தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து ஜெயலலிதா, கருணாநிதி எனும் இரண்டு ஆளுமைகள் மறைந்தப்பின் பெரும் வெற்றிடம் ஏற்பட்டது. அதிமுக பாஜகவுடன் கைகோர்த்ததால் பெரும் சரிவை நோக்கி நகர தொடங்கியது. மறுபுறம் மக்கள் நலக்கூட்டணி கட்சியினர் திமுக நோக்கி வந்தனர். ஸ்டாலின் தலைமையில் அணி அமைந்தது. தமிழகத்தில் காலூன்ற இதுதான் நேரம் என பாஜக நடவடிக்கையில் இறங்கியது. ரஜினி கட்சித்தொடங்க ஊக்குவிக்கப்பட்டார். தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது நான் நிரப்புவேன் என ரஜினி வந்தார். ஆன்மிக அரசியல் என்றார்.

கட்சி ஆரம்பிக்கும் முன்னரே பல்வேறு சர்ச்சைகள். திடீரென பின் வாங்கினார். கமல் திடீரென கட்சி ஆரம்பித்தார். தகுந்த வழிகாட்டுதல் இல்லாமல் கட்சி தடுமாறி ஒன்றும் இல்லாமல் அறிவாலயத்தில் ராஜ்யசபா சீட்டுக்காக அடக்கமாகிவிட்டார். ஆனாலும் ரஜினிகாந்த் சொன்ன அந்த வெற்றிடம் உள்ளது. ரஜினிக்காக அழைத்து வரப்பட்ட முதல்வர் வேட்பாளர் அண்ணாமலை பின்னர் பாஜகவில் இணைக்கப்பட்டு பாஜக தனி ஆவர்த்தனத்தை தொடங்கியது. அண்ணாமலை தன்னால் முடிந்த அளவுக்கு பாஜகவை நகர்த்தினாலும் அவர் அனைவரையும் அரவணைத்து செல்ல முடியவில்லை. வலுவான என்.டி.ஏ கூட்டணியையே உடைத்து தமிழகத்தில் பாஜக அரசியலை கேள்விக்குறியாக்கி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய் ரூட்டைப் பிடித்து... இளைஞர்கள் ஹார்ட்டை பிடிக்கும் மு.க.ஸ்டாலின்... முதல்வரின் தரமான சம்பவம்!

இதனால் ரஜினி சொன்ன வெற்றிடம் அப்படியே இருந்தது, இந்த நிலையில் தான் தவெகவை தொடங்கினார் நடிகர் விஜய். அவர் ஏதோ ஒரு விதத்தில் தமிழக அரசியலில் மக்களோடு அவ்வப்போது பயணித்து வந்தவர்தான். மக்கள் பிரச்சனைகளில் கருத்து சொல்வதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டியதும், தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நற்பணிகளை செய்து வந்ததும் விஜய்யின் முதல் பணியாக இருந்ததை யாரும் மறுக்க முட்யாது. ஜெயலலிதா வெற்றிக்காக 2011 ஆம் ஆண்டு துணை நின்றவர். பின்னர் ஒதுங்கியவர்.
2021 க்கு பிறகு திமுக ஆட்சி அமைந்ததும் மூன்று ஆண்டுகளில் திமுக கடிவாளம் இல்லாமல் ஓடும் குதிரையாக இருப்பதையும், அதை கூட்டணியில் உள்ள கட்சிகள் கட்டுப்படுத்த இயலாமல் இருப்பதையும், எதிரணி கூட்டணி சிதறி கிடப்பதையும் பார்த்து இது சரியான நேரம் என அரசியலில் குதிப்பதாக அறிவித்தார் விஜய். அதேபோல் 2024 பிப் 2 கட்சி ஆரம்பித்தார். ஆரம்பம் நன்றாக இருந்தது. விஜய் கட்சிக்கு விஜய் தலைவராகவும், புஸ்ஸி ஆனந்த் பொதுச்செயலாளர் ஆகவும், பொருளாளராக வெங்கட்ராமனும் மற்ற மாநில நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். மற்ற அணிகளும் நியமிக்கப்பட்டது.

