பாம்பனையும் ராமேஸ்வரத்தையும் இணைக்கும் கடல் வழியாக இணைக்கும் புதிய பாம்பன் பாலம் ரூ.550 கோடி செலவில் கட்டப்பட்டது. அந்தப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த விழாவில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார். நீலகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்க இருந்ததால், தன்னால் பாம்பன் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்க இயலவில்லை என்றும், அதை பிரதமர் மோடியிடம் ஏற்கெனவே தெரிவித்துவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இலங்கையில் வெற்றிகரமான அரசு பயணத்திற்குப் பிறகு தமிழகம் வந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று ரூ.545 கோடி செலவில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் ரயில்வே செங்குத்து தூக்குப் பாலத்தை, பாம்பனில் திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாட்டில் ₹8,300 கோடி மதிப்பில், பல்வேறு ரயில் மற்றும் சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கியும் வைத்தார்.

இந்த மிக முக்கியமான நிகழ்வில் கலந்து கொள்வதற்கு பதிலாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு விழா என்று ஒரு சாக்கு போக்கு கூறி, விடுமுறையை கொண்டாட நீலகிரிக்குச் சென்றிருக்கிறார். திமுகவைப் பொறுத்தவரை, நமது மாநிலத்தின் வளர்ச்சியைவிட, தனது சுயநல அரசியலுக்கே முன்னுரிமை கொடுத்து வருகிறது. இந்த எதேச்சதிகாரப் போக்கு, வரும் 2026 ஆண்டு, திமுகவை நிச்சயம் வெளியேற்றும். தமிழக மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: வியக்க வைக்கும் புதிய பாம்பன் பாலம்.. ஒரு பொறியியல் அதிசயம்.. ரயில்வே அமைச்சர் புகழாரம்.!!

வரும் 2026 ஆம் ஆண்டில், திமுகவின் விளம்பர அரசியலையும், அலட்சியப் போக்கையும் தவிர்த்து, தமிழகத்தின் முன்னேற்றத்தையும், திறமையான தலைமையையுமே தேர்ந்தெடுப்பார்கள். மு.க. ஸ்டாலின் அவர்களே, தமிழகத்தில், மாற்றத்திற்கான நேரம் தொடங்கிவிட்டது." என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாம்பன் பால திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்..? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!