நடிகை விஜயலட்சுமி அளித்த புகாதின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில், விசாரணைக்கு ஆஜராகக் கூறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பினர்.
சீமான் வீட்டு கதவில் ஒட்டப்பட்ட இந்த சம்மனை கிழித்ததாக, அவரது பணியாளர் சுபாகர் மற்றும் பாதுகாவலர் அமல்ராஜ் ஆகியோரை நீலாங்கரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுபாகர், அமல்ராஜ் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: நாங்க உங்களுக்கு ஹெட் மாஸ்டர் டா..! நாதக vs தவெக… வைரலாகும் போட்டோஸ்..!
இதையடுத்து, இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில் அரசியல் உள்நோக்கில் தங்கள் கைது செய்யபட்டுள்ளதாகவும், காவல்துறை கூறிய குற்றச்சாட்டு அனைத்தும் தவறனானது. துப்பாக்கிக்கு உரிய அனுமதி இருப்பதால், ஆயுத தடுப்பு சட்ட பிரிவில் கைது செய்ய முடியாது என தெரிவித்துள்ளனர்.

இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,காவல்துறை சார்பில் ஆஜரான அருள் செல்வம், மனு குறித்து பதிலளிப்பதற்காக வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர், காவல்துறையின் இயலாமை காரணமாகவே வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்க கோருவதாக குற்றம்சாட்டினார். மேலும், வழக்கை நாளைக்கு விசாரணைக்கு எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து, மனு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தார்.

சீமான் விவகாரத்தைப் பொறுத்தவரை அவருடைய தடாலடி பேச்சுக்களும், காவல்துறையின் அதிரடி நடவடிக்கைகளும் ஒன்றுக்கொன்று குறைந்ததாக இல்லை. ஏனெனில் உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு சீமான் அளித்த பேட்டி அவ்வாறு தான் இருந்தது. இந்தசூழ்நிலையில் சம்மன் கிழிக்கப்பட்ட விஷயத்தை அரசியல்ரீதியாக சீமான் அணுகி வருகிறார். அதேசமயம், காவல்துறையும் சில நெருக்கடிகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதாகவே தெரிகிறது. இதில் நீதிமன்றமே இறுதி முடிவு எடுக்க முடியும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: திமுகவுக்கு எதிராக ஓட்டுகளை ஒருங்கிணைக்கணும்.. இபிஎஸ் கருத்துக்கு கிரீன் சிக்னல் காட்டிய சீமான்..!