மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்வி கொள்கையின் அமலாக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இத்திட்டத்தின்படி பள்ளிகளில் உள்கட்டமைப்புகள் மற்றும் கல்வி செயல்பாடுகள் மேம்படுத்தப்படும்.
இந்தத் திட்டத்தில் இணைந்தால் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும்
புதிய தேசிய கொள்கையில் உள்ள அம்சங்களையும் ஏற்க வேண்டும்
தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை, 8ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ், 5+3+2+2 எனப் பள்ளிகளில் கல்வி நிலை பின்பற்றப்படுகிறது.

இதனால், பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின்படி மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி வழங்கி வருகிறது. இந்த கல்வியாண்டில் இத்திட்டத்தில் நிதியைப் பெற பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணைய வேண்டும் என்று மத்திய அரசு நிர்பந்தித்து வருவதாகவும், அதனால் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் தமிழகத்துக்கு நிதியை வழங்க மத்திய அரசு மறுப்பதாகவும் தமிழக அரசு புகார் கூறி வந்தது.
இதையும் படிங்க: தமிழக மாணவர்கள் உங்களுக்குப் பகடை காயா.? முதல்வர் ஸ்டாலினை வறுத்தெடுக்கும் திருப்பதி நாராயணன்.!
இந்நிலையில் இத்திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடியை பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு பகிர்ந்தளித்துள்ள தகவல் வெளியாகி புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் ரூபாய் 2401 கோடி மத்திய அரசு விடுவிக்கவில்லை. 2023-2024 ஆம் ஆண்டுக்கான நான்காம் தவணை நிதி ரூபாய் 249 கோடி அதேபோல், 2024-2025 ஆம் ஆண்டுக்கான தவணைத் தொகை 2,152 கோடி ரூபாய் என தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்ட கூறுகளை நிறைவேற்ற மத்திய அரசு நிதி தரவில்லை. திட்ட ஏற்பளிப்பு குழு அங்கீகரித்த மத்திய அரசின் 60 சதவீத பங்கான ரூபாய் 2,152 கோடி இதுவரை விடுவிக்கப்படவில்லை. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் தவிர்த்து பிற மாநிலங்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 17,632 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது" என அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழக மக்கள் பழநி யாத்திரையும் போவார்கள்... திராவிட மாடலுக்கு வாழ்த்தும் சொல்வார்கள்.. அமைச்சர் எஸ். ரகுபதி ரைமிங் பேச்சு.!