ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்.5 இல் நடைபெற உள்ள நிலையில், திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில்,"திமுக எத்தனையோ இடைத்தேர்தல்களைச் சந்தித்துள்ளது. தற்போது நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எதிர்பாராதவகையில் மனதில் சுமையுடன் எதிர்கொள்ள வேண்டிய களமாக அமைந்துவிட்டது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் இங்கு திமுக கூட்டணி சார்பில் வென்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈவெரா.திருமகன் மரணமடைந்ததைத் தொடர்ந்து, 2023இல் நடந்த இடைத்தேர்தலில் அவரது தந்தையான ஈவிகேஎஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றார். கடந்த டிசம்பர் மாதம் அவர் உயிரிழந்ததால் இந்த இடைத்தேர்தலை சந்திக்கிறோம்.

இம்முறை திமுக போட்டியிட வேண்டுமென கட்சியினர் விரும்பியது மட்டுமின்றி, அரசியல் சூழலை நன்குணர்ந்த காங்கிரஸும் தீர்மானித்து அறிவித்ததை தொடர்ந்து, திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் களமிறங்கியுள்ளார். அமைச்சர் முத்துசாமி தலைமையில் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வீடு வீடாகச் சென்று திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து வாக்கு சேகரித்து வருகின்றனர். அரசின் சாதனை திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்றிருப்பதால், தங்கள் வாக்கு உதயசூரியனுக்கே என்று வாக்காளர்கள் உறுதியளித்து வருகின்றனர்.
திமுக ஆட்சியில் ஈரோடு மாவட்டத்தின் நலன்சார்ந்த பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாவட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையிலும், மாவட்டத்தின் சிறப்புமிக்க நெசவுத் தொழில், வணிகம் ஆகியவை வளர்ச்சி பெறும் வகையிலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. திமுக அரசு மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையையும், ஆதரவையும் எப்படியாவது சிதைக்க வேண்டும் என்று தினமும் எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்பினாலும், அவை மக்கள் மன்றத்தில் எடுபடுவதில்லை.
இதையும் படிங்க: சீமானை விடாமல் விரட்டும் பெரியார் மண்... சாட்டை துரைமுருகன், சீதாலட்சுமி உட்பட 7 பேருக்கு ஆப்பு!

திமுக வேட்பாளரை எதிர்க்க முடியாமலும், மக்களை சந்திக்கும் வலிமையில்லாமலும் அதிமுக, பாஜக கட்சிகள் வழக்கம்போல அவதூறான குற்றச்சாட்டுகளை சொல்லி, இடைத்தேர்தலைப் புறக்கணித்துள்ளன.
திமுகவை நேரடியாக எதிர்க்கும் துணிவின்றி சில உதிரிகளை தூண்டிவிட்டு, மறைமுக யுத்தம் நடத்திப் பார்க்கின்றன. வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கு பிப். 5-ம் தேதியன்று உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை அளித்து மகத்தான வெற்றியை அளிக்குமாறு மக்களை விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
நம்மை வழிநடத்தும் தலைவர் பெரியார் பிறந்த மண்ணில் நடைபெறும் இடைத்தேர்தலில், நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்ணாக நமது தொடர் வெற்றி அமையட்டும். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கு கட்டியம் கூறும் வகையிலும், ‘வெல்வோம் 200 - படைப்போம்’ வரலாறு என்பதற்கு முன்னோட்டமாகவும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் மாபெரும் வெற்றியை எதிர்நோக்குகிறேன்." என்று கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நாம் தமிழர் கட்சியைத் தடை செய்ய வேண்டும்... தேர்தல் ஆணையத்துக்குப் பறந்த மனு..!