விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனாவும், அதிமுகவில் இருந்து விலகிய சிடிஆர் நிர்மல்குமாரும் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.
ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார்:
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஓராண்டாகப்போகிறது. தொடங்கிய நாள் முதலே, தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது அக்கட்சி. பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும் தொடர்ந்து தவெகவில் இணைந்த வண்ணம் உள்ளனர்.

இதையும் படிங்க: 'கட்சி கொடி கட்டியதாலேயே திமுக என ஆகிவிடாது..!' முட்டுக் கொடுக்கும் திருமா..!
வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனரும் விசிகவில் முன்னாள் துணைப் பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜுனா விரைவில் தவெகவில் இணைவார் என தகவல் கசிந்தது. இவருக்கு, தேர்தல் யுக்திகளை வகிக்கும் முக்கியமான பொறுப்புகளை வழங்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.
இதுதொடர்பாக நேற்று பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜயைச் சந்தித்த ஆதவ் அர்ஜுனா நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது தவெகவின் வளர்ச்சி பணிகள், 2026 தேர்தல் யுக்தி மற்றும் கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதன் தொடர்ச்சியாக இன்று காலை மீண்டும் பனையூர் அலுவலகம் வந்த அவர் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணைந்தார்.

அதேபோல அதிமுக ஐ.டி.விங்க் இணைச்செயலாளரான சிடிஆர் நிர்மல் குமாரும் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இருவருக்கும் கட்சியில் முக்கியப் பதவி வழங்கப்படவுள்ளதாகவும், இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருவரையும் கட்சியில் சேர்க்க காரணம் என்ன?
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியதில் இருந்தே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஜான் ஆரோக்கியமசாமி ஆடியோ லீக் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக புஸ்ஸி ஆனந்த் கட்சியை முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். விஜயை யாரும் முன்னிலைப்படுத்துவதில்லை, வரும் தேர்தலில் தவெகவிற்கு 2 சதவீத வாக்குகள் கூட கிடைக்காது என ஜான் ஆரோக்கியசாமி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அடுத்த ஆடியோவில் தவெகவின் வளர்ச்சிக்காக உட்கட்சிக்குள் விவாதிக்கப்படும் விஷயங்கள் கட்சியை விட்டு வெளியே செல்வதாக பேசியிருந்தார் ஜான் ஆரோக்கியசாமி.

இந்த ஆடியோ லீக் விவகாரம் தொடர்பாக உடனடி விசாரணையை விஜய் தரப்பு தொடங்கிய நிலையில், ஜான் ஆரோக்கிய சாமி தான் தவெகவில் இணைய காத்திருக்கும் பிற கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் பட்டியலை லீக் செய்ததாக தகவல் கிடைத்துள்ளது. ஜான் ஆரோக்கியசாமிக்கு கடிவாளம் போட திட்டமிட்டு வந்த விஜய்க்கு, அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா சாதகமானதாக அமைந்தது. குறிப்பாக அன்றைய தினம் ஆதவ் அர்ஜுனா திமுகவிற்கு எதிராக பேசியதை வலுவாக பாராட்டிய விஜய், அவருடன் தனியாகவும் 15 நிமிடம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனிடையே, தவெகவில் பதவிக்கு பணம் வசூலிப்பதாகவும், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஒத்துழைப்புடன் சில மாவட்ட பொறுப்பாளர்கள் இச்செயலில் ஈடுபடுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதனால் கடும் அப்செட்டில் இருந்த விஜய் கட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் பிற கட்சியில் இருந்து தவெகவிற்கு வர விரும்பம் உள்ளவர்களைத் தட்டித்தூக்க முடிவெடுத்துள்ளார்.

குறிப்பாக சோசியல் மீடியாவில் தவெக குறித்து பரபரப்படும் அவதூறுகளை தடுக்கவும், திறமையாக கையாளவும் அனுபவமுள்ள நபர் வேண்டுமென விஜய் யோசித்துள்ளார். அந்த வகையில் தான் பாஜக, அதிமுக என இரு பெரும் கட்சிகளின் ஐ.டி.விங்கிலும் முக்கிய பொறுப்பில் இருந்த சிடிஆர் நிர்மல் குமாரைச் சந்திக்க கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: விஜயுடன் இணைந்த ஆதவ் அர்ஜூன்… கூட்டணி வைத்த குருமா… வெளியே சிரித்து, உள்ளூர வருத்தப்படும் திருமா..!