மும்பை பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள 13 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் கடைசி 4 தளத்தில் நடிகர் சயீப் அலிகான் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இங்கு கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி சயிப் அலிகான் தனது குடும்பத்தினருடன் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென ஒரு மர்ம நபர் சயிப் அலிகான் வீட்டிற்குள் நுழைந்தார்.
அவரை பிடிக்க சயீப் அலி கான் முயன்ற போது அந்த நபர் கத்தியால் பலமுறை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். ரத்த வெள்ளத்தில் துடித்த சயிப் அலிகான், மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.

சயீப் அலிகான் மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திய நபரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டினர். இதற்காக 30 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் சயீப் அலிகானை தாக்கியவர் மும்பையில் இருந்து ரயில் மூலம் தப்பி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மும்பை போலீசார் பிற மாநில போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மும்பை போலீசார் அளித்த தகவலின் அடிப்படையில் சத்தீஷ்கார் மாநில ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், துர்க் ரயில் நிலையத்தில் வைத்து சயீப் அலிகான் மீது தாக்குதல் நடத்தியவரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: இறுகுகிறது அமலாக்கத்துறை பிடி.. முடிந்தது 2 ஆண்டு தலைமறைவு.. செந்தில் பாலாஜி சகோதரர் கோர்ட்டில் ஆஜர்..!

வீடியோ கால் மூலம் குற்றவாளியை மும்பை போலீசாருக்கு காண்பித்தனர். அப்போது மும்பை போலீசார் அவர் தான் சயீப் அலிகான் மீது தாக்குதல் நடத்தியவர் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் வங்கதேசத்தை சேர்ந்த ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் என்பது தெரிந்தது. சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய அவர் தனது பெயரை மாற்றிக்கொண்டு சுற்றியதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதனிடையே மருத்துவமனையில் 5 நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்த சயிப் அலிகான் அதன் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரது உடலில் 6 காயங்கள் இருந்ததாகவும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது உடலில் இருந்து கத்தியின் ஒரு துண்டு அகற்றப்பட்டதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சயிப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை மும்பை பாந்த்ரா கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில், குற்றவாளி மீதான பல ஆதாரங்கள் உள்பட 1000 பக்க குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளதாக பாந்தாரா போலீசார் தெரிவித்தனர்.

இந்த குற்றப்பத்திரிகையில் தடயவியல் ஆய்வகத்தின் அறிக்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலும், சைஃப் அலி கான் உடலில் இருந்து மீட்கப்பட்ட கத்தி துண்டுகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரின் கைரேகை அறிக்கை உள்ளிட்டவையும் குறிப்பிடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நகைக்கடன்களுக்கு விரைவில் வழிகாட்டி நெறிமுறைகள்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பால் முத்தூட், ஐஐஎப்எல் பங்குகள் சரிவு..!