மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அவுரங்கசீப்பின் சமாதியை அகற்ற வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங்க தளம் அமைப்புகள் அழைப்பு விடுத்த போராட்டத்தால், நாக்பூர், சம்பாஜி மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் வெடித்தன. இந்த விவகாரத்தில் இந்துத்துவ அமைப்புகள் மேலும் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பு இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வரும் மார்ச் 21 முதல் 23 வரை கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பான ஏற்பாடுகளுக்காக ஆர்எஸ்எஸ் தலைவர்களில் ஒருவரான சுனில் அம்பேகர் பெங்களூரூ வந்துள்ளார். அங்கு செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவரிடம், அவுரங்கசீப் சமாதி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த சுனில் அம்பேகர், “எதன் பேரிலும் கலவரம் என்பது நம் சமூகத்துக்கு நல்லதல்ல. அவுரங்கசீப் சமாதி விவகாரம் இன்றையக் காலகட்டத்துக்கு பொருந்தாது” என்று தெரிவித்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்தக் கருத்துக்குப் பிறகு, பாஜக கூட்டணிக் கட்சிகளும் இந்த விவகாரத்தை கண்டித்துள்ளனர். மேலும், மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கருத்து தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பாஜக கலவர ஆட்சியின் தொடர்ச்சி தான் அவுரங்கசிப் கல்லறை இடிப்பு.. வேல்முருகன் தாக்கு..!

அஜித் பவார் தலைமையிலான என்சிபியின் தலைவர் அமோல் மித்காரி கூறும்போது, “சிலருக்கு தைரியம் இருந்தால், அவர்களே தங்கள் பிள்ளைகளுடன் மண்வெட்டியை எடுத்துச் சென்று அவுரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும். ஆனால், அது நடக்காது. ஏனென்றால் இந்த தலைவர்கள் தங்கள் குழந்தைகளை வெளிநாட்டில் படிக்க வைத்து ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்கள். இவர்கள் செய்வது இந்துக்களை தூண்டிவிடுவதற்கான அரசியல் மட்டுமே” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அவுரங்கசீப் சமாதியை அகற்றுவதுதான் இப்போ முக்கியமா..? பாஜக, இந்துத்துவ அமைப்புகளை விளாசிய வேல்முருகன்.!!