நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் கட்சியில் இருந்து விலகுவதாக தொடர்ந்து அறிவித்து வருகின்றனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்து விலகி வருகின்றனர். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தர்மபுரி மண்டல செயலாளர். அண்ணாதுரை கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில்,நாம் தமிழர் கட்சியில் நிர்வாக ரீதியாக இடைஞ்சல் தரப்பட்டதாகவும், கட்சியை தொடர்ந்து செயல்படாத நிலைக்கு தன் தள்ளப்பட்டதாலும் விலகுவதாக தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் மண்டல செயலாளர் கொடுத்த நிர்வாகிகள் பட்டியல் அனுமதிக்கப்படாமல் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டது எனக் கூறியுள்ளார்.சாதாரண பிரச்சனைகளுக்கு எல்லாம் அறிக்கை தாக்கல் செய்யும் தலைமை ஒருங்கிணைப்பாளர், சுமார் 75 குடும்பங்கள் வேலை இழந்து வறுமையில் வாடிய சூழ்நிலையில் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: பழிவாங்க பெண் வழக்கறிஞர் எடுத்த அஸ்திரம்… தூள் தூளாக்கிய இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ்

கட்சியில் சட்டவிரோதமாக செயல்படுபவர்களை பற்றி விசாரணை செய்த பிறகும் கூட குறைந்தபட்ச நீதி கூட கட்சியில் கடைபிடிக்கப்படவில்லை என கூறியுள்ளார். தமிழ் தேசியம் என்பதும் தலைவர் பிரபாகரன் பற்றியும் தானே உரிமையாளர் போலவும், மற்றவர்களை விருப்பமானால் கட்சியில் இருங்கள் இல்லாவிட்டால் கட்சியில் இருந்து போங்கள் என்ற சர்வாதிகார செயல்கள், தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட 200க்கும் மேற்பட்டோர் கட்சியிலிருந்து விலகுவதற்கு சீமானே வழி வகுத்து கொடுத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சிக்கு பாடுபட்ட ஆண்கள் பெண்கள் என 20 பேரின் பட்டியலை தேர்தலில் போட்டியிடுவதற்காக அனுப்பி வைத்த நிலையில் அவர்களை உதாசீனப்படுத்தி மாவட்ட பிரச்சனைகளை சிறிதும் தெரியாத ஒரு பெண்ணை நாடாளுமன்ற தேர்தலில் நிறுத்தியதாக கூறியுள்ளார். மேலும், காளியம்மாளை பொதுக்கூட்டத்திற்கு அழைத்ததை தலைமையை கேட்காமல் யாரையும் அழைக்க கூடாது என்று கண்டித்ததாகவும் சில சமூக விரோதிகளின் பேச்சைக் கேட்டு தன்னிச்சையாக முடிவெடுப்பது, தன்னை சுற்றி நியாயமான நபர்களை ஏற்பாடு செய்து கொள்ளாதது, இந்த கட்சிக்காக இரவு பகல் பாராமல் உழைத்தவர்களையும் வழக்குகளை எதிர் கொண்டவர்களையும் உதாசனப்படுத்தியதுடன் நூற்றுக்கணக்கான தலைவர்களை அரவணைக்காமல் ஒருதலைப்பட்சமான சர்வாதிகார எண்ணத்துடன் வெளியேறும்படி செயல்படுவது போன்றவற்றால் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்..

மேலும் இன விடுதலைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த தேசிய தலைவருக்கு இணையாக நாள்காட்டிகளிலும், மாத காட்டிகளிலும் தன்னுடைய படத்தையும் அவருக்கு இணையானவர் போல் காட்டுவது, தனக்கு பேச்சாற்றலும் நினைவாற்றலும் இருப்பதால் அவசியமற்ற முறையில் சம்பந்தமில்லாத விஷயங்களை பேசி அதனால் பொதுமக்கள் மத்தியில் அவப்பெயரை சம்பாதிப்பது எந்த தலைவரும் செய்யாத செயலாக செருப்பை எடுத்து காட்டியது உள்ளிட்டவற்றால் அதிருப்தி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சம்மனை கிழிக்கச் சொன்னது யார்?... சீமானின் வழக்கறிஞர் பரபர விளக்கம்.!