''பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்றால், விஜய் முன்மொழியும் மாற்று இடம் எது? என்பதையும் அவர் கூற வேண்டும்''என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
முழு தமிழ்நாடும் புதிய விமான நிலையம் வேண்டும் என்பதை விரும்புகிறது. பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்றால் விஜய் முன் மொழியும் மாற்று இடம் எது? என்பதையும் அவர் கூற வேண்டும்.நிலம் எடுப்பது முழுவதும் மாநில அரசு தொடர்புடையது என்பதால் மாநில அரசிடம் அவர் தனது பரிந்துரைகளை தெரிவிக்க வேண்டும்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மற்ற நகரங்களை ஒப்பீடு செய்யும் போது சென்னை விமான நிலையில் இட நெருக்கடி நிறைந்த விமான நிலையமாக உள்ளது. டெல்லி மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்கள் 5 ஆயிரம் ஏக்கரிலும், பெங்களூரு விமான நிலையம் 4 ஆயிரம் ஏக்கரிலும் அமைந்து உள்ளது. ஆனால் சென்னை விமான நிலையம் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில்தான் உள்ளது. எனவே இது மிகவும் இட நெருக்கடி நிறைந்த விமான நிலையம். தற்போது சென்னை விமான நிலையத்தை ஆண்டுக்கு 2.5 கோடி பேர் பயன்படுத்துகின்றனர்.
இதையும் படிங்க: பொய்த்துப்போன எதிராளிகளின் அரசியல் கணக்கு... மீண்டும் தமிழக பாஜக தலைவராகும் அண்ணாமலை..!
அடுத்த 10 ஆண்டுகளில் இது 10 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில்தான் சென்னைக்கு புதிய விமான நிலையம் வேண்டும் என்பதை முழு தமிழ்நாடும் எதிர்பார்க்கிறது.பரந்தூரை தேர்வு செய்தது யார்? இதில் நிலத்தை தேர்வு செய்வது மாநில அரசை சார்ந்து உள்ளது. 2016ஆம் ஆண்டில் எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோதே சென்னைக்கு பசுமை விமான நிலையம் வேண்டும் என்பதை வலியுறுத்தியது. 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் விமான நிலையம் அமைப்பதற்கு பரந்தூர் உட்பட சாத்திக்கூறுகள் உள்ள இடங்களை ஆய்வு செய்தது.

திமுக அரசு வந்த பிறகு மத்திய அரசுக்கு 2 இடங்களை காண்பித்தது. அதன் பிறகே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக முடிவு செய்யப்பட்டது. சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைக்கு அருகே பரந்தூர் அமைந்து உள்ளதே விமான நிலையம் தேர்வு செய்யப்பட காரணமாக அமைந்தது.நிலம் நிலம் கையப்படுத்துவது என்பது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இருகட்சிகளும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டு உள்ளனர். இத்திட்டத்தில் 51 சதவீத பங்கை மத்திய அரசு வகிக்கிறது. தமிழ்நாடு வளர வேண்டும் எனில் சென்னைக்கு புதிய விமான நிலையம் கட்டுவது அவசியம். இந்த விவகாரத்தில் தனது கருத்துக்களை மாநில அரசிடம்தான் விஜய் வைக்க வேண்டும். தேர்வு செய்த நிலத்தை மறு ஆய்வு செய்வது குறித்து மாநில அரசுதான் மத்திய அரசிடம் சொல்ல வேண்டும்.2014ஆம் ஆண்டு மோடி பதவிக்கு வரும் போது இந்தியாவில் வெறும் 73 விமான நிலையங்களே இருந்தது. தற்போது இந்தியாவில் 158 விமான நிலையங்கள் உள்ளன.

தமிழ்நாட்டுக்கு கூடுதல் விமான நிலையங்கள் தேவைப்படுகிறது. இல்லை எனில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தமிழ்நாட்டால் எட்ட முடியாது. வேறு எந்த இடம் என்பதை சொல்லுங்கள், பரந்தூருக்கு சென்று மக்களை சந்திக்கும் விஜய், இவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். இல்லை எனில் விமான நிலையம் கட்டுவதற்கான மாற்று இடத்தையும் விஜய் குறிப்பிட வேண்டும். ஒரு அரசியல் தலைவர் ‘எனக்கு இது வேண்டாம்’ என்று எளிதில் சொல்லிவிட முடியாது. அதற்கு மாற்று என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு பசுமை விமான நிலையம் வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு பாஜகவின் நிலைப்பாடு. ஆனால் நிலம் தேர்வு செய்யப்பட்டது என்பது தமிழக அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது'' என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் டாஸ்மாக் மட்டும்தான் சக்சஸ்.. திமுக அரசின் தோல்விகளைப் பட்டியலிட்ட அண்ணாமலை!