தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குத்தப்பாஞ்சான் ஊராட்சி பறும்பு நகரில் 15 திருநங்கையர்கள் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். அவர்களுடன் பரும்பு மாடி தெருவை சேர்ந்த மகாலட்சுமி என்கிற திருநங்கையும் தங்கி இருந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்பு இவருடன் சாத்தான்குளம் அருகே உள்ள அரசர் குளத்தைச் சேர்ந்த 35 வயதான சிவாஜி கணேசன் என்ற சைலு என்பவர் வந்து தங்கி உள்ளார். ஆணாக இருந்த சிவாஜி கணேசன், தன்னை பெண்ணாக உணர்ந்துள்ளார். இதனால் அவர் பெண்களின் ஆடைகளை அணிந்து தன்னை ஒரு திருநங்கை போல வெளிப்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மகாலட்சுமி வீட்டில் உள்ள தனி அறையில் சைலு இறந்து கிடப்பதாக கடையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது சைலு மர்ம உறுப்பு அறுபட்ட நிலையில் ரத்தம் வெளியேறிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது தன்னை பெண்ணாக உணர்ந்த சைலு, தனது ஆண் உறுப்பை தானே அறுத்துக் கொண்டு திருநங்கையாக மாற முயற்சித்ததாக அங்கிருந்த திருநங்கைகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வெயிட்டிங் பார் 302..? இன்ஸ்டா ரீல்ஸால் சிக்கிய சிறுவர்கள்.. கொலைக்கு திட்டம் தீட்டியது அம்பலம்..!

எனினும் அவர் பெண்ணாக மாறுவதற்காக தனக்குத்தானே அறுவை சிகிச்சை செய்து கொள்ள முயற்சி செய்து இந்த சம்பவம் நடந்ததா? அல்லது சக திருநங்கைகளால் அவர் அறுவை சிகிச்சை செய்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்டு இறந்துவிட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியானது. மனதளவில் தன்னை பெண்ணாக உணர்ந்த சைலு, தனக்கு ஆண் உறுப்பு இருப்பதை பெரிய குறையாக எண்ணி, தன்னுடன் தங்கி இருந்த திருநங்கைகளிடம் தெரிவித்துள்ளார். அதில் மகாலட்சுமி என்கிற திருநங்கை, ஆண் உறுப்பை நீக்கிவிடலாம் என யோசனை கூறியுள்ளார்.

இதற்கு முன் பல திருநங்கைகளுக்கு இதுபோல ஆண் உறுப்பை வெட்டி உள்ளதாகவும் கூறி உள்ளார். இதை நம்பி சைலுவும், தனக்கும் இதே போல ஆப்ரேசன் செய்யுமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து திருநங்கை மகாலட்சுமி, திருநங்கை மதுமிதா ஆகியோர் சேர்ந்து சைலுவுக்க் சுயமாக ஆப்ரேஷன் செய்துள்ளனர். வீட்டில் இருந்த கத்தியால் அவரது ஆண் உறுப்பை வெட்டி உள்ளனர். இதில் அதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டு சைலு மயக்கமடைந்துள்ளார். தங்களது முயற்சி தவறாய் போனதை உணர்ந்த மகாலட்சுமியும், மதுமிதாவும் மருத்துமனைக்கு அழைத்து செல்லாமல் அங்கேயே விட்டுள்ளனர். இதனால் சைலு இறந்து போனார்.

போலீசாரிடம் சைலு தானே அறுத்துக் கொண்டு இறந்து போனதாக பொய் சொல்லி உள்ளனர். இது அனைத்தும் விசாரணையில் தெரியவந்தது. திருநங்கையர் மகாலட்சுமி, மதுமிதா கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கவனக்குறைவாக செயல்பட்டது, குற்றத்தை மறைத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைதான இருவரும் இதற்கு முன் பலருக்கு இதேபோல் ஆண் உறுப்பை வெட்டி சுயமாக அறுவை சிகிச்சை செய்ததும் தற்போது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இது போன்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவில் செய்யப்படுவதாக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் ரேவதி பாலன் கூறியுள்ளார். ஆப்பரேஷன்களை மேற்கொள்வோரின் பெயர், விபரம் தகவல்கள் ரகசியம் காக்கப்படும் என்றும், இதற்காக, அவர்களுக்கு எந்த செலவும் கிடையாது என்றும் கூறினார். இத்தகைய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு இல்லாததால், சுயமாக விபரீத செயல்களில் ஈடுபட்டு, இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: போலீசை தாக்கி விட்டு தப்பிய ரவுடிகள்.. தேடிப்பிடித்து கைது செய்த போலீஸ்.. மதுபோதையில் இருந்தவர்களுக்கு மாவுக்கட்டு..!