சிதம்பரம் அருகே துணிசிரமேடு கிராமத்தில் சிவகுமார் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இந்த பங்கில் நேற்று மதியம் அதே கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் (வயது 33) மற்றும் ராஜேஷ் (வயது 21) ஆகியோர் போதையில் பெட்ரோல் போட வந்ததாக கூறப்படுகிறது. அப்போது பணியில் இருந்த ஊழியர்கள், இளைஞர்க இருவரும் போதையில் அவதூறாக பேசியதாலும், நிதானம் தவறி நடந்ததாலும் அச்சமடைந்து பெட்ரோல் போட மறுத்து விட்டதாக தெரிகிறது.
ஊழியர்கள் பெட்ரோல் போடாததால், இளைஞர்கள் இருவரும் அவதூறாக பேசி விட்டு சென்றனர். இந்த நிலையில் மீண்டும் இரவு நேரத்திலும் சுந்தர் மற்றும் ராஜேஷ் இருசக்கர வாகனத்தில் அதே பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் போட வந்துள்ளனர். அப்போது பணியில் இருந்த ஆஷிக் என்ற ஊழியர் எதற்காக மதியம் அவதூறாக பேசினீர்கள்? என தட்டிக் கேட்டுள்ளார்.

அப்போது போதையில் இருந்த இளைஞர்கள் இருவரும் பங்கில் பணிபுரியும் ஊழியர் ஆகாஷை சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும் அவதூறாக பேசினர். அப்போது அருகில் இருந்தவர்கள் அவர்களை தடுத்து அனுப்பி வைத்தனர். ஆத்திரம் தீராத இளைஞர்கள் வீட்டிற்கு சென்று மீண்டும் அரிவாள் உடன் ஊழியரை வெட்ட வந்தனர்.
அப்போது இளைஞர்களின் உறவினர் ஒருவர் தடுத்து நிறுத்திய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தாக்குதலுக்கு உள்ளான ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: பெட்ரோல் கேட்டா தர மாட்டியா? ஊழியர்களை தாக்கிய போதை கும்பல்.. கைது செய்த போலீஸ்..!

இந்த நிலையில் இதுகுறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளார்கள் மற்றும் ஊழியர் தரப்பில் சிதம்பரம் தாலுக்கா போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூரில் பதுங்கி இருந்த பொழுது அவர்களை சிதம்பரம் சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் தர்ப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; 10.4.2025 ஆம் தேதி சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்திற்கு உட்பட்ட துணிசிரமேடு பெட்ரோல் பங்கில் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் பெட்ரோல் ஊழியர் சாதிக் என்பவரை அசிங்கமாக திட்டி, தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் IPS அவர்கள் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பிறப்பித்த உத்தரவின்பேரில் சிதம்பரம் தாலுக்கா காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்முருகன் அவர்கள் இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்து வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 1.சுந்தர் வயது 28, த/பெ சேகர், 2.ராஜேஷ் வயது 23, துணிசிரமேடு ஆகியவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: அதிபர் ட்ரம்ப் வரிவிதிப்பால் உலக வர்த்தகம் 3% சுருங்கும்.. ஐநா பொருளாதார வல்லுநர் எச்சரிக்கை..!