தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழகம் இன்றைக்கு மிகப் பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஆகவே, வருகிற மார்ச் 5-ம் தேதி, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த இருக்கிறோம். நாடு முழுவதும் இருக்கிற மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரித்தால், தமிழகத்தில் 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும். அதாவது, இனி தமிழகத்துக்கு 39 எம்.பி.க்கள் இருக்க மாட்டார்கள். 31 எம்.பி.க்கள்தான் இருப்பார்கள்.

இன்னொரு முறையில் கணக்கிட்டுப் பார்த்தால், நாட்டில் ஒட்டுமொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்தி, அதற்கேற்ப பிரித்தாலும், நமக்கு இழப்புதான் ஏற்படும். நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்துவிடும். அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவமும் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு குறைந்த பிரதிநிதித்துவமும் கிடைக்கும். இதனால் தமிழகத்தின் குரல் நசுக்கப்படும். இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பற்றிய கவலை அல்ல. நம் மாநிலத்தின் உரிமையைச் சார்ந்தது” என ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
முதல்வர் ஸ்டாலினின் கருத்துக்கு கோவையில் நேற்று பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "தொகுதி மறுசீரமைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெளிவாக கூறியுள்ளார். விகிதாச்சார அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்றும், தென்னிந்திய மாநிலங்கள் உள்ளிட்ட நாட்டில் எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு ஏற்படாது என்றும் உறுதியளித்துள்ளார். திமுக முதல்வர் தவறான தகவல்களை தெரிவித்து மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார்" எனப் பதிலடிக் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், அமித் ஷாவின் விளக்கம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உறுதிமொழி நம்பகத்தன்மை இல்லாதது. தவறாக வழிநடத்தக் கூடியது. துல்லியமான தகவல் இல்லாததன் காரணமாக அவர் இவ்வாறு பேசியிருக்கலாம் அல்லது கர்நாடகம், தெலங்கானா, தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா ஆகிய மாநிலங்களைக் குறைத்து மதிப்பிடும் முயற்சியாகவும் இருக்கலாம்.
பாஜகவின் ஆதிக்கத்தை இந்த மாநிலங்கள் எதிர்ப்பதால், தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் செல்வாக்கை பலவீனப்படுத்த மத்திய அரசு தொகுதி மறுவரையறையை ஒரு கருவியாகப் பயன்படுத்த விரும்புகிறது. முந்தைய தொகுதி மறுவரையறைப் பணிகள், 1971 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு நியாயம் அளிப்பதாகவும், தென் மாநிலங்களின் வளர்ச்சி முயற்சிகளை அங்கீகரிப்பதாகவும் இருந்தது. எனவே, தொகுதி மறுவரையறையை மத்திய அரசு மேற்கொள்ளக் கூடாது. தற்போது உள்ள அளவை அப்படியே தொடர வேண்டும்” என அறிக்கையில் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சீனாவுக்கு வரி செலுத்தும் இந்தியா... மக்களவையில் பகீர் கிளப்பிய ராகுல் காந்தி..!