கட்சிக்கு முக்கியமான பதவி பொதுச்செயலாளர் பதவி. கட்சி விதிப்படி பொதுவாக அதைத்தான் விஜய் எடுத்திருக்க வேண்டும். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட வெற்றிகரமான தலைவர்கள் அதைத்தான் செய்தார்கள். ஆனால் தலைவர் பதவியை தேர்வு செய்து பொதுச்செயலாளர் பதவியை புஸ்ஸி ஆனந்திற்கு வழங்கினார். கட்சிக்கு வியூக வகுப்பாளராக பெரிய அளவில் அரசியல் அனுபவம் இல்லாத ஜான் ஆரோக்கியசாமி பணியமர்த்தப்பட்டார். தான் கடைசி கட்ட படப்பிடிப்பு முடிந்து 2025 க்கு பிறகு நேரடி அரசியலில் தீவிரமாக இறங்குவேன் என விஜய் அறிவித்தார்.

ஓராண்டில் ஆரம்பத்தில் வேகம் எடுத்த தவெக, கட்சி பெயர், கட்சிக்கொடி அறிமுகமப்படுத்தவே காலம் எடுத்தது. கட்சிக்கு அரசியல் ஆலோசகர்களாக மூன்று மூத்த தலைவர்கள் அழைக்கப்பட்டனர். ஆனாலும் அவர்களை இன்றுவரை பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் சோகம். இதுபோல் பல இடையூறுகள் கட்சியின் தலைமை நிர்வாகிகளால் உருவாக்கப்பட்டு கட்சி அடுத்தடுத்து நகராமல் மெதுவாகவே நகர்ந்தது.

இதற்கு பல காரணங்கள் உண்டு என்றாலும் பொதுச்செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்ட புஸ்ஸி ஆனந்த் முதன்மை காரணம் என்கிறார்கள். புஸ்ஸி ஆனந்திற்கு தமிழக அரசியல் தெரியாது என்பது இன்னொரு மைனஸ். விஜய் படபிடிப்பில் இருந்தாலும் பொதுச்செயலாளர் என்கிற முறையில் புஸ்ஸி ஆனந்த் கட்சியின் நிர்வாகிகள் நியமனம், மற்ற நிர்வாகிகளை செயல்பட வழி காட்டுவது, அவ்வப்போது வரும் பிரச்சனைகளில் வியூக வகுப்பாளர் மூலம் வியூக உத்திகளை வகுத்து வேகமெடுக்க வைப்பது, துடிப்பான இளைஞர்கள் கொண்ட கட்சியை துடிப்பாக வைப்பதற்கான பணிகளை செய்வது என பரபர என இயங்க வேண்டிய பொறுப்பில் இருக்கவேண்டியவர். ஆனால் அதை செய்யவில்லை என்பது அவர்மீதான விமர்சனமாக உள்ளது.

ஆரம்பத்திலிருந்தே கட்சியில் உள்ளவர்களை தன் பொறுப்புக்கு கீழே இருக்கவேண்டும், யாரும் தன்னை மீறி இயங்க கூடாது மீறினால் அவர்கள் ஓரங்கட்டப்படுவார்கள் என்கிற பாதுகாப்பற்ற இன் செக்யூரிட்டி மனநிலையில் இயங்க தொடங்கினார் புஸ்ஸி. இது போக போக வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது. ஒரு கட்சி உருவானால் அதிலும் மாற்று அரசியல் கட்சியின் தேவை இருக்கும் நேரத்தில் விஜய் போன்ற பிரபலம் ஆரம்பிக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் நான் என்று நினைக்காமல் மன்ற நடவடிக்கைகள் போல் கட்சியை கருதி நடக்க ஆரம்பித்தார் புஸ்ஸி.

