குவாரி பொருட்கள், எம்.சாண்ட், கிராவல், கல் உள்ளிட்ட கட்டுமானங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் விலையை முறைப்படுத்த உத்தரவிட கோரி வழக்கில் தமிழக கனிம வளத்துறையின் முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை கந்தசாமி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் அரசின் கட்டுமான பணிகள் தொடர்பான டெண்டரில் தொடர்ச்சியாக பங்கெடுத்து வருகிறேன். மிகக் குறைவான தொகையில் கட்டிடப் பணிகளை முடித்துக் கொடுக்க முன்வரும் நிறுவனத்திற்கே ஒப்பந்தம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ஆனால் கட்டுமான பணிகளுக்கான மூலப் பொருட்களின் விலை மிக அதிக அளவில் இருப்பதால் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சமீபத்தில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட எம்.சாண்ட் உரிமையாளர்கள் யூனிட்டற்கு 2000 ரூபாய், ஜிஎஸ்டியோடு சேர்த்து 5,000 ரூபாய் விலையை உயர்த்தியுள்ளனர். எம்.சாண்ட் மட்டுமல்லாமல் கிராவல், கல் போன்றவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: சதுரகிரி செல்லுவோருக்கு பறந்த அதிரடி உத்தரவு… மீறினால் கைது!!

இதனால் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாயுள்ளனர். ஆகவே இவற்றை முறைப்படுத்தக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆகவே, சுரங்கக் குவாரி பொருட்கள் உலோகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை முறைப்படுத்துவதற்காக மாநில அளவிலான குழுவை உடனடியாக அமைக்கவும், ஏலம் எடுத்தவர்களுக்கு உதவும் வகையில், விலை உயர்வு குறித்து முன்கூட்டியே அறிவிப்பை வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு, "வழக்கு தொடர்பாக தமிழக கனிம வளத்துறையின் முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ஜாக்டோ ஜியோ போராட்டம்... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!