தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஒருபோதும் ஏற்க முடியாது என நாடாளுமன்றத்தில் திமுக எம்பி கனிமொழி பேச்சு; திமுக எம்பிக்கள் நாகரிகம் தெரியாதவர்கள் என தர்மேந்திர பிரதான் பேசியதற்கு எதிர்ப்பு திமுகவினர் நேர்மை இல்லாதவர்கள் என பேசியதை தர்மேந்திர பிரதான் திரும்ப பெற்றார்.

இன்றைய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின் போது, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பி.எம். ஷ்ரீ திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். மத்திய, மாநில அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளை வலுப்படுத்தும் இத்திட்டத்தில் தமிழக அரசு மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தெரிவித்தார். இதற்கு மத்திய அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திட வேண்டும், அதில் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ செயல்படுத்துவது அடங்கும். “தமிழக அரசு முதலில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டது. ஆனால் இப்போது அவர்கள் நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர். கர்நாடகா, ஹிமாச்சல் பிரதேஷ் உள்ளிட்ட பாஜக ஆளாத பல மாநிலங்கள் இதில் ஒப்பந்தம் செய்துள்ளன,” என்று அவர் கூறினார்.
“அவர்கள் நேர்மையற்றவர்கள், தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்கிறார்கள். அரசியல் செய்கிறார்கள்,” என்று பிரதான் கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: திமுக அரசு மாணவர்களின் எதிர்காலத்தை கெடுத்து, நாசமாக்குகிறது... தர்மேந்திர பிரதான் ஆவேசம்..!

அதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய கனிமொழி ” தமிழகம் எப்போதும் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ளாது என்பதை இந்த நேரத்தில் தெளிவாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எந்த நேரத்திலும் திமுக எம்பிக்கள் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்லவில்லை. தமிழ்நாடு எம்பிகளையும், தமிழக மக்களையும் நாகரிகமற்றவர்கள் என அமைச்சர் பேசியது மிகவும் வருத்தம் அளிக்கிறது” என பேசினார்.

மத்திய அமைச்சரின் இந்த பேச்சைக் கண்டித்து, கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஓம் பிர்லா, அமைதியாக இருக்குமாறும், சபையை இயல்பாக செயல்பட அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டார். ஆனால், திமுக உறுப்பினர்கள் அவரது வேண்டுகோளை புறக்கணித்து, தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து, சிறிது நேரம் கழித்து பிர்லா சபையை பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்.
அதனைத்தொடர்ந்து பேசிய தர்மேந்திர பிரதான் “என்னுடைய பேச்சு வருத்தமளித்துள்ள காரணத்தால் நான் இந்த நேரத்தில் அதனை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்” என எதிர்ப்புகள் கிளம்பியவுடன் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டை பழி வாங்குகிறது மத்திய அரசு..! தமிழச்சி தங்கபாண்டியன் பகிரங்க குற்றச்சாட்டு..!