்கள் தலையிலும், கைகளிலும் பேண்டேஜ் கட்டுபோட்டு, காதுகளைப் பிடித்து தோப்புக்கரணம் போட்டு போலீஸாரிடம் மன்னிப்புக் கேட்கும் வீடியோ வைரலானது. பணியில் இருந்த ஒரு போலீஸ் துணை ஆய்வாளரை தாக்கியதாகக் கூறி இளைஞர்களை அடித்து, காயப்படுத்தி, மன்னிப்புக் கேட்க வைத்தனர் போலீஸார். ஆனால், இந்த இரு இளைஞர்களும் ஏற்கெனவே கட்டுப்போட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
ஆனால், கடந்த நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குப்பின், புல்டோசர் நடவடிக்கை தண்டனைகள் குறைந்ததாகக் தோன்றினாலும், குற்றம்சாட்டப்பட்டவர்களை ஊர்வலமாக அழைத்துச் செல்லுதல், மக்கள் முன் அவமானப்படுத்துதல் ஆகியவை புதிய தண்டனை வடிவங்கள் வெளிப்படுகின்றன.

இது போன்ற செயல்கள் போலீஸார் சட்டத்தை தானே கையில் எடுத்து செயல்படுவதை காட்டுகின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்களை பொதுவெளியில் ஊர்வலமாக போலீஸார் அழைத்துச் செல்லும் போதெல்லாம், உள்ளூர் ஊடகங்களும், மக்களும் வீடியோக்களைப் பதிவு செய்து ஆன்லைனில் வெளியிடுகிறார்கள்.
ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் பெரும்பாலும் இந்த செயல்களை பார்க்கும் பார்வையாளர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள், குற்றத்திற்கு பொருத்தமான தண்டனை என்று நம்புகிறார்கள். குறிப்பாக உஜ்ஜைன் காவல்துறையைப் பாராட்டிய பலர், பசுவதைக்கு அத்தகைய தண்டனை தேவை என்று சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்தனர். சமூக ஊடகங்களைப் பார்த்துவிட்டு சாதாரண மக்கள் கடந்துவிடலாம்.
ஆனால், நீதிமன்றம் தண்டனையை முடிவு செய்யவேண்டிய இடத்தில் போலீஸாரின் செயல்படுவது குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பங்களும், அவர்களின் வாழ்க்கையும் நிச்சயம் பாதிக்கப்படும். ஆனால், போலீஸாரோ குற்றம்சாட்டப்பட்டவர்களை ஊர்வலமாக அழைத்துச் செல்லவில்லை என்று தொடர்ந்து மறுக்கிறார்கள். உஜ்ஜைன் கூடுதல் எஸ்பி குருபிரசாத் பராசர் கூறுகையில் “ இதுபோன்று குற்றம்சாட்டப்பட்டவர்களை ஊர்வலமாக போலீஸார் அழைத்துச் செல்லவில்லை. சமூக ஊடகங்களில் அவ்வாறு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

தாவோஸ் நகரில் உள்ள தாமோ காவல்நிலைய பொறுப்பாளர் தசோரியா, “எந்தவிதமான ஊர்வலமும் போலீஸார் செல்லவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அவமதிக்கப்படவும் இல்லை “ எனத் தெரிவித்தார். தாமோ எஸ்பி ஸ்ரூகீர்த்தி சோமவன்ஷி கூறுகையில் “ குற்றம்சாட்டப்பட்டவர்களை போலீஸார் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அப்போது வாகனம் பழுதாகிவிட்டதால் வேறு வழியின்றி நடக்க வேண்டியதாகிவிட்டது. அதை ஊர்வலம் என நினைத்துவிட்டார்கள்” எனத் தெரிவித்தார்.
மத்தியப் பிரதேச கிராமங்களில் இதுபோன்று குற்றம்செய்தவர்கள், பொருட்களில் கலப்படம் செய்தவர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்று அவமானப்படுத்த கிராமத்தலைவர்கள் உத்தரவிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த வழக்குகளில் பொதுமக்கள், உள்ளூர் அரசியல்தலைவர்கள் மற்றும் பிற்போக்குத்தனமான குழுக்களின் ஆரவாரத்தாலும், பாஜக அரசின் மவுனத்தாலும் போலீஸ் துறை பலப்படுத்தப்படுவதாகத் தெரிகிறது.
மத்தியப் பிரதேசத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் குற்றங்களுக்கு எதிராகக் கடுமையாக இருப்பதாக தெரிவித்தாலும், இந்த வார்த்தைகள்கூட காவல்துறையினர் தாங்கள் செய்யும் செயல் சரியானதுதான் என்றும், உடனடி தண்டனைகள் குற்றத்தை குறைக்கும் என நம்புகிறார்கள். ஆனால், நீதிமன்றத்தையும், நீதியையும், மனிதநேயத்தையும் மறந்துவிட்டனர்.
இதையும் படிங்க: செல்போன் நட்பால் வந்த விபரீதம்.. 5 நாட்கள் சித்ரவதை... 17 வயது சிறுமியை சிதைத்த கொடூரன் கைது..!