இது தொடர்பாக நாராயணன் திருப்பதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "கடந்த பத்து வருடங்களாக மொத்த மாநில உற்பத்திக்கு எதிரான கடனை குறைக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது தமிழ் நாடு அரசு என்று சமீபத்தில் வெளியான தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆய்வறிக்கை குழு (NCAER) அறிக்கை குறிப்பிட்டிருப்பது அதிர்ச்சியளித்தாலும் வியப்பளிக்கவில்லை. தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் கடனால் தமிழகத்தின் நிதி நிலைமை கடும் நெருக்கடி உள்ளாகிக் கொண்டிருக்கிறது என்பதை இந்த குழுவின் அறிக்கை வெளிக்கொண்டு வந்துள்ளது.
வருவாயை பெருக்காமல், செலவுகளை அதிகரிப்பதே இந்நிலைக்கு காரணம் என்பதை தமிழக அரசு உணர வேண்டும். வெறும் டாஸ்மாக்கை மட்டுமே வருவாய்க்கு நம்பியிருக்காமல், மக்களின் மீது சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை திணிக்காமல், ஆக்கபூர்வமாக வருவாய் ஈட்ட வேண்டிய நெடுங்கால திட்டத்தை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ்நாடு உள்ளது. முதலீடுகளை அதிகரிக்காமல் தொழில் முன்னேற்றம் சாத்தியமில்லை என்பதையும், தொழில் முன்னேற்றம் இல்லாமல் வருவாயை பெருக்க முடியாது என்பதையும், தமிழக அரசு உணர வேண்டும்.

லஞ்சம், ஊழல், முறைகேடுகளை குறைக்காமல், ஒழிக்காமல் முதலீடுகளும் தொழில் வளர்ச்சியும் பெருக வாய்ப்பேயில்லை என்பதையும் புரிந்து கொள்ளாமல், தொடர்ந்து மாநில உரிமைகள், மொழி, மதம், ஜாதி என்ற குறுகிய அரசியலை முன்வைத்துக் கொண்டிருக்கும் திராவிட மாடல் திமுகவின் அரசால் நிதி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாது என்பதை உணர வேண்டும். குஜராத், ஒடிசா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் தங்களின் மொத்த உற்பத்திக்கு எதிரான கடனை கட்டுக்குள் வைத்திருக்கும் அதே வேளையில், பஞ்சாப், தமிழ்நாடு, தெலங்கானா, ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்கள் பெரும் நெருக்கடியில் இருப்பது, அம்மாநிலங்களின் பொருளாதார மேலாண்மையை வெளிப்படுத்துகிறது.
கடந்த சில வருடங்களில் குஜராத், மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்கள் தங்களின் கட்டமைப்பில் கவனம் செலுத்தி முதலீடுகளை ஈர்த்து சுலபமாக தொழில் துவங்குவதற்கான வாய்ப்பை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல நிர்வாகம் மற்றும் லஞ்ச, ஊழல் இல்லாத கட்டமைப்பு மட்டுமே இந்த நிலைக்கு காரணம்.
இதையும் படிங்க: எல்லா கட்சி வாக்குகளை சேர்த்தாலும் திமுகவை மிஞ்ச முடியாது.. எதிர்க்கட்சிகளை தெறிக்கவிடும் அமைச்சர் எஸ். ரகுபதி.!

மகாராஷ்டிரா மாநிலம் ஏனைய மாநிலங்கள் அனைத்தும் தமிழகத்தை விட மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த போதிலும், முழுக்க முழுக்க மத்திய அரசின் மீதான வெறுப்பு அரசியல், லஞ்சம், ஊழல் முறைகேடுகள், கட்டமைப்பில் கவனம் செலுத்தாமை, வளர்ச்சிக்கு ஆதரவான பல்வேறு திட்டங்களை செயல்படுத்த விடாமல் மலிவான அரசியலில் ஈடுபட்டது என பல்வேறு காரணங்களால் நாம் பின்னுக்கு தள்ளப்பட்டோம் என்று சொல்வதை நம்மை மற்ற மாநிலங்கள் முன்னுக்கு வந்து கொண்டிருக்கின்றன என்பதே சரியான கருத்தாகும். பல்வேறு திட்டங்களை அரசியல் காரணங்களால் எதிர்ப்பதாலேயே தமிழகத்தின் அருமையான வளர்ச்சியை சிதறடித்து கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு.
என்ன வளம் இல்லை இந்த தமிழ் நாட்டில், ஏன் கடனை அதிகரிக்க வேண்டும் என்ற கேள்விக்கு திராவிட மாடல் அரசு பதில் சொல்லியே தீர வேண்டும். உற்பத்தி மாநிலம் என்று போற்றப்படுகின்ற தமிழகத்தில் உள்ள அனைத்து வசதி, வாய்ப்புகளையும் வீணடித்து கொண்டிருக்கின்ற இந்த திராவிட மாடல் அரசை நினைத்தால் 'நல்லதோர் வீணை செய்தே, அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?' என்ற பாரதியின் வரிகள் தான் நம் கண் முன்னே வருகிறது. என்று தணியும் இந்த வளர்ச்சியின் தாகம்? என்று மடியும் இந்த திராவிட மாடல் மோகம்?" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டு மக்கள் கடும் கோபத்தில் இருக்காங்க..! திமுக ஆர் எஸ் பாரதி அதிரடி பேட்டி