காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (வயது 24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணி செய்து வந்தார். இளம் பெண் விக்னேஷ்வரியும், புதுக்கோட்டையைச் சேர்ந்த தீபன் (வயது 27) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
வரும் வெள்ளிக்கிழமை இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் இருந்தது. இதனால் நேற்று, விக்னேஸ்வரி வீட்டிற்கு வந்த தீபன் அவர்களது பெற்றோர்களிடம் திருமணத்திற்கு புத்தாடைகள் வாங்க தாம்பரம் செல்வதாக கூறி, விக்னேஷ்வரியை அழைத்து சென்றுள்ளார். பின்னர், புத்தாடைகளை வாங்கிக் கொண்டு இருவரும் இரவு விக்னேஸ்வரியின் வீட்டிற்கு வந்துள்ளனர்.

பின்னர் தீபன் தாம்பரத்தில் குடியிருக்கும் வீட்டிற்கு பஸ்ஸில் புறப்பட்டுள்ளார். பேருந்து மணிமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில், பேருந்தில் இருந்து இறங்கி விட்டதாகவும் , தன்னை வந்து அழைத்துச் செல்லும் படி விக்னேஸ்வரிக்கு செல்போன் மூலம் தீபன் தகவல் கொடுதுள்ளார். இதையடுத்து நேற்று இரவு அவரை அழைத்து வர விக்னேஸ்வரி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் விக்னேஷ்வரி வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் இருவரையும் தேடி உள்ளனர்.
இதையும் படிங்க: பல்லடம் மாணவி கொலையில் திடீர் ட்விஸ்ட்... திருப்பூர் எஸ்.பி. பரபரப்பு விளக்கம்...!

இந்த நிலையில், இன்று காலை விக்னேஷ்வரி ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம், கொளத்தூர் சுடுகாடு நுழைவாயில் முன்பு மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கியது போன்று இருந்துள்ளது. அங்கு பொதுமக்கள் சென்று பார்த்த போது, இருசக்கர வாகனத்திற்கு மிக அருகிலேயே விக்னேஸ்வரி தலையில் பலத்த படுகாயம் ஏற்பட்டு உயிர் இழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் அவரது பெற்றோர்கள் விக்னேஸ்வரியின் சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி., கீர்த்திவாசன் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு செங்கல்பட்டுக்கு அனுப்பினார்.

மேலும் சம்பவம் குறித்து நடத்திய முதல் கட்ட விசாரணையில், விக்னேஷ்வரியின் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு, மின்கம்பத்தில் இருசக்கர வாகன மோதி விபத்தில் உயிரிழந்தது போல சடலத்தை வீசி சென்றது தெரிந்தது. இளம் பெண்ணின் காதலன் தீபனின் செல்போன் தற்போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு அவர் தலைமறைவாக உள்ளார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

அதேபோல விக்னேஷ்வரியும், தீபன் என்பவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் கூறுகின்றனர். எனவே திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விக்னேஷ்வரியின் உறவினர்கள் யாரேனும் ஆணவ கொலை செய்தார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.
இதையும் படிங்க: மறைந்தாலும் வாழும் ரத்தன் டாடா..! வீட்டு வேலையாள் முதல் ஓட்டுநருக்காக ரூ.3.50 கோடி..!