மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாவார்பட்டியில் நேற்று முன்தினம் டாஸ்மார்க் கடை ஒன்றில் காவலர் முத்துக்குமார் மது அருந்திக் கொண்டு இருந்தார். அப்போது அருகில் மது அருந்திக் கொண்டு இருந்த கஞ்சா வழக்கில் கைதாகி வெளியே வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கஞ்சா வியாபாரிகள் காவலர் முத்துக்குமாரை கல்லால் தாக்கி படுகொலை செய்தனர். இந்த தாக்குதலின்போது காவலருடன் உடனிருந்த அவரது உறவினரான ராஜாராம் என்பவரும் படுகாயமடைந்தார். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் நேற்று குற்றவாளிகளை கைது செய்ய கோரியும், அரசின் சார்பில் உரிய நிவாரணம் வழங்க கோரியும், காவலரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். காவலரின் உடல் வைக்கப்பட்டிருந்த, உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு உறவினர்கள் திரண்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: மதுரையில் காவலர் அடித்துக்கொலை.. மதுக்கடைகளை மூட மனமில்லையா..? அன்புமணி ஆதங்கம்..!

சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் சாலை மறியலில் ஈடுபட்டனர். உசிலம்பட்டி தேவர் சிலை முன்பும் ஒரு தரப்பினர் மறியலில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் சிவகங்கை மாவட்ட எஸ்.பி. அஷிஷ் ராவத், உசிலம்பட்டி கோட்டாச்சியர் சண்முக வடிவேல், உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான அதிகாரிகள் தொடர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

திமுக சார்பில் 5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் எனவும், அரசின் நிவாரண நிதி மற்றும் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என உசிலம்பட்டி திமுக நிர்வாகிகள் உறுதியளித்தனர். அதன்பின் காவலரின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையிலிருந்து ஊர்வலமாக சொந்த ஊரான கள்ளப்பட்டி மயானத்திற்கு காவலரின் பூத உடல் கொண்டு செல்லப்பட்டு விருதுநகர் மாவட்ட எஸ்.பி., கண்ணன் தலைமையில் காவல்துறையின் அரசு மரியாதை செய்யப்பட்டது. பின்னர் 21 குண்டுகள் முழங்க காவலரின் உடல் உறவினர்கள் முன்னிலையில் எரியூட்டப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தேனி மாவட்டம் உசிலம்பட்டி அருகே காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 பேர் கம்பம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கம்பம் பகுதியில் கொலையாளிகள் அடையாளம் கண்டு பிடிக்க முயன்றனர். அப்போது போலீசாருக்கும், கொலையாளிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் பொன்வண்ணன் (35) என்பவருக்கு காலில் அடிபட்டது. இரண்டு பேர் தப்பி ஓடினர். இந்த சம்பவத்தில் போலீசார் ஒருவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கம்பம் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சினிமா வசனம், வெட்டி பேச்சு.. திறனற்ற பொம்மை முதல்வர்.. காவலர் கொலையில் இபிஎஸ் கண்டனம்..!