தேசிய தலைநகர் டெல்லியை போலவே வாரணாசி-பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையத்தை அமைக்க உத்தரப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் முக்கிய பகுதிகளின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், 'டெல்லி மாடலை' பின்பற்றி பிரயாக்ராஜ்- வாரணாசியை இணைக்கும் புதிய மேம்பாட்டு ஆணையத்தை உருவாக்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இந்தப் புதிய ஆணையத்தில் பிரயாக்ராஜ், வாரணாசி, சந்தௌலி, காஜிப்பூர், ஜான்பூர், மிர்சாப்பூர், படோஹி ஆகிய ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியாக இருக்கும்.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தின் ஆன்மீக, கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய ஆன்மீக சுற்றுலாப் பகுதி மண்டலத்தை அறிவித்துள்ளார். இந்த ஆன்மீக சுற்றுலா பகுதிக்குள் ஏழு மாவட்டங்கள் ஒருங்கிணைக்கப்படும்.பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவையொட்டி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: ‘சனாதனத்தின் மீது நம்பிக்கையுள்ள எந்த முஸ்லிமும் கும்பமேளாவுக்கு வரலாம்’: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அழைப்பு...

பிரயாக்ராஜ், வாரணாசி, ஆக்ரா நகராட்சிகளுக்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது குறித்த அறிவிப்பும் அமைச்சரவைக் கூட்டத்தில் இடம்பெற்றது. இந்த திட்டம் நகர்ப்புற வளர்ச்சியை விரைவுபடுத்துவதையும், இந்த நகரங்களில் குடிமை வசதிகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவின்போது நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், “இந்த ஆன்மீகச் சுற்றுலாப் பகுதி உருவாக்கம் முக்கிய இடங்களை ஒருங்கிணைக்கும். அதேவேளை அந்தப்பகுதிகளில் உள்ள வரலாற்று, ஆன்மீக முக்கியத்துவத்தையும் பாதுகாக்கும்” என்றார்.
இந்த மாவட்டங்களை ஆன்மீக சுற்றுலாப் பகுதிகளாக உருவாக்குவது அவற்றின் தனித்துவமான ஆன்மீக அடையாளத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்த முயற்சி கோயில்கள், சடங்குகள், மரபுகளைப் பாதுகாப்பதை முக்கியநோக்கமாக் கொண்டுள்ளது. நவீனமயமாக்கலுக்கு மத்தியில் அப்பகுதியின் கலாச்சார பாரம்பரியம் அப்படியே இருப்பதையும் உறுதி செய்யும்.

"இது ஆன்மீகச் சுற்றுலா யாத்ரீகர்களை ஈர்ப்பது மட்டுமல்லாமல், கலாச்சாரப் பாதுகாப்பை, உள்கட்டமைப்பு மேம்பாட்டோடு இணைப்பதன் மூலம் நிலையான சுற்றுலாவையும் ஊக்குவிக்கும்" என்று முதலமைச்சர் ஆதித்யாநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தின் கலாச்சார அடையாளத்தை மேம்படுத்துதல், அதை ஆன்மீக சுற்றுலாவுக்கான மையமாக மாற்றுதல் என்ற அரசின் பரந்த தொலைநோக்குப் பார்வையுடன் இந்த அறிவிப்பு ஒத்துப்போகிறது. இந்த ஆன்மீக சுற்றுலா பகுதி நாடு முழுவதிலுமிருந்து யாத்ரீகர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும். உள்ளூர் பொருளாதாரங்களை மேம்படுத்தும். கலாச்சாரப் பாதுகாப்பை வளர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்மீக சுற்றுலா பகுதிகளின் வளர்ச்சியை நிறைவு செய்யும் வகையில், சேர்க்கப்பட்ட மாவட்டங்களில் இணைப்பு, நகர்ப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல உள்கட்டமைப்பு திட்டங்களை முதல்வர் யோகி விவரித்துள்ளார். இந்த முயற்சிகள், சுற்றுலா பயணிகளுக்கு தடையற்ற பயணம், உலகத்தரம் வாய்ந்த வசதிகளை உறுதி செய்வதற்கான ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.
பிரயாக்ராஜை மிர்சாபூர், படோஹி, காசி, சந்தௌலி மற்றும் காஜிபூர் ஆகியவற்றுடன் இணைக்கும் வகையில் கங்கா விரைவுச் சாலை நீட்டிக்கப்படும். இறுதியில் பூர்வாஞ்சல் விரைவுச் சாலையுடன் இணைக்கப்படும். கூடுதலாக, வாரணாசி, சந்தௌலியிலிருந்து சோன்பத்ரா வரை விரைவுச் சாலையை மேலும் நீட்டிக்கவும், தேசிய நெடுஞ்சாலை வலையமைப்புடன் ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் திட்டங்கள் உள்ளன.

கங்கை நதியின் மீது ஆறு வழிப் பாலம் கட்டுதல், பிரயாக்ராஜை ஜூசியுடன் இணைக்கும் நான்கு வழிப் பாலம், யமுனை நதியின் மீது ஒரு கைப்பாலம் கட்டுதல் ஆகியவை பிற முக்கிய திட்டங்களில் அடங்கும். இந்த உள்கட்டமைப்பு முன்னேற்றங்கள் பயணத்தை எளிதாக்கும். ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'திராவிடம் என்பது ஏமாற்று வேலை. அது இனி தமிழகத்தில் உதவாதது...' சீமானுக்கு ராதாரவி தீவிர ஆதரவு..!