தவெக உருவானவுடன் அதில் இணைய ஆர்வம் கொண்டு மாற்றுக்கட்சியிலிருந்து பலர் விண்ணப்பித்ததாக சொல்கிறார்கள். மாற்றுக்கட்சியிலிருந்து வருபவர்களை நோக்கமறிந்து எடைபோட்டு தகுதியானவர்களை இணைத்து கட்சியில் உள்ள அனுபவமற்ற ஆனால் துடிப்பாக உள்ள இளம் தலைமுறையினருடன் இணைத்து செயலாற்ற செய்வதுதான் ஒரு தலைமைக்கு அழகு. அதிமுக தொடங்கிய நேரம் எம்ஜிஆர் அதை செய்தார். ஆனால் தவெக மீது பெருத்த எதிர்பார்ப்பு இருந்தபோதும் புஸ்ஸி ஆனந்த் அதை செய்யவில்லை.

அரசியல் நடைமுறைகளை நேரடியாக அறிந்திராத விஜய்க்கு இது தெரிந்திருக்க வாய்பில்லை என்பதால் அதை அழகாக பயன்படுத்திக்கொண்டார் புஸ்ஸி ஆனந்த என்கின்றனர் கட்சியின் உள்ளே உள்ளவர்கள். ஆரம்பத்தில் புஸ்ஸி ஆனந்தை எதிர்த்த ஜான் ஆரோக்கியசாமி பின்னர் கைகோர்த்துக்கொண்டார். இவர்கள் இருவரும் கோஷ்டியாக செயல்படுவது அப்பட்டமாக வெளியில் தெரிய ஆரம்பித்தது. அதை சாமர்த்தியமாக மறைக்க முக்கியமான ஊடகங்களை கைக்குள் வைத்து எல்லாம் சரியாக உள்ளது என்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்கினார் ஜான். இதனால் மற்ற நிர்வாகிகள் எதிர்க்கவும் முடியாமல் ஆதரிக்கவும் முடியாமல் அமைதியாக இருக்கும் நிலை ஏற்பட்டது.

தமிழகத்தின் சாபக்கேடு ஊடகங்கள் ஆளுங்கட்சி சார்பு எடுத்து இயங்குவதும், பரபரப்புக்காக செய்திகளை வெளியிடும் போக்கை கொண்டிருப்பதும் தான். ஆளும் கட்சி தனது சகல அதிகாரத்தையும் பயன்படுத்தி ஊடகங்களை கையில் வைத்திருந்ததால் தவெகவின் தடுமாற்றத்தை வரவேற்கும் விதமாக ஊடகங்கள் செயல்பட ஆரம்பித்தன. தவெகவிற்கு அரசியல் ரீதியாக வழிகாட்ட ஊடகங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை, மாறாக தவெகவின் தடுமாற்றத்தை ரசித்தன, செய்தியாக்கின. சில மூத்த செய்தியாளர்கள் தவெக மீது அக்கறை கொண்டவர்கள் விஜய்யை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டனர்.

விஜய்யை சுற்றி ஒரு இரும்பு வேலி அமைத்து எதுவும் அவர் காதுக்கு செல்லாமல் இருக்க இருவரும் அசாத்திய திறமையுடன் செயல்படுவதாக கூறப்படுகிறது. இதனால் கட்சிக்கு வெளியே என்ன நடக்கிறது, தவெக சரியான பாதையில் பயணிக்கிறதா என்பதை விஜய்க்கு விளக்கும் வாய்ப்பும் அக்கறை உள்ளவர்களுக்கு, ஊடகவியலாளர்களுக்கு அரசியலாளர்களுக்கு மறுக்கப்படுகிறது. அதிகாரிகள் சூழ்ந்துக்கொண்டு சொந்தக்கட்சியினரே சந்தித்து தனிமையில் பேச முடியாதபடி முதல்வரை சுற்றி இருப்புத்திரை உள்ளது என்கிற விமர்சனம் ஆட்சிக்கு எப்படி சிக்கலை ஏற்படுத்துகிறதோ அதே நிலையில் விஜய் எனும் பெரும் பூதத்தை பனையூர் சிமிழுக்குள் அடைக்கும் முயற்சியும் நடக்கிறது என்கின்றனர் கட்சியின் மேல் அக்கறை உள்ளவர்கள்.

