மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடித்த வன்முறைக்கு நடிகர் விக்கி கவுசால் நடித்த சாவா (Chhaava) திரைப்படத்தை பார்த்து மக்கள் கொந்தளித்ததே காரணம் என்று முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.

அவுரங்கபாத்தில் (சத்ரபதி சாம்பாஜி நகர்) உள்ள முகலாய மன்னர் அவுரங்கசீப் கல்லறையை மாநிலத்தைவிட்டு வேறு இடத்துக்கு அப்புறப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி விஸ்வ இந்து பரிசத், பஜ்ரங் தளம் தொண்டர்கள் நேற்று நாக்பூரில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். அவுரங்கசீப் உருவபொம்மையையும் எரித்து எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதையடுத்து, மற்றொரு தரப்பினரும் போராட்டம் நடத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதையும் படிங்க: அவுரங்கசீப் சமாதியை இடிக்க கோரி போராட்டம்.. போர்க்களமான நாக்பூர்.. திரைப்படத்தால் எழுந்ததா சர்ச்சை..?
பாரதிய நாகரிக் சுரக்ஸா சன்ஹிதா சட்டத்தின் கீழ் 163 பிரிவில் மாநிலத்தில் கோட்வாலி, கணேஷ்பேட், லகாட்கானி, பச்போலி, சாந்திநகர், சகர்தாரா, நந்தவனம், இமான்வாடா, யசோதாநகர், கப்லிநகர் ஆகியவற்றில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் கலவரத்தில் ஏராளமான வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன, 15 போலீஸார் உள்ளிட்ட ஏராளமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் ஊடகங்களுக்கு இன்று பேட்டியளித்தார் அப்போது கலவரத்துக்கான காரணம் குறித்து அவர் கூறுகையில் “ நாக்பூரில் கலவரம் என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. வலதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த சிலர் மத நூலை எரித்துவிட்டதாக வதந்தி பரவியதற்கு பின்புதான் கலவரம் ஏற்பட்டது.
இந்த கலவரத்தில் குறிப்பிட்ட சிலரின் வீடுகள், கடைகள், வர்த்தகநிறுவனங்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே சதித்திட்டம் போல் தெரிகிறது. நடிகர் விக்கி கவுசால் நடத்த மகாராஜா சிவாஜி மகன் வரலாற்றை சொல்லும் சாவா திரைப்படத்தைப் பார்த்தபின், முகலாய அரசர் அவுரங்கசீப் மீது மக்களுக்கு கோபம், ஆத்திரம் அதிகரித்தள்ளது. மக்களின் கோபத்தை இந்த திரைப்படம் தூண்டியுள்ளது.

மக்கள் திரைப்படத்தைப் பார்த்தபின் அவர்களின் உணர்ச்சிகள் கொந்தளித்தன, அவுரங்கசீப் மீது மக்களுக்கு கோபம் பெரிய அளவில் எழுந்தது. ஆனால், மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் எனக் கேட்கிறேன். அமைதியை கொண்டுவருவற்கும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக காவல் ஆணையரிடமும் பேசிவிட்டேன்” எனத் தெரிவித்தார். உத்தவ் சிவசேனா கட்சியின் தலைவர் ஆதித்யா தாக்ரே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் வன்முறைக்குப்பின் ஆளும் பாஜக அரசு, மாநிலத்தை மற்றொரு மணிப்பூராக மாற்ற முயல்கிறது” என விமர்சித்தார்.

ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி எம்பி. மனோஜ் குமார் ஜா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “ஒட்டுமொத்த தேசமும் தனக்குத்தானே சவக்குழி தோண்டுவதில் மும்முரமாக இருக்கிறது. யார் அப்படிச் செய்ய வைக்கிறார்கள்? 2014 ஆம் ஆண்டு, பிரதமர் மோடி செங்கோட்டையில் பேசும்போது, இதுபோன்ற சர்ச்சைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியது எனக்கு நினைவிருக்கிறது. இதற்கு பெயர் என்ன தடையா? உங்கள் சொந்த மக்களுக்கு எதையும் பேச சுதந்திரம் அளித்துள்ளீர்கள். இன்று எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து எந்த விவாதமும் இல்லை” என கடுமையாகச் சாடினார்.
இதையும் படிங்க: #BIGBREAKING: நாக்பூரில் வெடித்த பெரும் வன்முறை; தீ வைத்து எரிக்கப்பட்ட வாகனங்கள்; போலீசார் குவிப்பு