பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மதுரை மேலூர் தொகுதியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் ஒப்பந்தத்துக்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் இந்த அரசாணை கொண்டு வரப்பட்டுள்ளது. டங்ஸ்ட்ன் சுரங்க விவகாரம் தொடர்பாக திமுகவை போல் நாங்கள் அரசியல் செய்யவில்லை. ஆக்கபூர்வமான கட்சியாக செயல்பட்டுள்ளோம். டங்ஸ்டன் சுரங்க நடவடிக்கை ரத்து என்பது ஜனநாயகத்தின் வெற்றியாகும். பிரதமர் தமிழகத்தின் மீதுள்ள அன்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இரும்பு 5,300 ஆண்டுகளுக்கு முன்னரே நமது புழக்கத்தில் இருந்துள்ளது என்ற வரலாற்றுச் சான்றை முதல்வர் ஸ்டாலின் வைத்துள்ளார். அதை வரவேற்கிறாம். ஒவ்வொரு தமிழனாக நாம் எல்லோரும் பெருமைப்பட்டுக் கொள்வோம். திருப்பரங்குன்றம் என்பது முருகப்பெருமானின் ஸ்தலம். இன்று ஐ.யு.எம்.எல் கட்சியின் எம்.பி நவாஸ்கனி, திருப்பரங்குன்றம் சென்று மதப்பிரச்சினையை உருவாக்குகிறார். மலையில் வைத்து மாமிசம் சாப்பிட்டு உரிமையை காட்ட நினைக்கிறார். ஒரு எம்.பி. இதை செய்ய கூடாது.. இதை வன்மையாக கண்டிக்கிறோம். ஆளும் திமுகவின் தூண்டுதல் பேரில், ஐ.யு.எம்.எல் எம்.பி இதை செயல்படுத்துகிறார். இதற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இவ்விவகாரத்தில் திருப்பரங்குன்றத்தில் எழுச்சிகரமான நிகழ்வை பாஜக நடத்த உள்ளது" என்று அண்ணாமலை தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுகவை வழிக்கு கொண்டு வர ரெய்டா? யாருக்கு பதில் சொல்கிறார் நயினார் நாகேந்திரன்?