இந்த நேரத்தில்தான் அக்டோபர் கட்சியின் தொடக்கவிழா மாநாடு பிரம்மாண்டமாக நடந்தது. கட்சியின் கொள்கை பிரகடனத்தை அறிமுகப்படுத்தி விஜய் 45 நிமிடம் பேசினார். பேச்சில் அனல் பறந்தது. அரசியல் வேகம் தெரிந்தது. கூட்டத்திற்கு திரண்ட மக்கள் கூட்டம், குறிப்பாக பட்டியலின மக்கள் ஆதரவு, பெண்கள் ஆதரவு ஆளும் கட்சிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. விஜய்யின் தவெக தடையை உடைத்து ஓட தொடங்கிவிட்டது என அரசியல் விமர்சகர்கள் விமர்சிக்க தொடங்கினர்.

தேர்தலுக்கு குறுகிய மாதங்களே இருப்பதால் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்? என ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் கவனிக்க தொடங்கின. விஜய் மீது பெண்கள், இளைஞர்கள், பட்டியலின, சிறுபான்மை மக்கள் அபிமானமாக இருக்கிறார்கள், ஆளுகின்ற கட்சி மீது மக்களுக்கு உள்ள கோபம் விஜய்க்கு ஆதரவாக பெருகும், அதிமுக, பாஜக உள்ளிட்டவை மீதும் தோழமை கட்சிகள் மீதும் உள்ள நம்பிக்கையைவிட தவெக மீது மக்கள் அதிகம் நம்பிக்கை வைப்பார்கள் என உளவுத்துறை கணித்து ரிப்போர்ட் போட்டது.
தவெகவை வளர விட்டால் திமுகவுக்கு பெரும் சிக்கல் என்று கணித்த திமுக தலைமை செயலில் இறங்கியது. உளவுத்துறை, ஐடி விங், கட்சியின் அதிகாரம், ஆளும் கட்சி அதிகாரம், ஆதரவு ஊடகங்கள், அதன் நிர்வாகிகள் என அனைத்தும் பயன்படுத்தப்பட்டது. இதன் விளைவு தவெக தலைமையின் செயலில் தெரிவதாக விமர்சனம் எழுந்தது. கட்சிக்குள் யாரையும் புதிதாக அனுமதிப்பதில்லை என்கிற வினோத முடிவை விஜய்க்கு அடுத்த இடத்திலுள்ள புஸ்ஸி ஆனந்த் எடுத்தார். இது மற்ற நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் விஜய் காதில் இதை போட முடியுமா? என தவித்தனர்.

விஜய்க்கு இதுபோன்ற விவரங்களை சொல்லவேண்டிய வியூக வகுப்பாளரும் பொதுச்செயலாளர் புஸ்ஸியுடன் கரம் கோர்த்ததால் விஜய் காதுக்கு எதுவும் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. மறுபுறம் வியூக வகுப்பாளருமே தனது பணி குறித்த புரிதல் இல்லாமலே அல்லது புஸ்ஸி ஆனந்தை பகைக்க வேண்டாம் என்பதற்காக எதுவும் செய்யாமல் வந்துபோனதே ஓராண்டில் அதிகம் இருந்தது என்கின்றனர். இப்படியே போனதால் அடுத்து வந்த மூன்று மாதங்கள் கட்சி அசைவற்று இருந்ததால் பனையூர் அரசியல் என மெல்ல விமர்சனம் எழ ஆரம்பித்தது. அது விஜய் காதுக்கும் லேசாக போனதால் உஷார் ஆன அவர் சில நடவடிக்கைகளை எடுத்தார். அதில் முக்கியமானது ஆதவ் அர்ஜுனாவை கட்சிக்குள் கொண்டு வந்தது.

