உடல் எடை குறைப்பு நிறுவனமான கலர்ஸ் நிறுவனம் சென்னை, கோவை, நெல்லை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கி வரும் (Kolors) கலர்ஸ் உடல் எடை குறைப்பு நிறுவனம் தொலைபேசியின் மூலம் பலரையும் தொடர்பு கொண்டு, இயந்திர மசாஜ் மூலம் உடல் எடை குறைக்கும் திட்டம் பற்றி விளக்கி உள்ளது.
இதனால் நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த ரெஜி என்பவர் விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டார். எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம் என்பதனை தெரிந்து கொள்ள நேரில் சென்று விசாரித்துள்ளார். அப்போது ரெஜி டிம்னாவிடம், நாள் ஒன்றுக்கு அரை கிலோ எடை குறையலாம் என்றும், 60 நாட்களில் 30 கிலோ எடையை குறைத்து விடலாம் என்றும் உறுதியும் உத்தரவாதமும் வழங்கப்பட்டுள்ளது.

அதனை கேட்டு மகிழ்ச்சி அடைந்த ரெஜி எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என கேட்டுள்ளார். உடல் எடை குறைக்கும் அளவு மாறுபடும். நீங்கள் ரூ.90,000 கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனை நம்பி ரெஜி டிம்னா முழு பணத்தையும் கட்டி உள்ளார். 3 மாதத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாஸா மாறிவிடலாம் எனவும் கனவு கண்டுள்ளார்.
இந்த நிலையில் பயிற்சி எடுத்த சில நாட்களிலேயே ரெஜி டிம்னாவுக்கு இயந்திர மசாஜ் காரணமாக முதுகு வலி ஏற்பட்டுள்ளது. நாளாக நாளாக முதுகு வலி அதிகமான நிலையில் பயிற்சியை தொடர முடியாமல் அவதிப்பட்டு உள்ளார். இதுகுறித்து மருத்துவ ஆலோசனை பெற டாக்டரை தொடர்பு கொண்டபோது, தொடர்ந்து மசாஜ் செய்யக் கூடாது என மருத்துவர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நியோ மேக்ஸ் மோசடி வழக்கு! 600 கோடி சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை அதிரடி...

மசாஜ் செய்யக்கூடாது என டாக்டர் கூறியதால் கட்டிய பணத்தை என்ன செய்வது என ரெஜி டிம்னா யோசித்தார். மொத்தம் ஏழு நாட்களே பயிற்சி மேற்கொண்ட அவர், கட்டணமாக செலுத்திய தொகையை திரும்ப கேட்டுள்ளார். இதுபோல் மருத்துவர் பரிந்துரையால் என்னால் மசாஜ் செய்து கொள்ள முடியாது. 7 நாள் பயிற்சி நிறைவடைந்து உள்ளது. அதற்கான கட்டணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு மீதித்தொகையை கொடுங்கள் என கேட்டுள்ளார். அப்போது கலர்ஸ் நிறுவனம் பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகினார்.

இதை சட்டரீதியாக அணுகலாம் என முடிவெடுத்த ரெஜி டிம்னா, வழக்கறிஞர் பிரம்மா மூலமாக திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், கலர்ஸ் நிறுவனத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பைத் தொடர்ந்துதான் உடல் எடையை குறைக்க கலர்ஸ் நிறுவனத்துக்குச் சென்றேன்.
ஆனால் அங்கு எடுத்த சிகிச்சையின் காரணமாக முதுகு வலி வந்துவிட்டதால், ஒரு வாரம் கூட நான் சிகிச்சைக்காகச் செல்லாத நிலையில் என்னுடைய பணத்தை திரும்பிக் கொடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த ஆணைய தலைவர் கிளடஸ் டோன் பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி, கலர்ஸ் நிறுவனம் ரூ.90,000 தொகையை திரும்ப கொடுக்கவும், ரூ.25,000 நஷ்டஈடு மற்றும் ரூ.10,000 வழக்குச் செலவாக மொத்தமாக ரூ.1,25,000 வழங்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: உன்னை எப்படிம்மா கட்டிப்பிடிப்பேன்..? போரின் ரணத்தை உலகிற்கு உணர்த்தும் ஒற்றைப் புகைப்படம்..!