சீமான் நாதக-வின் தலைமை ஒருங்கிணைப்பாளர். தமிழக அரசுக்கு எப்போதும் தலைவலியாக இருப்பவர். தமிழக அரசின் மக்கள் விரோத விஷயங்களை போட்டுடைப்பவர், தமிழ் தேசிய பாதையில் பயணித்து திராவிட அரசியலுக்கு எதிராக இவரது ஆவேச பேச்சு லட்சக்கணக்கான இளைஞர்களை ஈர்த்து இவர் பின்னால் நிற்க வைத்துள்ளது. இவரது ஆவேச பேச்சு, கருத்தாளமிக்க பேச்சால் கட்சி 8% வாக்குகளை வாங்கி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக தமிழகத்தில் உள்ளது.

சீமானுக்கு சிக்கலாக உள்ள விஷயம் நடிகையுடனான தொடர்பு, அவர் கொடுத்த புகார். இந்த புகார் ஒவ்வொருமுறையும் உயிர் பெறும் பின்னர் அவர் பின் வாங்குவார். பின்னர் திடீரென கிளம்பி வருவார். பின்னர் அவர் வழக்கு கையிலெடுத்துக்கொள்ளப்படும். இப்படியே பத்தாண்டுகள் ஓடிவிட்டது. இதில் சீமான், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ”10 ஆண்டுகள் ஆனாலும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது சம்பந்தப்பட்ட பெண்ணே பின் வாங்கினாலும் இது போன்ற சென்சிடிவான வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும். காவல்துறை 12 வாரத்திற்குள் விசாரித்து சார்ஜ் ஷீட் ஃபைல் பண்ண வேண்டும்” என்று உத்தரவிட்டது.
இதையும் படிங்க: என்னை ஜெயில்ல போடுங்க.. ஓய்வில் நன்றாக படிப்பேன் - சீமான் பரபரப்பு பேட்டி

இந்த உத்தரவால் சீமானுக்கு நெருக்கடி வரும் என்றெல்லாம் ஊடகங்கள் பேசின. 6 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்கும் என்றெல்லாம் திடீர் பாரபரப்பு செய்திகளானது. ஆனால் இந்த விவகாரத்தில் சீமான் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார். அங்கு உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது. இந்த நேரத்தில் திடீரென சென்னை போலீசார் சீமானுக்கு சம்மன் அளித்தனர். அந்த சம்மனை வாங்கிய சீமான் விசாரணைக்கு ஆஜராகவில்லை. 4 வாரம் அவகாசம் கேட்டிருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் நாளைக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அவர் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. அதில் சம்மனுக்கு ஆஜராகா விட்டால் கைது செய்யப்பட வாய்ப்பு உண்டு என்ற ரீதியில் சமமன் அளிக்கப்பட்டு இருந்தது. இது 41 ஏ கீழ் வழங்கப்படும் சம்மனாகும். இந்த சம்மனை பெறுபவர் விசாரணையின் முடிவில் கைது செய்யப்படும் வாய்ப்பும் உண்டு. இந்த நிலையில் இரண்டாவது சம்மனுக்கு ஆஜராக மாட்டேன், உங்களால் முடிந்தால் கைது செய்து கொள்ளுங்கள், என்று சீமான் தெளிவாக தெரிவித்துள்ளார்.
இதில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்பதை முதலில் பார்ப்போம். பொதுவாக 41 ஏ-ன் கீழ் சம்மன் கொடுத்தால் ஆஜராக விட்டால் போலீசார் கைது நடவடிக்கை எடுக்க தடை இல்லை. சீமான் விவகாரத்தில் பத்தாண்டுகளுக்கு மேல் உள்ள வழக்கில் உயர் நீதிமன்றம் விசாரித்து 12 வாரத்திற்குள் சார்ஜ் ஷீட் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில் சீமானுக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு நாலு வார கால அவகாசம் சீமான் கேட்டுள்ளார். சீமான் ஒரு பிரபலம், அரசியல் கட்சி தலைவர் என்கிற முறையில் அவர் கோரிக்கையை காவல்துறை பரிசீலிக்கலாம். காரணம் 12 வார காலம் அவகாசம் இருக்கும் நிலையில் 4 வார கால அவகாசம் கொடுக்கலாம்.

