உலகளாவிய பொருளாதாரப் பின்னணி கொண்டவர் பூனம் குப்தா, இவர் பார்க்கில் உள்ள மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அங்கு அவர் மேக்ரோ பொருளாதாரம், சர்வதேச நிதி மற்றும் வர்த்தகத்தில் நிபுணத்துவம் பெற்றார். டெல்லி பல்கலைக்கழகத்தின் டெல்லி பொருளாதாரப் பள்ளி மற்றும் இந்து கல்லூரியில் பட்டங்களையும் பெற்றுள்ளார். 1998 ஆம் ஆண்டில், சர்வதேச பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றதற்காக EXIM வங்கி விருதை வென்றார். மேலும் இவர் உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியம் உள்ளிட்ட அமைப்புகளில் பணியாற்றி 20 ஆண்டுகள் அனுபவம் உடையவர். மத்திய அரசின் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

டில்லியில் என்.சி.ஏ.இ.ஆர் எனப்படும் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் ஜெனரலாக இருந்தார். இந்த நிலையில் அவர் தற்போது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதன் புதிய துணை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 7-9, 2025 அன்று நடைபெறவிருக்கும் ஆர்பிஐயின் பணவியல் கொள்கைக் குழு (MPC) கூட்டத்திற்கு முன்னதாக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு ஜனவரியில் ஓய்வு பெற்ற மைக்கேல் பத்ராவுக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரபல பொருளாதார நிபுணரான பூனம் குப்தா, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். NCAER இல் சேருவதற்கு முன்பு, அவர் சர்வதேச நிதிக் கழகத்தில் முன்னணி பொருளாதார நிபுணராகப் பணியாற்றினார்.
இதையும் படிங்க: ரம்ஜான் பண்டிகையான இன்று வங்கிகள் செயல்படும்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

மேலும் சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) ஆராய்ச்சிப் பதவிகளை வகித்தார். மேலும் இவர் சர்வதேச பொருளாதார உறவுகள் குறித்த இந்திய ஆராய்ச்சி கவுன்சில் (ICRIER) மற்றும் டெல்லி பொருளாதாரப் பள்ளியில் பேராசிரியராகவும் இருந்துள்ளார். பூனம் குப்தாவின் மேக்ரோ பொருளாதாரக் கொள்கையில் விரிவான நிபுணத்துவம், ஆர்பிஐயின் கொள்கை வகுப்பில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பூனம் குப்தா முக்கிய பொருளாதார பிரச்சினைகள் குறித்து குரல் கொடுத்து வருகிறார். சமீபத்திய கட்டுரைகளில், பொருளாதார அதிர்ச்சிகளை இந்தியா சிறப்பாகக் கையாள உதவும் வகையில், மிகவும் நெகிழ்வான மாற்று விகிதத்தை அவர் வாதிட்டார்.

தி எகனாமிக் டைம்ஸுக்கு மார்ச் மாதம் எழுதிய கட்டுரையில், அந்நிய செலாவணி இருப்புக்களை நிர்வகிப்பதில் இந்தியா தனது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். விலை நிலைத்தன்மையின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார், மேலும் பணவீக்கக் குறியீட்டில் உணவுப் பொருட்களின் விலைகளின் எடையைப் புதுப்பிக்கவும் பரிந்துரைத்துள்ளார். புதிய கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கீழ் ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதங்களைக் குறைத்துள்ள ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழுவில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி 2026 ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் பணவீக்க இலக்கு கட்டமைப்பை மதிப்பாய்வு செய்யும்போது அவரது நுண்ணறிவு மதிப்புமிக்கதாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஏடிஎம் யூசர்களுக்கு வந்த சோதனை... ஷாக் கொடுத்த ரிசர்வ் வங்கி!!