மதுரவாயில் அருகே ஐயப்பாக்கம் ஊராட்சியில் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது வீடுகளுக்கு முன்பு மகளிர் குழுவினர் மற்றும் இல்லத்தரசிகள் கோலமிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுக மட்டுமல்லாமல் பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் கல்வி நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்ததைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் மாணவர் அமைப்புகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது இந்த போராட்டத்தில் இல்லத்தரசிகளும் இணைந்துள்ளனர்.

தற்போது மதுரவாயில் அடுத்த ஐயப்பாக்கம் ஊராட்சியில் பெண்கள் கோலமிட்டு தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்திருக்கிறார்கள். ஐயப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஹவுசிங் போர்ட் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு முன்பு இந்த கோலமானது இடப்பட்டிருக்கிறது. இங்கு இருக்கக்கூடிய மகளிர் குழுவினர் மற்றும் இல்லத்தரசிகள் இணைந்து தற்போது இந்த கோலமிட்டுள்ளனர். குறிப்பாக இந்த கோலங்களில் “தமிழர்களை வஞ்சிக்காதே”, “இந்தியை திணிக்காதே” , “மீண்டும் ஒரு இந்திப் போரை உருவாக்காதே” போன்ற வாசகங்களை அடங்கிய வண்ணமயமான கோலங்களை வரைந்து தகளது எதிர்ப்பை காட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: தேசிய கல்விக் கொள்கையில் திமுகவின் பச்சை நாடகம்… புட்டுப்புட்டு வைத்த சீமான்..!
குறிப்பாக இந்திக்கு எதிராகவும் அந்த மும்மொழிக்கு எதிராகவும் தற்போது தங்களது எதிர்ப்புகளை பெண்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். இதேபோல் தஞ்சையிலும் பெண்கள் தங்களது வீட்டுவாசல்களில் வண்ணக்கோலமிட்டு தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர்.

“தமிழகத்தின் கல்வி உரிமையை மீட்போம்”, “கல்வியில் அரசியல் வேண்டாம்”, “தமிழர்கள் உணர்வுடன் விளையாட வேண்டாம்” “குலக்கல்வியை விரட்டியடிப்போம்” “வேண்டாம் மீண்டுமொரு மொழிப்போர்” என்கிற வாசகங்களுடன் வண்ண கோலமிட்டு ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: 'இந்தி படித்தவர்களே இங்கு வந்து சித்தாள் வேலை தான் செய்கிறார்கள்...' திமுக எம்.பி,. ஆ.ராசா ஆவேசம்..!