அவகாசம் கேட்டதற்கு முக்கிய காரணமாக உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் பிறகு சீமானுக்கு சம்மன் கொடுத்து விசாரணைக்கு அழைப்பது சிக்கலாக முடியும் என்பது காவல்துறைக்கு தெரியும். அதே நேரம் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் எப்படி பார்க்கும் என்பது குறித்தும் பார்ப்போம். சீமானுக்கு இந்த வழக்கில் பெரிய அளவில் சட்ட பிரச்சனை வராது என விவரம் அறிந்தோர் சொல்கின்றனர். காரணம் ஒரு குற்றவழக்கில் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் 2011 கொடுத்த புகாரில் இரண்டு முறை வழக்கை வாபஸ் வாங்கியுள்ளார். ஒருவருக்கொருவர் இணங்கியே உறவு வைத்துள்ளனர் என்பதும் ஒரு வாதம்.

10 ஆண்டுகளுக்கு மேல் ஆன வழக்கு, குறிப்பாக சம்பந்தப்பட்ட வழக்கை பலமுறை வாபஸ் வாங்கினால் இந்த வழக்கு முக்கியத்துவம் உள்ளதாக கருதப்படாது. பத்தாண்டுகளானதால் இந்த வழக்கை விசாரணை எடுப்பதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா? என்பது தெரியாது. அப்படி ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கலாம். இது ஒரு வகை. இன்னொரு வகை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது, வழக்கு நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும், 12 வார காலத்திற்குள் சார்ஜ் ஷீட்டை காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாலும் அதன் பிறகு சீமான் வழக்கை நடத்தலாம்.
இது எவ்வளவு நாட்கள் நடக்கும், எத்தனை ஆண்டுகள் என்பது தெரியாது பல கட்டங்கள் உண்டு. எனவே இந்த வழக்கால் சமீபத்தில் சீமானுக்கு எந்தவித பிரச்சனையும் வராது என்கின்றனர். ஒருவேளை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து விட்டால் பிறகு இந்த விசாரணைக்கு வாய்ப்பே இருக்காது என்றும் கூறப்படுகிறது. சீமான் தரப்பில் ”நான் நடிகர், இயக்குநர், அரசியல்வாதி. நான் முறையாக இந்த வழக்கில் ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன் வழக்கு சம்பந்தப்பட்ட நடிகை, வழக்கை பலமுறை வாபஸ் பெற்றுள்ளார். ஆனால் இந்த வழக்கை வைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் அதற்கு உயிர் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்பதை கோரிக்கையாக வைத்திருந்தது.

உச்ச நீதிமன்றத்திலும் அதே கோரிக்கையை அவர்கள் தரப்பு வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சீமானுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காக இன்று இரண்டாவது சம்மன் அவருடைய வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சீமான் தரப்பு என்ன தவறு செய்கிறார்கள் என்று பார்த்தால் சம்மனுக்கு சாதாரணமாக சீமான் ஆஜராகிவிட்டு வரலாம். இதனால் எந்த வித பாதிப்பும் அவருக்கு நேராது. அதை மீறி அவரை கைது செய்ய விசாரணைக்கு ஆஜர் ஆனவரை கைது செய்தால் அது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்.
ஆகவே விசாரணைக்கு பின் கைது செய்ய வாய்ப்பில்லை. மற்றொருபுறம் சம்மன் ஒட்டப்பட்ட இடத்தில் சம்மனை கிழித்ததும், விசாரணைக்கு வந்த போலீசாரிடம் காவலாளி முரண்டுபிடித்ததும் சீமானுக்கும் அவப்பெயராக அமைந்துள்ளது. சட்ட நடைமுறைகள் வேறு, அரசியல் வேறு. சட்ட நடைமுறையின் படி சம்மனை போலீசார் கொடுக்கும் பொழுது அதை வாங்கி விட்டு அனுப்பி விட்டாலே எந்தவித பிரச்சனையும் வராது. ஆனால் அதற்கு எதிராக இயங்கும் போது தான், நீதிமன்றம் அதை ஒரு சீரியசான பிரச்சினையாக பார்க்கும்.

