தற்போது வரை 95 பேர் பலியாகிய நிலையில், 130-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கட்டிடங்கள் உருக்குலைந்து காணப்படுகின்றன. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.திபெத்தின் டிங்ரி மாகாணம் மற்றும் சிகாசே பகுதியில் இன்று (7/1/25) காலை 9.05 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.1 என்ற அளவிலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கும் என அமெரிக்க நிலவியல் அமைப்பு கூறியுள்ளது.
சீனாவின் தன்னாட்சி பெற்ற நிலப்பரப்பாக திபெத் பார்க்கப்படுகிறது. கட்டிட குவியலில் புதைந்தவர்களை மீட்கும் பணியிலும், பாதிக்கப்பட்டோரை மருத்துவமனை கொண்டு செல்லும் பணியிலும் வீரர்கள் முழுவீச்சில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார். வீடுகள் தரைமட்டமான இடங்களில் தற்காலிக நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தரைமட்டத்தில் இருந்து மிகவும் உயரமாக இடத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மீட்பு படையினர் அங்கு சென்றடைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வான்வழி மார்க்கமாக ராணுவ வீரர்களும், நிவாரண பொருட்களும் அனுப்பப்பட்டு வருகிறது. ஏறத்தாழ 1500 தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஆண்டின் முதல் பூகம்பம் ..அதிகாலையில் அதிர்ந்த திபெத்.. 6 நிலநடுக்கத்தில் 60 பேர் பலி ..!
திபெத்தின் புனித நகரங்களில் ஒன்றாக இந்த சிகாசே பார்க்கப்படுகிறது. உள்ளுர் மக்களால் சிகாட்சே என்றும் இது அழைக்கப்படுகிறது. திபெத்தியர்களின் ஆன்மிக குருவான பஞ்சன் லாமா தங்கும் மடங்களில் சிகாட்சே முக்கியமானது.

யூரேஷியன் மற்றும் இந்திய கண்டத்திட்டுக்கள் சந்திக்கும் பகுதியில் திபெத் அமைந்துள்ளதால், நிலநடுக்க பாதிப்பு அதிகம் ஏற்படும் பகுதிகளில் ஒன்றாக இது இருக்கிறது. பூமிக்கு அடியில் அவ்வப்போது இந்த இரண்டு கண்டத்திட்டுக்களும் உரசிக் கொள்ளும்போது மேலே நிலநடுக்கம் உணரப்படுகிறது.
2015-ம் ஆண்டு நேபாளத்தை மையமாக கொண்டு 8.1 என பதிவான நிலநடுக்கத்தின் போது இந்த சிகாசே நகரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது இங்கு 55 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக 9 ஆயிரம் பேர் அப்போது உயிரிழந்தனர். 61 ஆயிரம் பேர் மக்கள்தொகை இந்நகரில் மீட்பு பணிகள் முடிந்த பிறகே தற்பேது எத்தனை பேர் உயிரை பறிகொடுத்தனர் என்பது தெரியவரும்.

இதனிடையே திபெத்தில் உண்டான நிலநடுக்கம், நேபாளத்தின் கவரெபலான்ஞ்வொக், சிந்துபாலன்ஞ்வொக், மற்றும் சொலுகும்பு ஆகிய மாவட்டங்களில் உணரப்பட்டது. தலைநகர் காத்மண்டுவிலும் இதன் அதிர்வுகள் இருந்ததால், வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். ஆனால் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. ஒருசில கட்டிடங்கள் மட்டும் விரிசல் விட்டுள்ளதாக காத்மண்டு ஊரக உள்ளாட்சி அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் பகுதியில் இதன் பாதிப்பு ஏற்படவில்லை என்று நேபாள அரசு கூறியுள்ளது.
திபெத், நேபாளத்தைத் தாண்டி இந்தியாவின் பீகாரில் உள்ள மதுபானி நகரிலும் சிறிதளவு அதிர்வு உணரப்பட்டுள்ளதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
அரசியல் ரீதியாக பிளவுபட்டு நிற்கும் திபெத்தை இயற்கை தண்டித்து விடக்கூடாது என்பதே அனைவரின் பிரார்த்தனையாக உள்ளது.
இதையும் படிங்க: ஆண்டின் முதல் பூகம்பம் ..அதிகாலையில் அதிர்ந்த திபெத்.. 6 நிலநடுக்கத்தில் 60 பேர் பலி ..!