இந்திரா காந்தி காலத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர், இந்திராவுக்கு எதிராக திமுக நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தில் கல்வீச்சில் இந்திராவை காத்து தலையில் பலத்த கல்லடிப்பட்டவர் நெடுமாறன். தேசிய பாதையில் பயணித்தவர் பின்னர் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளராக மாறினார். இன்றளவும் நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர் பழ.நெடுமாறன். இவர் பெரியாரையும் பார்த்துள்ளார், பிரபாகரனையும் பார்த்துள்ளார். சீமான் பிரபாகரனை போற்றும் அதே வேளையில் திராவிடத்தை எதிர்க்கிறேன் என பெரியாரையும், அவர் கருத்தையும் கொச்சைப்படுத்தும் செயலில் இறங்கியதால் இருதரப்பிலும் மோதல்கள் வலுத்துள்ளது.
பழ.நெடுமாறன் பெரியார் காலத்தில் அவரது அரசியலை பார்த்தவர். எதிர்முனையில் காங்கிரஸ் தலைவராக அரசியல் செய்தவர். ஆனாலும் முற்போக்கு கருத்துகளுக்கும் பெரியாரின் சிந்தனைகளையும் வரவேற்றவர். அதேப்போன்று பிரபாகரனை நேசித்தவர், இன்றுவரை விடுதலைப்புலிகளின் ஆதரவாளராக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவராக இருக்கும் பழ.நெடுமாறன் தமிழ் தேசியப்பாதையில் பயணித்தாலும் பெரியாரின் பங்களிப்பை மறுக்காதவர். தமிழகத்தில் தற்போது நடக்கும் கருத்து மோதல் என்கிற பெயரில் மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி மலிவு அரசியல் செய்யப்படுவதை பழ நெடுமாறன் கடுமையாக கண்டித்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

”உலகத் தமிழர்களின் இருபெரும் ஆளுமைகளான பெரியாரையும், பிரபாகரனையும் ஒருவருக்கெதிராக மற்றொருவரையும் நிறுத்த செய்யப்படும் முயற்சி குறுகிய அரசியல் ஆதாய நோக்கத்தோடு செய்யப்படுவதாகும். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இதையும் படிங்க: ’யார் அந்த சார்?’ விவகாரத்தை பின்னுக்கு தள்ளிய சீமானின் பெரியார் விமர்சனம்...யாருக்கு லாபம்?- ஒரு அலசல்
பெரியார் அவர்கள் பெண்ணுரிமைக்காகத் தொடர்ந்து போராடியவர். அவரது இக்கொள்கையை நிறைவேற்றும் வகையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பெண்களையும் சேர்த்து, ஆயுதப் பயிற்சி அளித்து களத்தில் போராட வைத்தப் பெருமை பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே உண்டு. வேறு எந்த நாட்டின் விடுதலை இயக்கத்திலும் பெண் போராளிகள் சேர்க்கப்பட்டதில்லை.
2009-ஆம் ஆண்டு இறுதிப்போருக்கு முன்பாக தமிழீழத்தின் பெரும் பகுதி விடுதலைப்புலிகளின் ஆட்சிக் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது. அப்போது பெரியார் அவர்களின் முக்கிய கொள்கைகளில் ஒன்றான சாதி ஒழிப்பினைச் செயல்படுத்திய பெருமை பிரபாகரனுக்கு உண்டு. விடுதலைப்புலிகள் திருமணம் செய்துகொள்ளவேண்டுமானால், சாதி மறுப்புத் திருமணம் அல்லது விதவைத் திருமணம் ஆகிய இரண்டில் ஒன்றை பின்பற்றவேண்டும் என ஆணையிட்டார்.

அவரது திருமணம்முதல் விடுதலைப்புலிகள் பலரின் திருமணங்கள் இத்தகைய புரட்சிகர திருமணங்களாகவே அமைந்தன. அவற்றைப் பார்த்த மக்களும் அவர்களைப் பின்பற்றி சாதி மறுப்புத் திருமணங்களை செய்துகொள்ள வழிவகுக்கப்பட்டது. சாதி ஏற்றத்தாழ்வுகளைக் கடைப்பிடிப்பவர்கள் மீது விடுதலைப்புலிகள் கடும் நடவடிக்கை எடுத்தனர். மேலும் பல புரட்சிகரமான சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். பெரியார் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், தனது கோட்பாடுகளைச் செயல்படுத்தி வரும் பேரன் பிரபாகரனைச் சந்தித்துப் பாராட்ட நேரில் தமிழீழம் சென்றிருப்பார் என்பதில் ஐயமில்லை.

பெரியாரைப் பற்றியோ அல்லது பிரபாகரனைப் பற்றியோ எத்தகைய புரிந்துணர்வும் இல்லாமல் அவர்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுபவர்கள் தங்களின் தகாதப் போக்கினை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். சாதி, சமய வேறுபாடுகளால் பிளவுப்பட்டுக் கிடக்கும் தமிழர்களை ஒன்றுபடுத்தவும், பகுத்தறிவுச் சமதர்மப் பாதையில் தொடர்ந்து நடக்கவும் அரும்பாடுபட்ட இரு தலைவர்களையும் கொச்சைப்படுத்தும் போக்கில் நடந்துகொள்பவர்களைத் தமிழ்கூறும் நல்லுலகம் ஒருபோதும் மன்னிக்காது என எச்சரிக்க விரும்புகிறேன்" இவ்வாறு பழ.நெடுமாறன் விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: ’பாடி கட்டாத லாரியில் லோடு ஏற்ற முடியுமா’? - விஜய் முன் உள்ள சிக்கல்...தப்ப முடியுமா?