வழக்கில் சீமான் தரப்பே போலீசுக்கு ஆதரவாக சில செயல்களை செய்துள்ளது போல் இந்த நடவடிக்கைகள் உள்ளது. இது சாதாரணமாக உள்ள விஷயம். இப்பொழுது சம்மனுக்கு சீமான் ஆஜராக மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். அதற்குப்பின் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். நாளை சம்மனுக்கு சீமான் ஆஜராகவில்லை என்றால் 41 ஏ கீழ் கொடுக்கப்பட்ட சம்மன், அதுவும் இரண்டாவது சம்மனுக்கும் ஆஜராகவில்லை என்பதை காரணம் காட்டி சீமானை காவல்துறை கைது செய்யலாம். நாளை வெள்ளிக்கிழமை என்பதால் அவர் கைது செய்யப்பட்டு சனி, ஞாயிறு அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இல்லை. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படவும் வாய்ப்புண்டு.
அதையும் மீறி நீதிமன்றத்தில் சீமான் தரப்பு ஜாமீன் தாக்கல் செய்தால் அதுபற்றி நீதிபதிகள் தான் முடிவு எடுப்பார்கள். ஆகவே திங்கட்கிழமை வரை அவருக்கு ஜாமீன் கிடைக்காது. சீமானை கைது செய்தால் அரசியல் ரீதியாக அரசுக்கு கெட்ட பெயர். சீமானுக்கு அதனால் அனுகூலம் என்றால் அரசு அவரை கைது செய்ய வாய்ப்பில்லை. அதேநேரம் சீமானை கைது செய்தால் அதுவும் பெண் விவகாரம் என்றால் பிரச்சனை ஒன்றும் இல்லை என்று முடிவு எடுத்தால் சீமான் கைது செய்யப்படலாம். அப்படி கைது செய்யப்பட்டால் அவருக்கு திங்கட்கிழமை ஜாமீன் கிடைக்கும் என்றால், ஜாமீன் கிடைக்காமல் இருக்க பெரியார் குறித்த அவதூறு பேச்சுக்கும், வெடிகுண்டு வீசுவேன் என்ற பேச்சுக்கும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அந்த சம்மனிலும் சீமான் ஆஜராகவில்லை. ஆகவே அதிலும் சிறைக்குள்ளே வைத்து அவரை கைது செய்ய வாய்ப்பு இருக்கிறது.

அடுத்தடுத்த வழக்குகள் மூலம் சீமானை கைது செய்வதால் சீமானுக்கு ஜாமீன் கிடைப்பது அவ்வளவு எளிதாக இருக்காது. சம்மனுக்கு ஆஜராகாததால் போலீசார் அதை ஒரு காரணமாக காட்டவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் சீமான் கைதுக்கு பின் இது போன்ற விஷயங்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகவே சம்மனுக்கு ஆஜராகாமல் சீமான் தவிர்ப்பது அவருக்கு சரியான நடைமுறை அல்ல. சம்மனுக்கு ஆஜராகி விட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கை எடுத்து செல்வதன் மூலம் அவருக்கு வேண்டிய நிவாரணம் கிடைக்கும். ஒருவேளை சீமான் கைது செய்யப்பட்டு உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்தால் உச்ச நீதிமன்றம் அரசு மேல் கோபப்படவும் வாய்ப்பு உள்ளது.

காரணம் வழக்கை தடை செய்ய கோரி மேல்முறையீடு செய்யும் பொழுது அவ்வளவு அவசரமாக சீமானை அழைத்து விசாரிக்க உங்களுக்கு என்ன அவசியம் நேர்ந்தது என்கின்ற கேள்வியை உச்ச நீதிமன்றம் வைக்கலாம். காரணம் ஒரு வழக்கு அதை தடை செய்ய கோரி மேல்முறையீடு வரும் பட்சத்தில் அந்த வழக்கிற்கு இடையூறு செய்யும் விதமாக மேல் நீதிமன்றத்தை மதிக்காத வகையில் போலீசார் செயல்படுகிறார்கள் என்றால் அதன் நோக்கம் வேறு என்று நீதிமன்றம் எடுத்துக் கொள்ளும். இதனாலும் அரசுக்கு சிக்கல் வரலாம். ஆகவே சீமான் கைது செய்யப்படுவாரா? மாட்டாரா? என்பதில் பல சிக்கல்கள் உள்ளதால் இது குறித்து முறையான சட்ட ஆலோசனையை தமிழக காவல்துறை எடுத்து வருகிறது என்றே கூறலாம்.
இதையும் படிங்க: குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அரசியல்வாதிகள் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க முடியாது - மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம்