நடிகர் சத்யராஜ் திராவிடக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தவரை அவரை வெளிப்படையாகவே ஆதரித்தவர். பின்னர் திராவிடக் கொள்கைகளை மட்டுமே தூக்கிப் பிடித்து வருகிறார். என்றாலும் திமுகவுடன் நெருக்கமாகவே இருந்து வருகிறார். சத்யராஜைப் போலவே அவருடைய மகள் திவ்யாவும் திராவிடக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்தான். திமுக ஆட்சியை வெளிப்படையாகவே ஆதரித்து வந்தார். இந்நிலையில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திவ்யா இன்று திமுகவில் இணைந்துள்ளார்.
இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக முதல்வர், கழகத் தலைவர் முன்னிலையில், இன்று (19.1.2025) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் திமுக.வில் இணைந்தார்.
அப்போது, கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று திமுக இலக்கு நிர்ணயித்துள்ளது. எனவே அதற்கேற்ப வியூகங்களை திமுக வகுத்து வருகிறது. அதில் திமுகவுக்கு ஆதரவாக பிரபலங்களைக் களமிறக்குவதும் ஒன்று. அந்த வகையில் ஆண்டின் தொடக்கத்திலேயே நடிகர் சத்யராஜின் மகள் திமுகவில் இணைந்துள்ளார். அடுத்தடுத்த மாதங்களில் மேலும் பிரபலங்கள் திமுகவில் இணைவார்கள் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் பிரசாரம் செய்யவிடாமல் அராஜகம்.. திமுக மீது நாம் தமிழர் சரமாரி புகார்