சேலம் செவ்வாபேட்டை , மூலப்பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் செங்கோடன், இவரது மனைவி பானுப்பிரியா. இவர்களுக்கு கடந்த 15 தினங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது . பானுப்பிரியா சற்று மனநலம் பாதித்தவர் என்பதால் அவரது தாயார் தான் குழந்தையை பராமரித்து வந்துள்ளார். மேலும் குடும்ப வறுமை காரணமாக குழந்தையை வளர்க்க முடியாத சூழலில், பானுப்பிரியாவின் சகோதரர் ரமேஷ் குழந்தையை விற்பனை செய்தால் தனது குடும்ப வறுமை தீருமென கூறியுள்ளார்.

இதனால் பானுப்பிரியாவின் கணவர் செங்கோடன் சம்மதத்தின் பேரில் சேலம் லீபஜார் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் மூலமாக சட்ட விரோதமாக குழந்தையை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக சுமார் மூன்று லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு பச்சிளம் பெண் குழந்தையை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. குழந்தையை விற்ற பணத்தில் பல்சர் பைக் வாங்கிய ரமேஷ், மீதமிருந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை தனது சகோதரி பானுமதியிடம் கொடுத்துள்ளார். அத்துடன் குழந்தையை விற்பனை செய்தது பற்றி யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவேன் என்றும் பானுமதி மற்றும் அவரது அம்மாவை மிரட்டியுள்ளார்.
இதையும் படிங்க: வீடியோ கேம் பெயரில் ரூ.70 கோடி மோசடி! சைபர் குற்ற கும்பல் 30 பேர் சிக்கினர்..! உ. பி. யில் தமிழ் I.P.S

குழந்தை இருக்கும் வீடு சில நாட்களாகவே அமைதியாக இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் பானுமதியிடம் துருவி, துருவி விசாரித்துள்ளனர். ஏற்கனவே மனநலம் பாதிக்கப்பட்டிருந்த பானுமதி அவர்களிடம் உண்மையை கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து அன்னதானப்பட்டி போலீசாருக்கும், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தைய 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக ரமேஷும் அவரது மனைவி கார்த்திகாவும் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் குழந்தை தருமபுரியில் உள்ள ஒரு தம்பதியிடம் இருப்பதை அறிந்த போலீஸ், அதனை மீட்டு தாயிடமே மீண்டும் ஒப்படைத்துள்ளனர்.
குழந்தையை சட்டவிரோதமாக வாங்கிய சேலம் லீபஜார் பகுதியைச் சேர்ந்த ராஜா மற்றும் குழந்தையின் தாய் பானுப்பிரியாவின் சகோதரர் ரமேஷ் ஆகியோர் மீது அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நேற்று வந்தவர் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று நினைக்கிறார்... முதல்வர் விஜய்யை தாக்கும் பின்னனி?