ஆதவ் அர்ஜுனா வரவு அவர் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டால் கட்சி வேகமெடுக்கும் என்கின்றனர். அதே நேரம் கட்சியின் நிர்வாகிகள் நியமனம் விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்தின் தன்னிச்சையான போக்கு காரணமாக நிர்வாகிகள் நியமனம் குறித்த காலத்தில் நடக்கவில்லை, தகுதியானவர்கள் ஓரங்கட்டப்பட்டு ஆதாயம் கொடுப்பவர்கள் தகுதியான இடத்தில் அமரவைக்கப்படுவதும் அவசர கதியில் நடப்பதாகவும், தகுதியுள்ள பல மாற்றுக்கட்சி தலைவர்கள் கட்சியில் இணைய முயற்சி செய்தும் பனையூரின் பெருங்கதவு திறக்காமல் இருப்பதையும் பலகீனமாக சுட்டிக்காட்டப்படுகிறது.
தடைகளை உடைக்கவும், கட்சி மாநில அளவில் நிர்வாகிகளை அவர்களை சுதந்திரமாக செயல்பட விட்டு தவெகவை அரசியல் ரீதியாக வேகமெடுக்க செய்ய வேண்டிய வேலை தவெக முன் உள்ள அடுத்தக்கட்ட முக்கியமான வேலை. அன்றாட அரசியலை கையிலெடுப்பது, கூட்டணிக்கட்சிகள் தவெகவை நோக்கி நகர வைக்கும் சூழ்நிலையை ஏற்படுத்துவதும் அடுத்துள்ள முக்கிய பணி. ஒருநபரை அதிகாரத்தையே மையப்படுத்தி கட்சி இயங்குவது சிக்கலான ஒன்று. கட்சியின் தலைமயை உளவுத்துறை கையிலெடுக்க முயலும், அதை மீறி கட்சியை கொண்டுச்செல்லும் மனவலிமை மிக்க தலைமை தேவை. தற்போது அதிலும் சிக்கல் உள்ளதாக அரசல் புரசல் தகவல்கள் உள்ளது. தலைவராக, நிறுவனராக உள்ள விஜய் அதை கவனித்து தடையை உடைத்திட வேண்டியதும் அவசியமாக உள்ளது.

மற்ற காலம் என்றால் தவெகவின் மீது இத்தனை அழுத்தம் விழாது. வேகம் தேவை என்கிற விமர்சனம் வராது. தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் தவெக மீது அழுத்தமும், கவனமும் விழுகிறது. கட்சி ஓராண்டில் ஆட்சியை பிடிக்கும் என்கிற பெருத்த நம்பிக்கையில் லட்சக்கணக்கான இளைஞர்கள் அணிவகுத்து நிற்கின்றனர். அதை ராணுவமயப்படுத்தி யுத்த களத்தில் நிறுத்துவது தலைமையின் முக்கிய பணி. அதேபோன்று ரசிகர்களை அரசியல்படுத்தி அவர்களை கேடர்களாக மாற்றுவதும், கட்சிக்கு வாக்களிக்க வைப்பதும் முன் உள்ள முதல் பணி. ஆனால் தகுதியில்லாத ஒரு சிறிய யூனியன் பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை தலைமையை நிர்வாகிக்க பணியமர்த்தியது சிக்கலை ஏற்படுத்தியது.

இதை செய்யுமா கட்சித்தலைமை? என்பதுதான் இப்போதுள்ள கேள்வி. ஓராண்டில் பல எதிர்பார்ப்புகளை தவெக மீது அனைவரும் வைத்த நிலையில் அது பெருமளவில் செய்யப்படவில்லை என்பதே தவெக மீதுள்ள விமர்சனம். அதை உடைக்கும் இடத்தில் உள்ள விஜய் கடமையை ஆற்றுவாரா? தேக்கத்தை கண்டறிவாரா? அரசியல் சூழலுக்கு ஏற்ப காய் நகர்த்தி கூட்டணி அமைத்து கட்சியை வெற்றி பெற வைப்பாரா என்பதே ஓராண்டு அனுபவமாக தவெக முன் உள்ள கேள்வி.
மற்றப்படி ஒரு கட்சிக்கு தேவையான கட்டமைப்பை நோக்கி வலுவாக நகர்ந்து வருகிறது தவெக. விஜய் நேரடி அரசியலில் குதித்தால் அதில் மேலும் மாற்றம் நிச்சயம் வரும் என சொல்லலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க: அந்த விஷயத்துல விசிகவும், தவெகவும் ஒன்னுதான்... ஆதவ் சொன்னதை ஆமோதித்த திருமா!