தற்போது டெபாசிட்களுக்கான காப்பீடு ரூ.5 லட்சமாக இருக்கும் நிலையில் இந்த மாத இறுதிக்குள் மத்திய அரச குறைந்தபட்சமாக ரூ.8 முதல் ரூ.12 லட்சம்வரை உயர்த்தி அறிவிக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பட்ஜெட் குறித்த கலந்தாய்வில் மத்திய நிதிச் சேவை செயலாளர் எம். நாகராஜூ “மணி கன்ட்ரோல்” இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் “வங்கிகளில் மக்கள் வைத்திருக்கும் டெபாசிட்களுக்கான காப்பீட்டை ரூ.5 லட்சத்திலிருந்து உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த காப்பீடு தொககை ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை அதிகரிக்கலாம்” எனத் தெரிவித்தார்.

நியூ இந்தியா கூட்டுறவு வங்கி ஆர்சிபி மூலம் துறைரீதியான நடவடிக்கை எடுத்தப்பின்புதான் டெபாசிட்களுக்கான காப்பீடு தொகையை உயர்த்த சரியான நேரம் என மத்திய அரசு கருதியது. நியூ இந்தியா கூட்டுறவு வங்கி மக்களின் பணத்தை மோசடி செய்து ரூ.122 கோடி ஊழல் செய்தது. இதற்கு காரணமாக கூட்டுறவு வங்கி மேலாளர், துணையாக இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். கூட்டுறவு வங்கி நிர்வாகத்தை கையில் எடுத்த ரிசர்வ் வங்கி, புதிய கடன் வழங்கவோ, டெபாசிட்களை திரும்பப் பெறவோ தடை செய்துள்ளது. ரிசர்வ் வங்கி சார்பில் நடத்தப்படும் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உறுதியளிப்பு கழகம்(டிஐசிஜிசி) தான் வங்கிகள், கிராம வங்கிகள், கூட்டுறவு வங்கிகளின் டெபாசிட்களுக்கு காப்பீடு செய்துள்ளது.
இதையும் படிங்க: பிப்ரவரி மாதத்தில் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - முழு லிஸ்ட் இதோ!

டெபாசிட் காப்பீடு என்றால் என்ன?
வைப்புத் தொகை காப்பீடு என்பது, வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வங்கியில் செய்துள்ள டெபாசிட்களை பாதுகாக்க செய்யப்படும் காப்பீடாகும். வங்கிகள் திடீரென திவாலானாலோ அல்லது பணிமில்லாமல் நிர்வாக சீர்குலைவு ஏற்பட்டாலோ வாடிக்கையாளர்களுக்கான டெபாசிட் பணத்தை திரும்பக் கிடைக்க ரிசர்வ் வங்கி மூலம் காப்பீடு செய்வதாகும். இந்த வைப்புத்தொகை காப்பீடு என்பது வாடிக்கையாளர்கள் டெபாசிட், சேமிப்புக் கணக்கு, வைப்புத் தொகை, நடப்புக்கணக்கு, ரெக்கரிங் டெபாசிட் ஆகியவற்றுக்குப் பொருந்தும். ஆனால், மத்திய, மாநில அரசுகள், வங்கிகளுக்கு இடையிலான டெபாசிட்களுக்கு பொருந்தாது.
இதற்கு முன் வங்கி வாடிக்கையாளர்கள் அல்லது மக்களின் சேமிப்புக் கணக்கு, டெபாசிட்களுக்கான காப்பீடு அதிகபட்சம் ரூ.5 லட்சமாக இருந்தது. இந்த காப்பீடு தொகை வங்கிகளுக்கு வங்கி மாறுபடும். இதற்கு முன் வங்கி டெபாசிட்களுக்கான வைப்புத்தொகை ரூ.ஒரு லட்சமாக இருந்தநிலையில் 2020ம் ஆண்டில் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக காப்பீடு தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. இனிமேல் மக்களின் வங்கி சேமிப்பு, வைப்புத்தொகை உள்ளிட்டவற்றுக்கான காப்பீடு தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சம் அல்லது ரூ.12 லட்சம் வரை உயர்த்தி மத்திய அரசு இந்த மாத இறுதியில் அறிவிக்கலாம் எனத் தெரிகிறது.

இந்தியாவில்தான் டெபாசிட்தாரர்கள் பணத்துக்கு காப்பீடு ரூ.5 லட்சம் செய்யப்படுகிறது, ஆனால் மெக்சிக்கோ, துருக்கி, ஜப்பான் நாடுகளில் 100 சதவீதம் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் ஒருவர் வங்கியில் ரூ.25 லட்சம் வைப்புத்தொகை வைத்திருக்கும்போது, திடீரென வங்கி திவாலாகினால், வங்கியில் தீவிபத்து ஏற்பட்டாலோ அல்லது நகைகள் திருடுபோனாலோ அல்லது வங்கியில் நிர்வாகக் குளறுபடியானாலோ அந்த வாடிக்கையாருக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம்தான் கிடைக்கும். அதாவது ரூ25 லட்சம் டெபாசிட் செய்தவருக்கு காப்பீடு தொகை ரூ.5 லட்சம்தான் கிடைக்கும். 2020ம் ஆண்டுக்கு முன்பாக காப்பீடு தொகை ரூ.ஒரு லட்சமாக மட்டுமே இருந்தது. இப்போது இந்த காப்பீடு தொகையை ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சமாக உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இதையும் படிங்க: 350 ரூபாய், 5 ரூபாய் புதிய நோட்டுகள் வெளி வருகிறதா? 200 ரூபாய் நோட்டு செல்லாதா? ரிசர்வ் வங்கி விளக்கம்