''திருச்செந்தூர் கோயிலில் கூட்டநெரிசலால் உயிரிழந்த ஓம் குமாரின் மனைவி எழுதிய கடிதம் வற்புறுத்தலின் பெயரில் எழுதப்பட்ட கடிதம் போல் உள்ளது” என சந்தேகம் கிளப்பி உள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்தளப்பதிவில், ''திருச்செந்தூர் கோயிலில் கூட்டநெரிசலால் உயிரிழந்த ஓம் குமாரின் மனைவி எழுதியதாக, அமைச்சர் சேகர்பாபு கூறிய கடிதத்தைப் படித்துப் பார்த்தேன். இப்படி ஒரு கடிதம் கொடுத்தால்தான் இறந்தவரின் உடலைக் கொடுப்போம் என்ற வற்புறுத்தலின் பெயரில் எழுதப்பட்ட கடிதம் போல் உள்ளது. ஓம் குமாரின் குடும்பத்தார் ஊடகத்தில் தெரிவித்ததற்கும், கடிதத்தில் உள்ள விவரங்களுக்கும் எத்தனை முரண்கள்.

தங்கள் ஆட்சியின் கையாலாகாத்தனத்தை மறைக்க, பொதுமக்கள் உயிரை மலிவாக எண்ணும் அமைச்சர் சேகர் பாபு, 'அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்' என்பதை உணர்ந்தால் நன்று. கூட்ட நெரிசலில் உயிரிழந்த ஓம் குமார் அவர்களின் குடும்பத்தாருக்கு, 10 லட்ச ரூபாய் நிவாரணமாக, தமிழக அரசு உடனடியாக, வழங்கவேண்டும் என்றும், இனியும் கோவில்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க, முறையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சேகர்பாபு அண்ணா… இதுக்கு என்ன ஸ்கிரிப்ட் வைச்சிருக்கீங்க..? காண்டாக்கும் அண்ணாமலை..!

அண்ணாமலை சந்தேகம் கிளப்பும் , ஓம் குமார் மனைவி எழுதிய அந்தக் கடிதத்தில், ''நானும் எனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தோம். நேற்று 8.30 (இரவு) மணிக்கு திருச்செந்தூர் வந்து பஸ் ஸ்டாண்ட அருகில் உள்ள ஆலயம் லாட்ஜில் ரூம் எடுத்து தங்கினோம். இன்று 16:03:25 தேதி 12 மணிக்கு லாட்ஜில் இருந்து கிளம்பி எனது குழந்தைக்கு மொட்டை மற்றும் காது குத்துவதற்கு சென்றோம். மொட்டை போட்டு முடித்து சாமி கும்பிடுவதற்காக 100 ரூபாய் வரிசையில் நானும், எனது கணவரும், எனது மகளும் சென்றோம். எனது மகள், கணவருடன் முதியோர் வரிசையில்) சென்றார்கள். நானும் எனது கணவரும் எனது மகனும் 100 ரூல் வரிசையில் சென்று கொண்டிருக்கும் போது எனது குழந்தையின் பால் புட்டியை எனது மகளிடம் கொடுப்பதற்காக எனது கணவர் சென்று குளித்துவிட்டு மறுபடியும் 100 ரூபாய் வரிசையில் வந்து எங்களுக்குப் பின்னால் சும்மார் 100 அடி பின் வரிசையில் வந்து கொண்டிருந்தார்.

இங்கு அப்போது எனது கணவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு 100 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.மருத்துவமனையில் மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு எனது கணவர் இறந்துவிட்டதாக கூறினார். எனது கணவருக்கு ஏற்கனவே அடிக்கடி மூச்சு திணறல் வருவதுண்டு. அதற்கு அவர் சிகிச்சை செய்து வந்துள்ளார். எனது கணவர் சேலை வியாபாரம் செய்து வருவதால் வெளியூர் செல்லும் போது அடிக்கடி குச்சசுதிணறல் வருவதுண்டு. நாங்கள் 100 ரூபாய் வரிசையில் முன்னால் சாமி கும்பிட சென்றதால் எனது கணவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது எங்களுக்கு தெரியவில்லை.

கோவில் வெளியே வந்து விசாரிக்கும் போது ஒரு நபர் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக கேள்விபட்டோம் . நாங்கள் சந்தேகபட்டு மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது எனது கணவர் இறந்ததை தெரிந்து கொண்டேன். எனது கணவருக்கு அடிக்கடி முச்சுதிணறல் வருவதுண்டு. எனவே எனது கணவர் இறப்பில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனது கணவரின் உடலை நல்லடக்கம் செய்ய தந்து உதவுமாறு கேட்டுகொள்கிறேன். எனது கணவர் ஓம்குமார் உடலை பிரேதபரிசோதனை செய்யாமல் நல்லடக்கம் செய்ய தந்து உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்'' என அந்தக் கடித்தத்தில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் சாபக்கேடு... 'டூப்' போலீஸ் அண்ணாமலை- வறுத்தெடுத்த சேகர்பாபு..!